
பாவலர் கிளியனூர் ஆர் அப்துல் சலாம் இயற்றிய ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று தொடங்கும் என்ற பாடலை பாடிய இசை முரசு அனிஃபாவின் குரலை தமிழறிந்தோர் அனைவரின் செவியும் கேட்கத் தவறியதில்லை.
அந்தப் பாடலின் நான்கு பத்திகளில் ஒன்றில் இடம்பெற்றுள்ள
“அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்; அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்”
என்ற வரிகளுக்கு பதிலாக
“அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள் ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்” என்று ஒருவேளை அமைந்திருந்தால் இந்தப் பாடல், சர்வ சமயப் பாடலாகவும் சர்வதேச சமய பாடலாகவும் உருமாறி இருக்கும் என்று கவிவானராக உருமாற்றம் பெற்று வரும் ம.இ.கா.-வின் தேசியத் துணைத் தலைவரும் எய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தருமான டத்தோஸ்ரீ மு. சரவணன் கூறினார்.

1925 டிசம்பர் 25-இல் பிறந்த இஸ்மாயில் முஹம்மது ஹனிஃபா என்னும் இயற்பெயரைக் கொண்ட இ.எம். அனிஃபா, 11 வயதில் பள்ளியில் பாடியவர்; 15 வயதில் திருமணத்தில் பாடி இளம் வயதிலேயே நிக்காஹ் பாடகர் என்று பெயர் பெற்றவர்; இருபத்தி ஒரு வயதில் இசைக்குழுவை நிறுவியவர்.

அறிஞர் என்றால் அது பேரறிஞர் அண்ணாவை மட்டுமே குறிக்கும்; அதைப்போல கலைஞர் என்றால் அது அரசியல் தலைவர் மு கருணாநிதியை மட்டுமே குறிக்கும்; கர்மவீரர் என்றால் அது காமராஜரை மட்டுமே குறிக்கும்; இதுபோல கவியரசு என்றார் அது, கண்ணதாசனை மட்டுமே குறிக்கும்; இவற்றைப்போல தமிழிசை உலகில் இசை முரசு என்றால் அது நாகூர் அனிஃபாவை மட்டுமேக் குறிக்கும்.

நாகூர் அனிபா அவர்கள், திராவிட எல்லை சார்ந்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி ஆகியோருடன் பழகி, திமுக கொள்கை சார்ந்து, கட்சிப் பாடல்களை பாடி இருந்தாலும் இஸ்லாமிய நெறி சார்ந்து எண்ணற்ற உள்ளம் கவரும் தேனிசை பாடல்களையும் தந்தவர் இ.எம். ஹனிஃபா.
இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி என்பதற்கு கடுகளவும் பங்கம் நேராமல் வாழ்ந்து காட்டியவர் ஹனிஃபா.
திராவிட முன்னேற்ற கழக பாடல்களை பாடிய இஎம் ஹனிபா அண்ணல் நபிகள் நாயகம் வடித்த மறைநெறி சார்ந்தும் குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ள இஸ்லாமிய கருத்துக்களையும் முன்னிறுத்தி ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார்.
‘தீன் குலக்கண்ணு; எங்கள் திருமுறை பொண்ணு’என்று தொடங்கும் பாடல் அதற்கு தக்கச் சான்று.
இ எம் ஹனிபா அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரை சந்திக்கின்ற வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவர் அருமை பெருமைகளை பின்னாளில் தெரிந்து கொள்ளும் நல்வாய்ப்பு கிட்டியதற்காக இந்த மேடையில் நின்று மகிழ்கிறேன் என்று மாசா பல்கலைக்கழகத்தில் இன்று, இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இ.எம். ஹனிஃபா நூற்றாண்டு விழாவில் பேசிய பொழுது சொல்வேந்தர் சரவணன் மனம் நெகிழ்ந்து பேசினார்.
இந்த விழா குறித்து டத்தோஸ்ரீ இக்பால் லுடன் ஒரு சில கருத்துக்களை வழங்கினாலும் இந்த நிகழ்ச்சி இத்தனை சிறப்புடன் நடைபெறுவதற்கு டான்ஸ்ரீ ஹனிஃபாதான் காரணம் என்று குறிப்பிட்ட சரவணன், பத்திரிகையாளர் பிதாவுல்லா தன்னுடைய பத்திரிகைச் செயலாளர் திருமதி விஜயராணி உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார்.


