Monday, April 20, 2026

திருநெறியத் தமிழ்ப் பாடியார் க.சிவசண்முகத்திற்கு மலேசியத் தமிழ்ப் பேராயம் பட்டய மகுடம்-பொன் பரிசு!!

திருக்குறள் நெஞ்சம் தீமைக்கு அஞ்சும் என்பார் நினைவில் வாழும் மணிவெள்ளையனார்; அதையே மாற்றி, ‘திருமுறை நெஞ்சம் தீமைக்கு அஞ்சும்’ என்கிறார் தமிழையும் சைவத்தையும் ஒருசேர வளர்த்துவருபவரும் மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவருமான ‘திருமுறைச் செம்மல்’, ‘சைவசித்தாந்த ரத்தினம்’ ந.தருமலிங்கம்.

இரண்டும் ஒன்றுதான், இரண்டும் நன்றுதான், இரண்டும் தேவைதான் என்கிறார் மலேசியத் தமிழ்ப் பேராயத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன்.

ஆன்மிக எல்லையில் அசையாமல் நின்றாலும் சமய நன்னெறி குறித்தும் மூடநம்பிக்கை பற்றியும் இப்பொழுதெல்லாம் சரவணனார் பேசி வருவதால், அவரை, அவரின் எல்லையைச் சேர்ந்தோரே ‘நாத்திக சரவணன்’ என்று விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

“நமனை அஞ்சோம்” என்றதும் நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்றதும் சுயமரியாதைக்காரர்கள் அல்லர்; பரமனை தொழுதபடி சைவ எல்லையில் பயணித்த அடியார்க்கு அடியார் பெருமக்கள்தான் என்பதை அரியாதோர் அத்தகையோர்.

சரவணனும் இப்படி புத்தாக்கம் பெற்றிருப்பதால்தான், ‘பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டுகொண்டு’, ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’, ‘இறைவன் இருப்பது எங்கே’ என்றெல்லாம் தொடங்கும் சமய நன்னெறிப் பாடல்கள் பிடித்திருக்கின்றன.

இறைமாட்சியை உணராமல், பரிகார பூசனையில் மட்டும் ஆர்வம் காட்டுவோர்க்கு இத்தகைய சமய-ஆன்மிக நன்னெறிப் பாடல்கள் யாவும் கசக்கத்தான் செய்யும்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக திருமுறையை ஓதி, திருமுறையைக் கற்பித்து பரமனின் புகழ்பாடியபடி தமிழ் வழிபாட்டு முறையையும் முன்னெடுத்துவரும் க.சிவசண்முகம் என்னும் நல்லாரை மலேசியத் தமிழ்ப் பேராயத்தின் சார்பில் பாராட்டும் முகமாக அதன் தலைவர் மு.சரவணன் முன்னெடுத்த முத்தாய்ப்பான நிகழ்ச்சி, நேற்று, அக்டோபர்த் திங்கள் 3-ஆம் நாள் முன்னிரவில் மஇகா தலைமையகத்து நேதாஜி அரங்கத்தில் நடைபெற்றது.

ஆறரை மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு ஏழு மணியளவில்தான் செல்ல முடிந்தது. அப்பொழுது விழா நாயகர் சிவசண்முகத்தை திருமுறை ஓதி வரவேற்ற நிகழ்ச்சி நிறைவுபெற்றிருந்தது.

தொடர்ந்து, டாக்டர் கதிரேசன் பேசினார். சிவநெறியென்னும் சைவநெறி நின்று திருமுறையை வளர்ப்பதற்காகவே 70 ஆண்டுகளுக்கு முன்னம் தோற்றுவிக்கப்பட்ட அருள்நெறித் திருக்கூட்டம் என்னும் சைவைநெறிசார் அமைப்பின் தலைவரும் இருதய அறுவைச் சிகிச்சை மயக்க மருந்தியல் வல்லுநருமான கதிரேசன், தங்களின் அருள்நெறித் திருக்கூட்ட அமைப்பில் செப்பம் பெற்று, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திருமுறை வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள சிவசண்முகத்தை அளவாகப் புகழ்ந்து நலமான கருத்துக்களை எடுத்துரைத்தார்.

மஇகா-வின் நான்காவது தேசியத் தலைவர் க.இராமநாதன் தொடக்கி வைத்ததுதான், அருள்நெறித் திருக்கூட்ட அமைப்பு என்பது குறிப்பிடத் தக்கது.

அவரை யடுத்து, சிவசண்முகத்தின் திருமுறை மாணாக்கரும் சைவ நற்பணிக்கழகத் தலைவருமான தருமலிங்கம் பேசினார். குன்றின்மேல் விளக்கைப் போன்றிருக்க வேண்டியவர், தன்னடக்கத்தின் காரணமாக காலமெல்லாம் தன்னை குடத்திற்குள் வைத்த அகல் விளக்காகவே ஆக்கிக் கொண்டவர்.

ஆனாலும், காலமும் இறைமையும் தக்கார்க்கு தக்கதைச் செய்யும் என்பது, அரசியல்வாதியா?-சமயவாதியா?இலக்கியவாதியா யென அடையாளம் காணவொண்ணா சரவணனார் மூலம் நடைபெறும் இந்தப் பாராட்டு நிகழ்ச்சிவழி மெய்ப்பிக்கப்படுகிறது என்றார் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திலகமுமான தருமலிங்கம்.

நிறைவாக, விழா நாயகனைப் பாராட்டிச் சிறப்பிக்க வந்தவர் விழா ஏற்பாட்டாளர் சொல்வேந்தர் டாக்டர் மு.சரவணன்.

அதற்கும் முன்னதாக திருநெறிய நிறைமலி அகல்யா தருமலிங்கம், சிவசண்முகம் கருப்பையாவைப் பற்றி முத்தான குறிப்புகளைத் தந்தார்.

திருமுறை ஆசிரியர் சிவசண்முகம், ஆயிரக் கணக்கான சைவ ஆர்வலர்களுக்கு திருமுறையை பண்ணிசையுடன் பயிற்றுவித்து சைவப் பயிர் வளர்ப்பவர் என்றார்.

கருப்பையா-வள்ளியம்மாள் இணையரின் மகனான சிவசண்முகம், திருத்தோகையடி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தேவார வகுப்பில் கலந்து பயிற்சிபெற பத்து வயதிலேயே முனைந்தவராம்; காலவோட்டத்தில் திருமுறையில் தேர்ந்து, அதை இளந்தலைமுறையினருக்கு பயிற்றுவிக்கும் எண்ணத்தில் எஸ்.என். தில்லையம்பளம், நந்திதேவன் போன்றோரின் ஒத்துழைப்புடன் அப்பர் திருநெறிக் கழகத்தைத் தோற்றுவித்திருக்கிறார்.

கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலய திருமுறை ஓதுவார், முத்துக்குமார சாமி தேசிகரிடம் முறையாக பயின்றபின், திருமுறை ஆசிரியராக உருவானவர் சிவசண்முகம்; தொடர்ந்து ஆதிமூலம், ஆறுமுகம், சிற்றரசு, நந்திதேவன், செல்வசிங்கம், நிறைமலி பத்மசோதி, கலிய பெருமாள் போன்றோருடன் சேர்ந்து திருமுறை வளர்ச்சிப் பணியை மேற்கொண்ட சிவ சண்முகம், 2011-இல் திருமுறை பாடசாலையையும் நிறுவினார் என்றெல்லாம் அவரின் சமய செம்பணி குறித்த குறிப்புகளைத் தந்து விடைபெற்றார் அகல்யா.

இலக்கிய நிகழ்ச்சி என்றால், மொழி மூத்தவளாம் தமிழன்னையை வணங்குவது; அம்மன் ஆலய நிகழ்ச்சி என்றால் பரமனொருபாகி அன்னை உமையவளைப் போற்றுவது; பொதுவாக ஐயையொருபாகன் பரமனின் ஞானவடிவான திருமுருக துதிபாடுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் சரவணன் நேற்றும் அப்படித்தான் செய்தார்.

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே!

என்று வீரத் துறவி, அருட்பிரகாச வள்ளலார் அடிகளாரின் வரிகளைத் துணைகொண்டு உமையொருபாகனை வணங்கி, தன்னுரையைத் தொடர்ந்தார்.

சிறார்ப் பருவத்தில் திருமுறைக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல், பொங்கலையும் புளியோதரையையும் இலக்குவைத்தே கோலாலம்பூர் பொது மருத்துவமனை வட்டாரத்து காளி கோயில், முருகன் ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம். பூசனை முடிந்து பொங்கலைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால், “அடுப்படிக்கு வந்துவிட்ட முயலை சமைக்காமல் விடுவதில்லை என்பதைப் போல எங்களைப் போன்ற சிறாரை யெல்லாம் மடக்கி உட்காரவைத்து, திருமுறையின்பால் வெறுப்பேற்படும் அளவிற்கு, ஒதுவார்கள், ஒதுவார்கள்; ஓதிக்கொண்டே இருப்பர் திருமுறையை!

அன்றைய நம் இளைஞர்கள் மூவிதமாக இருந்தனர்; ஆன்மிகத்தில் இணைந்தவர்கள் ஒரு தரப்பினர்; விளையாட்டில் நாட்டம் கொண்டோர் இன்னொரு தரப்பினர் என்றால் காலாடித்தனத்தைக் கைக்கொண்டவர்கள் மறு தரப்பினராக இருந்தனர்.

ஓருவழியாக நீண்டக் காத்திருப்பிற்குப் பின் பொங்கல் கிடைத்தாலும் அந்நாளைய ஆலயப் பொங்கலின் சுவையே தனிவிதமாக இருக்கும் என்று சொன்ன சரவணன், கடைசியில் தன்னைப் போன்றோரை வசியப்படுத்தி திருமுறையின்பால் அக்கறைக் கொள்ளவைத்தவர் இதே சிவசண்முகம்தான்;

தன்னுடைய மாணவர்களில் ஒருவர் அமைச்சராக வருவார்; ஒருவர் ஆசிரியராகவும் இன்னொருவர் சைவ அமைப்பின் தலைவராகவும் வருவார்கள்; இவர்கள் எல்லாம் சேர்ந்து தனக்காக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்வார்கள் என்று சிவ சண்முகம் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்ட சரவணன்,

செய்யாமல் செய்த உதவிக்கு- வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

என்னும் திருக்குறளை முன்வைத்து, அதனடிப்படையில் தன் திருமுறை ஆசிரியருக்கு நன்றி பாராட்டுவதாகக் கூறினார்.

திருமுறை ஆசிரியருக்கு திருக்குறள் தலைப்பில் பாராட்டுமொழி என்பது எத்துணைப் பொருத்தமாக அமைந்துவிட்டது; ஐயன் பொய்யாமொழியன் திருவள்ளுவர் யாத்த திருக்குறள் என்னும் பொதுமறைப் பெட்டகத்தின் 11-ஆவது அதிகாரமான செய்நன்றி அறிதலின் முதல் பாவைத் தெரிவுசெய்து அதனடிப்படையில் தன் ஆன்மிக ஆசானுக்கு நன்றியறிதலை வெளிப்படுத்தி,

‘திருமுறை சீர் பரவுவார் வாழ்க;
வளர்க நுமது திருமுறைத் தொண்டு’

என்று பாராட்டுமொழி பொழிந்த பட்டயம், வெள்ளித்தாள் அன்பளிப்பு, தங்கக் கணையாழி யாவும் வழங்கி சிறப்பித்த பாங்கே பாங்கு!

ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்னம், இரப்பர்த் தோட்டங்களில் மூழ்கிக் கிடந்த நம் முன்னோருக்கு, பற்றுக்கோடென முனியாண்டி சாமியும் காளியும் மாரி தெய்வமும் இருப்பதாக நட்ட செங்கல்லும் நின்ற மரங்களுமே திகழ்ந்தன; நம்பி வாழ்வைத் தொடர்ந்தனர்.

இன்றிருப்பதைப் போன்ற வசதி வாய்ப்பு அன்றில்லை யாயினும் அவர்கள் வளர்த்த ஆன்மிகப் பயிரைத் தற்காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கெல்லாம் இருக்கிறது.

மலேசிய அருள்நெறித் திருக்கூட்டத்தைப் போன்ற சமய அமைப்புகளின் அழைப்பின் பொருட்டு திருமுறை ஓதுதல்; எந்தத் தடை வந்தாலும் அன்றாடம் திருமுறை பாராயணம்; கொரோனா பருவம் தந்த புதுமார்க்கமான இணையவழி கலந்துரையாடல்-திருமுறை ஓதுதல் என ஆயிரக் கணகான நாட்களாக தொடர்ந்து திருமுறைப் பயிர் வளர்த்தல், திருவெம்பாவை-சிவயிரவு, கலைமகள் விழா போன்றவற்றில் திருமுறைப் பாடுதல்; தொழிலாளர் தினத்தில் பத்துமலை திருமுருக சன்னிதானத்தில் தொடர்ந்து இறைமறையோதல் என்றெல்லாம் 50 ஆண்டுகளாகத் தொடரும் சிவசண்முகத்தின் ஆன்மிகப் பணிக்கு மேலும் ஊக்கம் அளிப்பதாக நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது.

புனிதவதி, தருமன், இராஜேந்திரன், டத்தோ ராஜா சைமன், திரவியம், டாக்டர் பால தருமலிங்கம் உள்ளிட்டோருடன் சிவ சண்முகத்தின் திருமுறை மாணாக்கர்கள் ஏனையோரும் இதில் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை