Sunday, May 31, 2026

மனிதம் தேடும் மனிதனைக் காணவும் ஆதரிக்கவும் வாருங்களேன்!

மலேசிய தமிழ்ச் சோலையில் பூக்க விருக்கிறது இன்னோர் இலக்கிய மலர். இந்த புத்தகப் பூவிற்கு ‘மனிதம் தேடும் மனிதன்” என்று பெயர் சூட்டி இருக்கிறது, நீண்ட காலம் மொட்டாகவே இருந்த இப்பூவை இப்போது பூக்க வைத்திருக்கும் ஒரு நடமாடும் இலக்கிய மரம்; தமிழ்ச் சோலையில் நடமாடும் பாவலப் பாங்குடைய இத்தேக்கு மரத்தின் பெயர் பாவலர் பெர்னாட்ஷா!

மலேசிய நாளிதழ்களில் அவ்வப்பொழுது விட்டும்தொட்டுமாக இவர் எழுதி வெளிவந்த கவிதைகளைத் தொகுத்து, ‘மனிதம் தேடும் மனிதன்’ என்ற பெயரில் நூலாக்கி, இப்பொழுது அம்பலத்தே யேற்ற தன்பலம் கொண்ட மட்டில் ஊக்கமிக பாடாற்றி வருகிறார்.

இக்கவிமகனருகில் அமர்ந்து மலேசிய நண்பன் நாளேட்டின் பிழைத் திருத்தும் பகுதியில், புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கிய காலத்தில் பணிபுரிந்த காட்சியெல்லாம் உள்ளத்திரையில் படமாடுகின்றன.

1992-ஆம் ஆண்டு முதல் மலேசிய நண்பன் நாளிதழ், அப்போதைய மக்கள் ஓசை வார இதழ், அடுத்து நாளிதழ், ‘வணக்கம் மலேசியா’ வார இதழ் என்றெல்லாம் ஏறக்குறைய 20 ஆண்டுகாலம் ஊடக வட்டத்தில் பயணித்த பெர்னாட்ஷா, கடுமையான வேலைச் சுமைக்கு இடையில் கவிபுனைவதையும் கைவிடாமல் இரட்டைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

மரபுக் கவிதை, புதுக்கவிதை இரண்டையும் இருவிழியெனக் கொண்டு, ஒரேக் கண்ணோட்டத்தில் அளவிட்டாலும் இவரின் ஓரவிழிப் பார்வை என்னவோ, மரபுக் கவிபக்கமாகவே சென்றிருக்கிறது;

“பள்ளிப்பருவத்தில் இருந்தே கவிதையில் மிகப்பெரிய நாட்டம் இருந்தாலும் அவை எழுத்துருவம் கொண்டபோது, அவற்றை செம்மைப்படுத்தியது மலேசியாவின் தனித்துவ கவிஞரும் பகுத்தறிவுப் பாவலருமான ‘தீப்பொறி’ பொன்னுசாமிதான்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தெரிவித்திருக்கிறார், பெர்னாட்ஷா.

“நான் சந்தித்த நாள் முதல் அவரின் நிறைவுக்கட்டம்வரை இருவரும் அண்ணன் தம்பியராகத்தான் இருந்தோம்; எதையும் உரிமையாக சுட்டிக் காட்டுவார், சில நேரங்களில் குட்டியும் காட்டுவார், தீப்பொறி; என்னுடைய கவிதை, பத்திரிகையில் வெளிவந்த அடுத்த சில மணி நேரத்திலேயே என்னை தொலைபேசியில் அழைப்பார்; அதில் இருக்கும் நிறை, குறைகளை எடுத்துக் கூறுவார்; அதையும் தாண்டி ‘உன்னுடைய கவிதையில் தனித்துவமான சந்தம் இருக்கிறது’ என்று மனம் திறந்து பாராட்டுவார்; வெறும் வசந்த வார்த்தைகள் மட்டுமே கவிதைகளுக்கு வெண்சாமரம் வீசுவதாக இருக்கக்கூடாது; சமுதாயச் சங்கடங்களையும் அவை தாங்கிநிற்க வேண்டும் என்று குறிப்பிடுவார்; அந்த அடிப்படையில்தான் பெரும்பாலான கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன” என்று தீப்பொறியாருக்கும் தனக்குமான கவிநட்பையும் காய்தல் உவத்தல் என்று பட்டவர்த்தனமாக வார்த்தைவழி கொட்டி இருக்கிறார்.

துயரத்தைக் கண்டு துவண்டு விடக்கூடாது; அவற்றை தூக்கி எறிய வேண்டும். துரத்தி மிதிக்க வேண்டும். அப்படிச் செய்தால் வாழ்க்கை வசப்பட்டுவிடும்;
நட்பு எப்படி இருக்க வேண்டும்?. அதற்கும் கற்பு உண்டு. அந்த கற்பை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்பதையும் மனிதம் தேடும் மனிதனில் சுட்டி இருக்கிறார்.

கடன் பற்று அட்டையாலும் இணையவழி சூதாட்டங்களினாலும் நம்முடைய இனம் படுகின்ற துயரத்தை இதய வலியோடு எடுத்துக் கூறியிருக்கிறார்.

தமிழினத்தின் ஆணிவேரை அரிக்கின்ற மிகப் பெரிய பிரச்சினையாக சாதிப் பாகுபாடு பரவிக் கிடக்கிறது. அதனால் ஏற்படும் பாதகம், இழப்பு ஆகியவற்றையும் தனக்குத் தெரிந்த வகையில் சொல்லி இருக்கிறார்.

பணம் மட்டுமே வாழ்க்கையாக அமைந்து விடாது. ஆனால், வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு பணம் அவசியம்! .

அந்தச் செல்வம் உங்களிடம் இருந்தால் உறவும் நட்பும் உரிமையோடு ஒட்டிக் கொண்டிருக்கும். ஒருவேளை, செல்வம் உங்களை விட்டுச் சென்று விட்டால் ஒட்டி இருந்த உறவு-நட்பு அனைத்தும் எட்டிப் போய்விடும் என்பதையும் கவிதை வரிகளில் கசப்போடு உணர்த்தி இருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிறப்பு குறித்து அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் ஒரு கவிதைப் போட்டியை நடத்தியது.

‘இணையில்லா இமயம் சிவாஜி’ என்ற தலைப்பில் இப்பாமகன் எழுதிய கவிதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. முதல் பரிசு கவிஞப் பெருந்தகை காரைக்கிழாருக்கு கிடைத்தது.

மேலும், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் ‘நில நிதி கூட்டுறவு சங்கம்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

Made with LogoLicious Add Your Logo App

மலேசிய கண்ணதாசன் அறவாரியம் நடத்திய கம்பன் விழா கவியரங்குகளில் ‘கம்பனிடம் மயக்கம்’, ‘ராமனைத் தாங்கிய குடில்’ என்ற தலைப்புகளில் கவிதை பாடி இருக்கிறார் இக்கவிமகன்.

இலக்கியச் சுவையோடு பாடப்பட்ட அந்தக் கவிதைகளில் இடையிடையே நம்முடைய சமுதாயக் கருத்துகளையும் சிக்கல், சிரமத்தையும் இழையோட விட்ட பாங்கு சிறப்பிற்குரியது.

அதேநேரத்தில் காதலையும் இவர் புறந்தள்ளி விடவில்லை;

இளம் வயதில் தனக்கு ஏற்பட்ட காதல் உணர்வையும் சில கவிதைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

‘வணக்கம் மலேசியா’ ஊடகத்தில் இவர் ஆசிரியராகப் பணியாற்றியபோது கணினி பிரிவில் இவரின் அன்பு இளவல் மைதீனும் பெர்னாட்ஷாவின் கவிதைகளைப் படித்து மனம் நெகிழ்ந்திருக்கிறார்

“சார், இதை அப்படியே தொகுத்து நூலாக்கி விடுங்கள்” என்று சொல்லி கணினியில் தட்டச்சு செய்து தன்னிடம் கொடுத்து விவரத்தையும் இந்த நூல் உருவான விதம் குறித்த விளக்கத்தில் பெர்னாட்ஷா தெரிவித்திருக்கிறார்

அலுவல் மற்றும் சிரமம் காரணமாக அந்தக் காலகட்டத்தில் கவிதை நூல் வெளியீடு செய்யும் கனவு தடைப்பட்டு போனது.

ஆனால், தற்போது காலம் கனிந்திருக்கிறது போலும்.

பெரனாட் ஷாவின் கவிதை இதழ்கள் அனைத்தும் மலராக தொடுக்கப்பட்டுள்ளன..

இந்தக் கவிமலர் வெளியீட்டு விழா 28.9.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணி அளவில் கோலாலம்பூர் ம.இ.கா.தலைமையகத்தில் அமைந்துள்ள நேதாஜி அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா. தேசிய துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர் மு.சரவணன் தலைமை உரை ஆற்றி நூலை வெளியீடு செய்ய இருக்கிறார்.

தமிழ் உறவுகளும் நட்புகளும் தவறாது இவ்விலக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு தன்னை சிறப்பிக்குமாறு
கவிஞர் பெர்னாட்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இலக்கியத் தென்றல் நல்லவண்ணம் வீசட்டும் என்று குமரியும் வாழ்த்துகிறாள்!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை