
இன்னும் எட்டு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் இன்று பத்து மலை திருமுருக ஆலய வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட இளஞ்சிட்டுகள் தீபாவளி மகிழ்ச்சியில் திளைத்தனர்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் பத்து மலை முருகன் ஆலயத்தை ஒட்டி உள்ள தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த இளம் மாணவர்களைத் திரட்டி அவர்களுக்கான தீபாவளி உபசரிப்பு நடைபெற்றது.

அரசுசாரா அமைப்பாளர் டி எஸ் கே இயக்கத்தின் சார்பில் இந்தத் தீபாவளி விருந்தோம்பல் நடைபெற்றது.
இதனால் தமிழ் பள்ளிகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டினரான டி எஸ் கே குழுவினர் என ஆயிரக்கணக்கானோர் அணி திரண்டதால் பத்து மலை வளாகம் திக்குமுக்காடியது.

கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர்களில் ஒருவரும் மகிமா எனப்படும் இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் டிஎஸ்கே அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவகுமார் ஏற்பாட்டில் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் இளம் பிள்ளைகளுக்கு தீபாவளி குதூகலத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு மேற்கொண்டு வருவதாகவும் வரும் ஆண்டில் இதைவிட இன்னும் சிறப்பாகவும் இன்னும் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களின் முகத்தில் இன்பத்தை காணும் எண்ணம் இருப்பதாக சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


