Wednesday, April 15, 2026

கோயில்களில் இந்து தர்ம வகுப்புகள் அவசியம்: -ரிஷிகுமார் வலியுறுத்தல்!

ரிஷிக்குமார் வடிவேலு

இந்து சமூகத்தில் நிலவும் பல்வேறு சமூகச் சிக்கல் களையப்பட வேண்டும் என்றால் அனைத்து இந்து மாணவர்களுக்கும் இள வயது முதல் அடிப்படை இந்துதர்ம கல்வி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்து தர்ம வகுப்புகள் கோயில்களிலும் பல்வேறு பொது இடங்களிலும் பரவலாக நடத்தப்பட வேண்டும் என்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு வலிறுத்தினார்.

ஜூலை 26, 27ஆம் நாட்களில் காலை 8:00 முதல் மாலை 5:30 மணி வரை ரவாங் 16-ஆவது மைல், அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் 2 நாள் இந்துதர்ம ஆசிரியர் பயிலரங்கு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கின் நிறைவு விழாவில் இந்து தர்ம மாமன்ற தேசியத் தலைவர் ரிஷிகுமார் உரையாற்றினார்

இந்து தர்ம பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட நோக்கம், மாணவர்களை முறையாக அடையும் வகையில் இந்து தர்ம வகுப்புகள் நடைபெற்றன.

நன்கு திட்டமிடப்பட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையிலும் கற்றல் கற்பித்தல் பயிற்று முறைமைகளையும் மகிழ்வூட்டும் பல்வேறு அணுகுமுறைகளையும் கையாள ஆசிரியர்களுக்கு இப்பயிலரங்கில் பயிற்சி வழங்கப்பட்டதாக ரிஷிக்குமார் தெரிவித்தார்.

இந்தப் பயிலரங்கில் சிலாங்கூர், கிளந்தான், ஜொகூர் ஆகிய மாநிலங்களிலிருந்து 30 சமய ஆசிரியர்கள் பங்கேற்றனர். மலேசிய இந்து தர்ம மாமன்றம் தயாரித்துள்ள இந்து தர்ம பாடத்திட்டம், ஆசிரியர் கையேடு, இந்து தர்ம பயிற்சி மாணவர்களுக்கான ஆறு இந்து தர்ம பாட நூல்கள் முதலியவை பற்றி பயிலரங்கில் கலந்துகொண்ட சமய ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த ஆவணங்களைக் கொண்டு எளிமையான முறையில் சமயத்தை மாணவர்களுக்கு கற்பிக்கும் பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. இந்துதர்ம கோட்பாடுகள், கடவுள் கொள்கை முதலிய தலைப்புகளில் மட்டுமின்றி ஆசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வகுப்புகளை முறையாக நடத்தும் முறைமைகளைப் பற்றிய விரிவுரைகளும் பயிலரங்கில் இடப்பெற்றன.

மாமன்றத்தின் ஆலோசகர் அ.இராதாகிருஷ்ணன், கல்விக் குழுத் தலைவர் சுப்பிரமணி சோனையா, துணைத் தலைவர் ஏ கே ரமேஷ் தேசிய பொதுச்செயலாளர், ஹரி பிரகாஷ் சந்திரன் ஆகியோர் இந்த பயிலரங்கை வழி நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இப்பயிலரங்கு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் இட வசதியுடன் உணவும் வழங்கி ஆதரவு நல்கினர்.

ஆலயத்தின் தலைவரும் துணைத் தலைவரும்கூட இந்த பயிலரங்கில் பங்கேற்றனர்;

சுற்று வட்டார இந்து மக்களிடம் சமய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இத்தகைய பயிலரங்கை ஆலயத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதன் தலைவர் மகேந்திரன் முத்து நன்றி தெரிவித்தார்.

இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தங்கள் வசிப்பிடங்களில் இந்து தர்ம வகுப்புகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய ரிஷிக்குமார், தானும் இது போன்ற சமயப் பணிகளில் தொடர்ந்து ஆழமாக ஈடுபட்டு வருவதற்கு இத்தகைய பயிலரங்குதான் தொடக்கப் புள்ளியாக இருந்ததாகக் குறிப்பிட்டார்

இந்து தர்ம கல்வி மாணவர்களை சென்றடைய இந்து தர்ம வகுப்புகள் பரவலாக நடத்தப்பட வேண்டும்; அதற்கு ஏதுவாக இந்து தரும ஆசிரியர்கள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும். இதனையே தார்மீக நோக்கமாகக் கொண்டு மாமன்றம் கடந்த 43 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது; மாமன்றத்தின் ஆலோசகர் இராதாகிருஷ்ணன் அழகுமலை, இந்து தர்மக் கல்வி தேசிய துணைக் குழுத் தலைவர் சுப்ரமணியன் சோனையா, ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலிலும் ஆலோசனையிலும் மாமன்றம் இந்த இலக்கை நோக்கி பயணிக்கும் என ரிஷிக் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆலயத்தின் பணி என்பது பூஜை கிரியை மட்டுமல்லாமல் இந்து சமயக் கல்வி அனைத்து இந்து மாணவர்களையும் சென்றடையச் செய்யும் கடப்பாடும் ஆலயத்திற்கு உண்டு. அந்த வகையில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் ரவாங் பதினாறாவது கல் அருள்மிகு சுப்ரமணியர் ஆலய நிர்வாகத்தினருக்கு நன்றியையும் தெரிவித்தார் சசிகுமார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை