Monday, April 20, 2026

கோலாலம்பூர் லிட்டில் இந்தியா தீபாவளி வரவேற்பு வளைவு சரிந்தது!!

தீபாவளி திருநாளை இந்து பெருமக்கள் இன்னும் 17 நாட்களில் கொண்டாட இருக்கின்ற நிலையில் நாட்டின் பாரம்பரிய தலைநகரான கோலாலம்பூரில் இந்திய வர்த்தக மையத்தின் அடையாளமாக மலேசிய மத்திய கூட்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ள பிரிக் ஃபீலட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி காலகட்டத்தில் ஆண்டுதோறும் நிகழும் வழக்கமான சலசலப்பிற்கு இந்த ஆண்டும் பங்கமில்லாமல் நிலைமை முறுகல் நிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில் கோலாலம்பூர் லிட்டில் இந்தியா சிறு வர்த்தகர்களின் வர்த்தக சிக்கலைக் களைவதன் தொடர்பில் மலேசிய மடாணி அரசாங்கம் பேங்க் ராயாட் வங்கியுடன் இணைந்து அமைக்கப்பட்ட தற்காலிக வர்த்தகக் கூடாரங்கள் நேற்று அக்டோபர் முதல் நாள் காலையில் ஒரு சிறிய, அதுவும் இரண்டு வரிசை கட்டிடங்களுக்கு இடையில் சாலையில் நடுவே நிறுவப்பட்ட 8 அடிக்கு எட்டு அடி என்ற அளவில் நிறுவப்பட்ட வர்த்தகக் கூடாரங்கள் சாதாரண காற்றுக்கும் மழைக்கும் ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து காலமெல்லாம் தங்களை உயர்வாக எண்ணிக்கொண்டு வானத்தை நோக்கி காட்சிதரும் மலர்களை போல மல்லாந்து கிடந்தன.

சங்க காலம் தொட்டு தமிழர்களின் வாழ்க்கைக்கு காயோ கனியோ தருகின்ற மரங்களின் மலர்கள் யாவும் பழந்தமிழ் பெண்களைப் போல நிலம் பார்த்தேக் காட்சி தரும்.

ஆனால் மனித குலத்துக்கு பயன் விளைவிக்காத மலர்கள் யாவும் தங்களை உயர்வாக எண்ணிக்கொண்டு வானத்தைப் பார்த்து சிரிப்பை தருவதைப் போல கோலாலம்பூர் பெருநகர் மன்றத்தின் சார்பில் நிறுவப்பட்ட வர்த்தக கூடாரங்கள் நேற்று காற்றில் பறந்தன என்றால், இன்று பிற்பகலில் காற்றில்லாமல் பெய்த சிறிய மழைக்குக் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் லிட்டில் இந்தியா பகுதியில் நிறுவப்பட்ட வரவேற்பு மடாணி வளைவு சரிந்தது.

இதன் விளைவாக ஒரு வர்த்தகப் பெண்ணின் மகிழுந்தின் முன்பகுதி இலேசான பாதிப்பிற்கு ஆளானது.

அதேவேளை, சிறியவர்களோ முதியவர்களோ அந்த இடத்தில் நின்றிருந்தால் மடாணி அரசாங்கத்தின் ‘மக்கள் குடியிருப்பு'(Jajahan Rakyat) என்னும் பொருளை தாங்கியிருந்த வரவேற்பு வளைவு விழுந்த பொழுது பாதிப்பு இன்னும் அதிகமாக நேர்ந்திருக்கும்.

எந்த நேரமும் பொதுமக்கள் நடமாடக்கூடிய இத்தகைய இடத்தில் இப்படியான கூடாரங்களையும் வரவேற்பு வளைவையும் அதும் ஓர் அரசுசார் நிறுவனத்தால் அமைக்கப்படுகிறது என்றால் அதன் தரமும் நோக்கமும் எந்த அளவிற்கு சோடையாக இருக்கிறது என்பதை பொதுமக்களின் கவனத்திற்கும் பார்வைக்கும் குமரி விட்டு விடுகிறாள்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை