Sunday, April 19, 2026

விடுதலை மாத தேசிய உணர்வுடன் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கக் கூட்டம்

நாட்டின் அறுபத்து எட்டாவது விடுதலை நாள் தொடர்பில் நிகழும் ஆகஸ்ட் திங்கள் முழுவதும் தேசிய உணர்வு நாடெங்கும் பிரதிபலிப்பதற்கு ஏற்ப நேற்றைய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கக் கூட்டத்திலும் அது பிரதிபலித்தது.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் 8-ஆம் ஆண்டுக் கூட்டம் அதன் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் தலைமையில் ஆகஸ்ட் 16 சனிக்கிழமை காலையில் ஜெயபக்தி நூல் நிறுவன அரங்கத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் இடையே ஊடகப் பாலமாக திகழும் பத்திரிகையாளர்களைப் பாராட்டிய துணை அமைச்சர், உண்மை செய்திகளையும் பொய் தகவலையும் அடையாளம் காண வேண்டிய பொறுப்பும் ஊடகத்தினருக்கு இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மூத்த பத்திரிகையாளர்களின் மருத்துவ உதவி தொடர்பில் ‘அவனா காசே’திட்டத்தின் துணை கொண்டு முடிந்தவரை உதவி நல்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக தலைமை உரை ஆற்றிய தலைவர் மன்னன், அச்சு- இணைய ஊடகங்களில் பணிபுரிகின்றவர்களின் எதிர்கால நலம் கருதியும் சங்கத்தின் வளர்ச்சி கருதியும் சொந்த கட்டிடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் தொடர்பில் விருந்து நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சங்கத்தின் உதவித் தலைவர்களில் ஒருவரான இளங்கோவன் காளிதாசன், இதுவரை 35 மூத்த பணியாளர்களுக்கு ஹவானா காசே சமூக நலத் திட்டத்தின்கீழ் உதவுநிதி பெற்றுத் தந்துள்ளதாகவும் மேலும் 16 பேருக்கு இந்த நிதி உதவி தேவைப்படுவதால் இதன் தொடர்பில் துணை அமைச்சரிடம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை வழங்கி கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்;

இந்தத் தருணத்தில் தகவல் அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில், துணை அமைச்சர் தியோ நீ செங் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக பத்திரிகையாளர் சங்கத்தின் ஹவானா காசே பொறுப்பாளருமான காளிதாசன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா நிர்வாகப் பொறுப்பாளருமான பிரபாகரன் , குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், மலேசிய இந்தியர் சிறுதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன், விலாயா மாநில சிலம்பக் கழகத் தலைவர் டாக்டர் உதயகுமார் உட்பட பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில்,
மலேசிய நண்பன் ஆசிரியர் டத்தோ எம் இராஜன், மக்கள் ஓசை நாளிதழ் ஆசிரியர் ம.சு. மலையாண்டி,
தமிழ் மலர் ஆசிரியர் கு.தேவேந்திரன் உட்பட சங்க உறுப்பினர்கள் ஏராளமானோரும் பங்கு பெற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ‘ஜாலூர் கெமிலாங்’தேசியக்கொடி வழங்கப்பட்டது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை