இதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக சாகும் வரை பட்டினிப்போராட்டம்

பத்து மலை வட்டாரத்தில் இந்தியர்களின் பாரம்பரிய குடியிருப்புப் பகுதியான இந்தியன் செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கின்ற 50-க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் எதிர்நோக்கும் நில விவகாரம் தொடர்பாக நாளை ஜூலை 30, புதன்கிழமை பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு சமர்ப்பிக்க இருப்பதாக இந்தியன் செட்டில்மெண்ட் நில விவகார நடவடிக்கை குழுத் தலைவர் சேரன் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக் கணக்கில் நீடிக்கும்இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் அணி திரண்டு கோரிக்கை மனுவை வழங்குவதற்காக கடந்த வாரம் பிரதமர் துறை அலுவலகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 2:00 மணி அளவில் தன்னுடைய தலைமையில் முக்கியமான பொறுப்பாளர்கள் குடியிருப்பாளர்கள் என 30 பேர் ஒன்று திரண்டு கோரிக்கை மனுவை சமர்ப்பிக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள சேரன் மலேசியாவில் மலாக்கா செட்டிக் குடியிருப்பிற்கு அடுத்து சிலாங்கூரில் அமைந்துள்ள இந்த பத்துமலை இந்தியன் செட்டில்மென்ட் குடியிருப்புப் பகுதி நீண்ட பாரம்பரியத்தை கொண்ட குடியிருப்புப் பகுதியாகும்.

இங்கு வசிக்கின்ற 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்றாவது நான்காவது தலைமுறையை எட்டியுள்ள நிலையில் இப்பொழுது இங்கு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்கிறோம் என்ற பெயரில் இங்கு சட்டப்படியும் சொந்த பட்டா நிலத்திலும் வசிக்கின்ற குடிமக்களை இடம்பெயர்ந்து பத்து ஆராம் காட்டுப் பகுதிக்கு செல்லும்படி வற்புறுத்துவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
இந்தச் சிக்கல் தொடர்பில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மந்திரிபெசாருமான(முதலமைச்சர்) டத்தோஸ்ரீ அமீருடன் ஷாரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
கடந்த ஆண்டு தீபாவளி சமயத்திலும் இந்த ஆண்டு பொங்கல் விழாவின்போதும் இந்த விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்த அமரின் வாக்குறுதி, இன்றுவரை வெற்று வாக்குறுதியாக இருக்கிறது
இந்த மக்களின் வாழ்வாதாரம் குறித்து அடியோடு கவலைப்படவில்லை என்றும் இந்த குடும்பங்களின் சார்பில் வருத்தமும் வேதனையும் தெரிவிக்கப்படுகிறது என்றார் சேரன்.
நான்காவது ஐந்தாவது தலைமுறையை எட்டிவிட்ட இந்தக் குடும்பங்கள் தொடர்ந்து இந்த பகுதியிலேயே அமைதியாக வாழ்கின்ற நிலையில், திடீரென்று பத்து ஆராம் காட்டுப் பகுதிக்கு ஏறக்குறைய 40 கிலோமீட்டர் தொலைவிற்கு அனுப்பினால் அங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் எப்படி அங்கு செல்வது? எவ்வாறு வாழ்வது?

இந்த விவகாரத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய பிரதிநிதியுமான வீ. பாப்பா ராயுடுவும் இந்தச் சிக்கல் குறித்து கண்டு கொள்ளவில்லை என்பது இன்னும் வேதனைக்குரியது.
ஏறக்குறைய 200 பேருக்கான வேலைவாய்ப்பு பள்ளி கல்வி வாய்ப்பு உள்ளிட்ட அத்தனையும் இந்த பகுதியை சுற்றி அமைந்து விட்டு நிலையில் இங்கிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்றால் வாழ்க்கை அடியோடு கட்டுக் குலைந்துபோகும்; புதிதாக வேலை வாய்ப்பு தேட வேண்டும்; பள்ளி செல்லும் பிள்ளைகளின் நிலை இன்னும் மோசமாக ஆகிவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏறக்குறைய 200 பேரின் அடிப்படை வாழ்க்கையைப் பற்றி மாநில அரசு அடியோடு கவலைப்படாத நிலையில் நாங்களும் ஆண்டுக் கணக்கில் போராடி, சோர்ந்து ஓய்ந்து விட்ட நிலையில் கடைசி முயற்சியாக நாளை ஒற்றுமை அரசாங்கத்திடம் கடைசி கோரிக்கை மனுவை கொடுக்க இருப்பதாக சேரன் தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த ஒற்றுமை அரசாங்கம் அமைதியாக வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையை சீர்குலைப்பதுதான் மறுமலர்ச்சியின் அடையாளமா?
மிகவும் ஒதுக்குப்புறமான இந்தப் பகுதியில் அமைதியாக வாழ்கின்ற மக்களுக்கு இப்படி இடையூறு செய்வதும் அலைகழிப்பதும் அல்லல் படுத்துவதும் குறித்து பெரும்பாலான தலைவர்களும் கட்சிகளும் அக்கறைப்படாத நிலையில் தாங்களே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நாளை புத்ராஜெயா பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்குவதுதான் தங்களின் கடைசி முயற்சி என்றும் இதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் இந்த குடியிருப்பாளர்கள் அனைவரும் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை மேற்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று சேரனும் அவரின் தலைமையிலான குழுவினரும் வருத்தத்துடன் சமுதாயத்திற்கும் மாநில – மத்திய அரசுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றனர்.


