
தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்து ஆறாவது பிறந்தநாள் விழா நாளை செப்டம்பர் 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் 2:00 மணி அளவில் கோலாலம்பூர் பிரிக் ஃபீல்ட்ஸ் பாடாங் பெல்லியா சாலையில் அமைந்துள்ள ருக்குன் தெத்தாங்கா மண்டபத்தில் நடைபெற உள்ளது
இவ்விழாவை மேனாள் தலைமை ஆசிரியர் மு. கங்கம்மாள் மலையரசன் தொடக்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

கழகத்தின் மதியுரைஞர் கொள்கைச்சுடர் இரெ.சு. முத்தையா சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆரியத்தின் சூழ்ச்சி- வஞ்சகத்துக்கும் பண்பாட்டு புரட்டுக்கும் ஆட்பட்டு சரிந்து கிடந்த தமிழினத்தை உயர்த்தி பிடிப்பதற்காகவும் நம் சமுதாயத்தின் அவல நிலை கண்டு அதன் மூலத்தை ஆய்ந்து சாதி- மதம் பற்றிய சிந்தனையை பின்னால் தள்ளி சமத்துவம், சம உரிமை, சுயமரியாதை, பெண் கல்வி, பெண்ணுரிமை, பெண்களுக்கான சுய முன்னேற்றம், பெண்களுக்கான சொத்துடைமை உள்ளிட்ட பெண்ணிய சிந்தனையையும் முன்னிறுத்தி தீண்டாமை ஒழிப்பு தமிழ் எழுத்து சீர்திருத்தம், திருக்குறள் பரப்புதல் உள்ளிட்ட புதுமை சிந்தனைகளுடன் 95 ஆண்டுகள் வாழ்ந்த அந்த பேரறிவு பெட்டகத்தின் பிறந்தநாள் விழாவை மலேசிய மாந்தநேய திராவிடர்க் கழகம் நாளை சிறப்புடன் நடத்த பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பரசன் சண்முகம் ஆற்றும் வரவேற்புரையோடு தொடங்கும் இவ்விழாவில் கல்லூரி மாணவர்களின் சொல்லரங்கம், பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, அறிவுப் புதிர் போட்டி என பல அங்கங்கள் இடம்பெற உள்ளன.
இந்திய விடுதலைக்கு காந்தியோடு இணைந்து களம் கண்ட தந்தை பெரியார், உள்நாட்டு வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் கதர் துணிகளை தோளில் சுமந்து வீதிவீதியாக விற்பனை செய்தார்; அதுபோல காந்தியின் மற்றொரு சிந்தனையான மதுவிலக்கு கொள்கையை ஏற்று தன் தோட்டத்து தென்னை மரங்களை வெட்டி சாய்த்தவர் தந்தை பெரியார்; பெண்களுக்காக முதல் முதலில் பொறியியல் கல்லூரியை நிறுவியவர் தந்தை பெரியார்.

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்று ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பினால் புகழப்பட்ட தந்தை பெரியாரின் திரு உருவப்படம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அண்மையில் திறக்கப்பட்டது, சுயமரியாதை உணர்வாளர் ஒவ்வொருவருக்கும் மிடுக்கான தன்மையை தருவதாகும்.
உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய கால்பங்கு என்ற அளவில் இருக்கும் பகுத்தறிவாளர்களின் அடையாளமாக உணரப்படும் தந்தை பெரியாருக்கான இந்த நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்தநாள் விழாவில் தமிழ் அன்பர்களும் சுயமரியாதை உணர்வாளர்களும் கலந்து சிறப்பிக்கும்படி கழகத்தின் தலைவர் நாகபஞ்சு கேட்டுக் கொள்கிறார்.


