
நிகழும் வெப்ப காலத்தில் இரவில்கூட வியர்த்துக் கொட்டுகிறது; பகலில் கேட்கவா வேண்டும்?
ஏதோ அவ்வப்பொழுது மேகம் தென்பட்டாலும் கோடைக்கால மழைகூட தூறலாக வந்துவந்து போகிறது.
ஆனாலும் விஞ்சி நிற்பது என்னவோ வெப்பமும் அனல் காற்றும்தான்.
சூடான சூழலைத் தணிக்கவும் தாக்கம் தீர்க்கவும் வீட்டில் அதையும் இதையும் குடித்து பார்த்து, வெளியில் அலைந்து திரிந்து கடைசியில் ஓர் உணவகத்தில் அமர்ந்து மகிழ்வாக ஒரு குவளை சுவை நீரை பருகலாம் என்று முயற்சித்தால், அங்கு உடல் சூட்டைவிட மனம் சூடாகும்படி ஒரு சம்பவம் நேர்ந்துள்ளது ஒரு பெண்ணுக்கு!
அவர் பருகிய சுவை நீரில் தவளைக் குஞ்சு கிடந்துள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட உணவகம் இரு வாரங்களுக்கு மூடும்படியும் இந்த இடைக்காலத்தில் சுகாதார கட்டமைப்பை உணவகத்தில் மேம்படுத்தும்படியும் சுகாதார துறை அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுள்ளது;
சம்பவம் நடைபெற்ற இடம் ஜாலான் பூசாட் டஹாங்கான் செண்டாயான் 3, நெகிரி செம்பிலான் மாநிலம்.
சுகாதாரத்துறையின் உணவு பாதுகாப்புப் பிரிவும் தரக் கட்டுப்பாட்டு பிரிவும் இணைந்து மேற்கொண்ட சோதனைக்குப்பின், இரண்டு அபராத அறிக்கைகளும் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன.
ஒரு பெண் வாடிக்கையாளர், தான் வாங்கிய சுவை நீரில் ஏறக்குறைய கால்பகுதியைக் குடித்தபின், வழக்கமாக எல்லா பயனீட்டாளரையும் போல சற்று நோட்டம் இட்டபின், தான் பருகிக் கொண்டிருந்த சுவைநீர்க் குவளையின் அடியில் ஏதோ ஒன்று வேறுபாடாக இருப்பதைக் கண்டு மனம் துணுக்குற்று, பதறியபடி, அது என்ன ஏதென்று பார்த்தபொழுது அது ஒரு சிறு தவறு என்று தெரிந்து மனம் பதறி இருக்கிறார்.
இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி சமூக வலைதள வாசிகளின் ஆதரவை அள்ளிக் குவித்துள்ளது.
இதை ஏறக்குறைய 2.2 மில்லியன் பேர் பார்த்துள்ள வேளையில், 57 ஆயிரம் பேர்வரை இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர், நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்தும் பதிவிட்டுள்ளனர்.


