
சூரிய வணக்க முறை, திருமுருக வழிபாடு, சைவம், வைணவம், சாக்தம், கணபதியம் உள்ளிட்ட ஆறு வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய இந்து சமய மையமாக பத்துமலை திருத்தலம் ஏற்கெனவே உருமாறிவிட்ட நிலையில், தற்பொழுது அது பக்தி இலக்கிய(திருமுறை), நடன, இசைப் பயிற்சிகளுக்கான நடுவமாகவும் உருமாறி வருகிறது.

கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலரும் ‘டிகேஎஸ்’ அமைப்பின் தலைவரும் மலேசியாவில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான வழிபாட்டு தளங்களை ஒருங்கிணைக்கின்ற ‘மஹிமா’ அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவகுமார் தலைமையில் திருமுறை வகுப்பு, நடன வகுப்பு, வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளுக்கான பயிற்சி யாவும் பொருத்தமான அசிரியர்களைக் கொண்டு தொடர்ந்து வழங்கப்படுகிறது.
பக்தி இலக்கியம் உள்ளிட்ட ஆன்மிக மார்க்கத்தை வளர்க்க வேண்டும் என்னும் உந்துதலில் வழங்கப்படுகின்ற இந்தப் பயிற்சிகள் யாவும் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

இத்தகைய சேவையின் நோக்கம் அடுத்த தலைமுறை சமய பண்பாட்டு நெறிமுறைகளை அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் நம் சமயம் தழைக்கவும் ஆன்மீக சமய நன்னெறி மேம்படவும் உதவுகின்ற புதிய தலைமுறையை உருவாக்கி பல்லின சமுதாயம் வாழும் இந்த நாட்டில் இந்து சமுதாயத்திற்கான கட்டமைப்பை குறிப்பாக இந்து சமயத்திற்கான அடித்தளத்தை வலுவாக நிறுவ வேண்டும் என்ற உந்துதலின் அடிப்படையில் தான் இத்தகைய ஏற்பாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ந. சிவக்குமார் தெரிவித்தார்.

(திருமுறைப் பயிற்சியில் கலந்து கொண்ட தேஜஸ்வி ஐஸ்வர்யா-விஜயந்திரன் பரிமளா இணையரின் மகள்)
கடந்த மூன்று மாதமாக திருமுறை, பரதம் போன்ற நடனம், இசைக் கருவி பயிற்சி ஆகியவற்றில் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்த நிலையில் இதில் ஆர்வத்துடன் பங்கு பெறும் மாணவர்களை ஊக்குவிக்கவும் காலம் நேரம் கருதாமல் வேலைக்கு செல்கின்ற பெற்றோர்கள் நேரம் ஒதுக்கி பல்வேறு சிரமங்களுக்கு இடையே தங்கள் பிள்ளைகளை இந்த வகுப்பிற்கு அனுப்பி சமயம் தழைக்க உதவுகின்ற நிலையில் அவர்களையும் பாராட்டுகின்ற வகையில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பயிற்சி பெற்று வந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 27ஆம் நாள் பத்துமலை கலை-பண்பாட்டு கலாச்சார மையத்தில் டத்தோ சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழும் சைவமும் பண்ணிசையும் அறிந்த திருமதி கோகிலவாணியை ஆசிரியராகக் கொண்டு இளம் மாணவர்களுக்கு திருமுறை வகுப்பு நடைபெறுவதைப் போல பரதம் உள்ளிட்ட நடனம் நாதஸ்வரம் மேளம் வீணை போன்ற இசைக்கருவிகளின் இயக்கவும் தேவையான பயிற்சி கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த நிகழ்ச்சிக்கு தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் பொழுது சிவக்குமார் மேலும் தெரிவித்தார்.


