
நாளுக்கு நாள் கனிந்து வருகிறார் இணைவேந்தர், சொல்வேந்தர் டத்தோஸ்ரீ மு.சரவணன். காலவோட்டத்தில் கவிவேந்தராகவும் உருவாவாரோ என்று எண்ணிடவும் தோன்றுகிறது; இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் கவி பாடுகிறார். வினாவையும் பாவாகவேத் தொடுக்கிறார். பதிலையும் கவியாகவேப் பொழிகிறார்.
பேராக் மாநிலத்துத் தமிழ்ச் செம்மல்களான கம்பார் கனிமொழி குப்புசாமியின் நேரடி இலக்கண வகுப்பு அல்லது முனைவர் மனோண்மணி தேவியின் இணையவழி இலக்கண வகுப்பில் சேர்ந்து கொஞ்ச காலத்திற்கு, நாளைய தேசியத் தலைவரான டாக்டர் மு.சரவணன் மாணவ வேடம் தரித்தால் பாவலர் என்ற பட்டமும் வசமாகும்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னம் எனக் கருதுகிறேன். இம்மலையகத் தமிழ்க் குலத்தின் அந்நாளைத் தானைத் தலைவரான துன் ச.சா. வேலனார், நாட்டின் பாரம்பரிய தலைநகரத்தில் இலக்கிய-கலை நிகழ்ச்சிக்காவே வாய்த்திட்ட கச்சித அரங்கமான டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கத்தில் கலந்துகொண்ட ஒரு நூல் வெளியீட்டு விழா அது.
100 விழுக்காட்டு ஏற்பாட்டுடன் அரங்கமே காத்திருந்தது அவருக்காக; காலம் தப்பாமையில் கடுகளவும் தப்பாத துன்’னும் வந்தார் சொன்னபடி, சொன்ன நேரத்திற்கு.
அவருடன் சேர்ந்து பலகாரம் உண்ணவும் சுவைநீர் பருகவும் சில பெரிய மனிதர்கள் காத்திருந்தனர். குறித்த மேசையருகில் வந்தமர்ந்த அவர், ஒரு பாசிப்பயற்று உருண்டையை எடுத்து உண்டார். சிறிதளவு சாப்பிட்டதும், பால் பிழியப்பட்ட தேங்காய்(சக்கை)ப் பூவைக் கொண்டு இந்தப் பாசிப்பருப்பு உருண்டை சமைக்கப்பட்டுள்ளது என்று பெருநகையுடன் சாமிவேலனார் சொன்னபொழுது, சுற்றி அமர்ந்து இருந்தவர்கள் எல்லாம் சிறுநகை. புரிந்தனர்.
அந்தப் பலகாரத்தை வாங்கி வந்தவரும் பரிமாறிய சமைத்தவர்களும் எந்நகையும் புரியாமல், இளநகை என்னும் மென்னகைக்கும் வழியின்றி பல் தெரியா வண்ணம் இதழ்ப் பூட்டிட்டனர் வாய்க்கு! முகத்திலும் காட்டினர் இறுக்கம்!
அதைப்போல கடந்த செப்டம்பர்த் திங்கள் 20-ஆம் நாள், காரி பிற்பகலில் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் கொக்கியும் திறவுகோலும் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றி, நூலை வெளியீடு செய்வதற்காக வருகை தந்த சரவணன், உரையாற்றும் முன்னமே, இந்த நூலில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளையும் நூலாசிரியர் மு. கோவிந்தன் என்னும் தமிழரசு மட்டும் எழுதவில்லை; அவரின் துணையாரும் பாதியெழுதி இருப்பதைக் கண்டுபிடித்து சொன்னார்.

சாமிவேலுவின் அந்தக் கண்டுபிடிப்பு அருகில் நின்றுகொண்டிருந்த என்போன்றோருக்கு வியப்பாக இருந்தது; அந்தப் பலகாரத்தை வாங்கி வந்தவர்களோ சமைத்தவர்களோ கொஞ்சமாவது உள்ளுக்குள் நெளிந்திருப்பர்.
சரவணனாரின் கண்டுபிடிப்பால் நூலாசிரியரும் தமிழ் நெஞ்சருமான தமிழரசு மனதார சிரித்து மகிழ்ந்தார்.
கொக்கியும் திறவிக் கொத்தும் நூலில் இடம்பெற்றுள்ள ஒழுகும் கூரை, ஈரத் துணி போன்ற 15 தலைப்புகளில் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன; இவற்றுள் கொக்கியும் திறவிக் கொத்தும் என்னும் தலைப்பில் இடம்பெற்ற கதையும் ஒன்று; அந்தத் தலைப்பையே நூலுக்கு மகுடமாக்கி இருக்கிறார் மேநாள் ஆசிரியர் தமிழரசு.
பெரும்பாலான கதைகளில் அரசியல் நெடி அதிகமாக வீசிய பொழுதும் அந்த நிகழ்ச்சியில் பேசிய பெருமக்கள் யாவரும் அதை கடந்தே சென்றனர்; அதைப்பற்றியும் குறிப்பிட்ட சரவணன், ஒருவேளை தான் அரசியல்வாதியாக இருப்பதால் அரசியல் குறித்த பார்வையை மற்ற அனைவரும் கடந்து சென்றிருக்கலாம் என்று கூறினார்.
தமிழறிஞர்களான திருசெல்வனாரும் இரா.திருமாவளவனாரும் ஆற்றிய உரைகளைக் கேட்கும் வாழ்ப்பை இழந்துவிட்டேன்.
சமூகத்தில் நிலவுகின்ற அவலங்களையும் தான் எதிர்கொண்ட சம்பவங்களின்வழி ஏற்பட்ட பட்டறிவையும் மிகவும் இயல்பாக கதை முழுக்க பரவ விட்டிருக்கிறார் எழுத்தாளர் தமிழரசன் என்றார் சரவணன்.
கொக்கியும் திறவி கொத்தும் நூலில் இடம் பெற்றுள்ள கதைகளின் தாக்கம் 9 நாட்களை எட்டிய பின்னும் அதிலிருந்து சரவணனார் மீளவில்லை போலும்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 28-ஆம் நாள் பெர்னாட்ஷாவின் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றிய பொழுதும் கொக்கியும் திறவிக் கொத்தும் நூலைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

என்னதான் குடை பிடித்து நடந்தாலும் மழை அடர்த்தியாக இருந்தால் நனையத்தான் செய்வோம்; அதைப்போல, பல்வேறு நேர நெருக்கடிக்கு இடையில் வாழும் பொழுதிலும் கொக்கியும் திறவுகோலும் என்ற நூலில் இடம் பெற்றுள்ள கதைகளின் தாக்கம் தன்னைத் தொற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
கொக்கியும் திறவுகோலும் நூல் வெளியிட்டு இலக்கிய நிகழ்வில் இலக்கிய எல்லையை கடந்து அரசியல் சார்ந்தும் ஆன்மீகம் சார்ந்தும் ஏராளமான கருத்துக்களை அள்ளி தெளித்தார் சரவணன்.
அரசியலில் ஈடுபட்டுள்ள வட்டார தலைவர்கள் அல்லது மூன்றாம் கட்ட தலைவர்கள் ‘3 பி’ என்ற நிலையை வழுவாது மேற்கொண்டு வருகின்றனர்; கடந்த நூற்றாண்டின் நிறைவுக் கட்டத்தில் வட்டார தலைவர்கள் எல்லாம் நிறைய திட்டங்களை-Programme நிறைவேற்றி உயர்மட்டத் தலைவர்களிடமும் தேசிய தலைவரிடமும் நல்ல பெயர் வாங்க முயன்றனர்;
இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் பெரும்பாலான வட்டாரத் தலைவர்கள் தேசிய தலைமையிடம் ஏதாவது மானியம் அல்லது நிதி உதவி-Peruntukan பெறுவதில் முனைப்பு காட்டினர்;
இன்றைய காலக்கட்டத்தில் எல்லா அரசியல் தலைவர்களும் ஏதாவது திட்டம் கிடைக்குமா (Project) என்பதிலேயே குறியாக இருக்கின்றனர். Programme, Peruntukan, Project என்னும் ஆங்கில-தேசிய மொழிச் சொற்களில் இடம்பெற்ற முதலெழுத்துதான் அந்த மூன்று ‘3 பி’-க்கள் என்றும் எந்த ‘பி’ என்பது காலந்தோறும் மாறி வந்திருக்கிறது என்றும் நகைமிக பேசினார் சரவணன்.
அரசியல் தலைவர்களிடம் ஏறக்குறைய சேவை மனப்பான்மையும் தொண்டறமும் அடியோடு மங்கிவிட்ட நிலையில் மக்கள் பிரதிநிதி என்பதற்கான தகுதியும் தரமும் வெகுவாக குறைந்துவிட்டன.
ஒருவர் மாண்புமிகு என்று அழைக்கும் அளவிற்கு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால், சம்பந்தப்பட்ட தலைவர் அதற்கு முன்னால் ஏறக்குறைய 10, 15 ஆண்டுகளுக்கு தமிழ் சமுதாயத்திற்கும் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவராக இருந்திருப்பார்.

இப்பொழுது அப்படியெல்லாம் இல்லை; தமிழ் மொழி தெரியாதவர்களே மக்கள் பிரதிநிதியாக இருக்கின்றனர்; இன்னும் கொஞ்ச கால அரசியலுக்குப் பிறகு தமிழரே அல்லாதவர்கள் கூட தமிழர்களை அரசியலில் பிரதிபலிக்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதற்கெல்லாம் அணை கோலவேண்டும் என்றால் நாம் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று இலக்கிய நிகழ்வில் செம்மாந்த அரசியல் கருத்தை முன்வைத்தார் இணைவேந்தர் டத்தோஸ்ரீ மு. சரவணன்.
அரசியல் எல்லைதான் இப்படி பழுதுபட்டு இருக்கிறது என்றால் ஆன்மிக எல்லை இன்னும் சீர்கெட்டு வருவதைப் பற்றி எவருக்குமே அக்கறை இல்லை.
ஒன்றைக் கொடுத்து பிரிதொன்றைக் கேட்பதுதான் பக்தி மார்க்கம் என்று ஆகிவிட்ட நிலையில் கல் வியாபாரிகளும் திரவ வியாபாரிகளும் ஆன்மிக எல்லையில் பயணிப்பதைப் பற்றி எந்த தரப்பினருக்கும் விழிப்புணர்வு இல்லை.
அவனின்றி ஆவது ஏதுமில்லை என்று இறைநேச எல்லையில் பயணிக்கிறவர்கள் இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து உள்ள சுத்தியோடு அவனை வணங்குகின்ற நிலை தற்பொழுதெல்லாம் மாறி இறைநெறி அற்றோரும் வர்த்தக நோக்கோரும் ஏதாவது கல்லைக் காட்டி, ‘இந்தக் கல்லை அணிந்தால் நன்மை விளையும்; மறுநாளே அதிர்ஷ்டம் பொத்துக் கொண்டு தொப்பன்று விழும்’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர்; ஆன்மிகத்தை வணிக மயமாக்குகின்றனர்; இதைப்பற்றி இன்றைய பகுத்தறிவு இயக்கத்தினர் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் விந்தையாக இருக்கிறது; சமயத் தலைவர்களும் இதுவெல்லாம் ஆன்மீக எல்லைக்கு அப்பாற்பட்டது என்று கண்டிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் பக்த பெருமக்களிடம் எச்சரிக்கை உணர்வைக்கூட ஏற்படுத்துவதில்லை.
இதைவிட ஏதாவது திரவத்தை கொடுத்து, இது மந்திரித்த நீர், இதை வாகனத்தின்மீது தெளித்தால் விபத்து என்பது நேரவேநேராது; எல்லாக் காலத்திலும் பயமின்றி பயணித்து பத்திரமாக வீடுவந்து சேரலாம் என்றெல்ல்ம் கூவி வெற்று நீரை விற்பனை செய்கின்றனர். இதற்கும் ஆன்மீகத்திற்கும் ஆண்டவனை வழிபடுவதற்கும் என்ன தொடர்பு என்று எவரும் சிந்திப்பதில்லை; இந்த விடயத்தில் கூட மலேசிய திராவிட இயக்கம் வழக்கம்போல மௌனித்து சோம்பிக் கிடக்கிறது; சமயத் தலைவர்களாவது இது போன்ற மூடநம்பிக்கைகளை விதைப்போரை அடையாளம் காணவும் அவர்களிடமிருந்து பக்த பெருமக்கள் விலகி இருக்கும்படி கேட்கவும் திராணியற்று கிடக்கினறனர் என்று மூடநம்பிக்கை குறித்தும் டத்தோஸ்ரீ சரவணன் பேசினார்.

இலக்கிய நிகழ்ச்சியில் அரசியலோ தேவையில்லாத பிறவற்றையோ பேசக்கூடாது என்பதில் தான் எப்போதும் விழிப்புடன் இருப்பதாகத் தெரிவித்த சரவணன் சிலவேளைகளில் தவிர்க்க முடியவில்லை; சிலவற்றை சொல்லித்தான் தீர வேண்டி இருக்கிறது என்றார்.
பொதுவாக ஒரு நூலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த நூலுக்கு அணிந்துரையோ வாழ்த்துரையோ அளித்திருக்கின்ற பெருமக்களை பற்றிய விவரத்தையும் அவர்கள் தெரிவித்து இருக்கின்ற கருத்தையும் படித்தாலே சம்பந்தப்பட்ட நூலின் தன்மை எப்படிப் பட்டதென்று தெரிந்துவிடும்
இந்தக் ‘கொக்கியும் திறவுகோலும்’ நூலுக்கு தமிழ் நெறி கழகத் தலைவர் தமிழ்வாணர் திருமாவளவன், தமிழ் அறிஞர் திருச்செல்வனார் போன்றோர் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றனர். மொத்தம் ஏழு பேர் இவ்வாறு அணிந்துரை வாழ்த்துரை என வழங்கி இருப்பதைக் கொண்டு இந்நூல் எத்தகைய படைப்பு என்பதை நாம் ஊகிக்கலாம்.
உன்னுடைய நண்பன் யார் என்று சொல்; அதன் பிறகு நீ யார் என்று நான் அடையாளம் காண்கிறேன் என்று ஒரு மூத்த சொல்லாடல் உண்டு; அதைப்போல இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்ற பெருமக்களின் வாழ்த்துச் செய்திகளை வைத்து இந்த நூல் எப்படிப்பட்டது என்பதற்கு ஏற்ப, கையில் எடுத்த உடனேயே எத்தகைய நேரத் தட்டுப்பாடு வந்தாலும் கீழேவைக்க மனம் இல்லாத அளவிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது அடுத்தடுத்த பக்கங்களுக்கு;

நூலைப் பற்றிய கண்ணோட்டவுரை ஆற்றிய ஜாசின் தேவராஜனை மெச்சினார் சரவணன்; “ஆய்வுரை என்னும் பெயரில் சிலர் ஆற்றும் கொலையுரைப் போன்றன்றி இருந்தது இன்றைய இவருரை”;
1816-இல் முதன் முதலாக அன்றைய மலாயாவில் தமிழ்க் கல்வியகம் தொடங்காப்பட்டது; அடுத்து சிரம்பான் நகரில் தமிழ்ப் பாடசாலை உருவானது; தொடர்ந்து அடுத்தடுத்து இந்த நாடு முழுவது தமிழ்ப் பள்ளிகள் உருவாவதற்கும் வளர்வதற்கும் துன் வீ. திருஞான சம்பந்தனும் துன் சாமிவேலுவும் ஆற்றிய தொண்டு சாதாரணமானதல்ல என்று குறிப்பிட்டார் சரவணன்.
நூல் வெளியீட்டு விழா இடம்பெற்ற மலாயாப் பல்கலைக்கழக டி.கே.யு. விரவரங்கத்தில் கூடியிருந்தவர்களைக் கண்டு நெகிழ்ந்த சரவணன், “இந்த அரங்கம் புதுமை மனிதர்கள்; சமுதாயத்தின்பால் பற்றுகொண்டோர்; மொழியின்பால் அக்கறைக் கொண்டோர் நிறைந்த அவையாக இருக்கிறது; மலேசியத் தமிழ்ச் சமுதாயம் சவால் நிறைந்த இக்கட்டான நிலையை எதிர்கொண்டிருக்கும் இந்த வேளையில் நல்லோர் வெளியில் வருவதையும் அவர்களைக் காண்பதையும் பிரபந்தங்களின் பேராசான் குமரகுருபரனின் திருவருளெனக் கொள்கிறேன்” என்றார்.
தமிழ்ப் பள்ளி கட்டடத்திற்காக நிதி திரட்ட முனைந்தால் வெ.5ஆயிரத்தைத் திரட்டுவதற்குள் மூச்சு வாங்கி, போதும்போதும் என்றாகிறது; ஆனால், ஆலய குடமுழுக்கு விழாவுக்காக வெ.12இலட்சம் எளிதாக சேர்கிறது என்னும் கருத்து ஒரு சிறுகதையில் சொல்லப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தல கோபுரங்கள் யாவும் வர்த்தக சின்னங்களாக உருமாற, எழுத்தாளர்களோ எழுதியெழுதி ஏமாந்தவர்களாக பின்னேற்றம் கண்டு வருகின்றனர்;
நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஒரு நூலை வாங்கி ஆதரிப்போர் அருகிவருகின்றனர்; இலக்கிய படைப்பாளிகளைக் கொண்டாடாத சமுதாயமாக மாறிவருகின்ற நிலையிலும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருப்போரை யெண்ணி பெருமைகொள்வதாகக் குறிப்பிட்டார் சரவணன்.

கொள்கை வளர்ச்சி தேய்பிறையாகி விட்டது; வட்டத்துக்குள் தண்டவாளம் என்றெல்லாம் தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுள்ள நூலாசிரியரின் ஆதங்கம் புரிகிறது; பெரும்பாலும் கற்பனைக்கு இடமின்றி தன் வாழ்க்கைப் பயணத்தில் எதிர்கொண்ட உண்மைச் சம்பவங்க்களை தன் சிறுகதைகளின்வழி கொட்டித் தீர்த்திருக்கிறார்.
“கூழைக் கும்பிடு போடுகிறவன்தான் வாழ்வை வசப்படுத்துகிறான்” என்று பேசிய இல்க்கிய வேந்தர் சரவணன்
15 கதைகளில் 7 சமுதாயம் சார்ந்தன; 2 அரசியல் பற்றியன; 2 இளந்தம்பதியர் குறித்தன; 1 குடிப்பழக்கம் குறித்தது என்பதைப் பட்டியலிட்ட தேவராஜனைப் பாராட்டினார்;
இதில் இடம்பெற்றுள்ள சிறு கதைகளின் பாங்கும் அவை எழுதப்பட்டிருக்கின்ற விதமும் தனி ரகம் என்று குறிப்பிட்டு, நூலாசிரியர் தமிழழகனுக்கு பாராட்டு மழை பொழிந்தார் சரவணன்;
இது இலக்கிய நிகழ்ச்சி என்பதால், மூப்பிலா தமிழன்னையை வணங்கி உரையைத் தொடங்கிய சரவணன், இடையிடையே நகைச்சுவைக் கருத்திற்கும் குறைவைக்கவில்லை;
வீட்டுக்காரியின்பால் விருப்பம் இருந்தாலும்
நாட்டுக்காரியின் மீதும் நாட்டம் அதிகம் – என்னும் கவிதையை சரவண புன்சிரிப்புடன் சொல்ல, அரங்கத்தோர் மென்சிரிப்புடன் இரசித்தனர்.
இந்த மேடை பேராசிரியர் கந்தசாமி, உமாபதி அன்பரசு, குழந்தைவேலு, முனைவர் சிவபாலன், குழந்தைவேலு, கல்யாண சுந்தரனார், மன்னர் மன்னன் போன்ற கல்வியாளர்கள், மூத்த பத்திரிகையாளர் டத்தோ எம்.இராஜன், சமூக-மொழி ஆர்வலர்கள் என மேன்மக்கள் நிறைந்த அவையில் நடைபெற்ற இந்த விழா, பொதுவாக மலேசிய இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு பழக்கமில்லாத அரங்கத்தில் நடைபெற்றது.
கொக்கியும் திறவி கொத்தும் நூலை அதிகாரபூர்வமாக வெளியீடு செய்த பொழுது சமுதாய வீதியில் அதிகமாக மதிக்கப்பெறும் மாண்புறு தலைவரும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனருமான டத்தோ பா சகாதேவன் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.
கொக்கியும் திறவிக் கொத்தும் என்னும் நூல், தன்னை கையில் ஏந்துவோரின் மனதை கொக்கிப் போட்டு இழுக்கும் என்பது திண்ணம். ஓர் இலக்கியப் படைப்பை மற்றவர்கள் ஆதரிப்பது ஒருபுறம் இருக்க, அதனைச் சமைத்தவர் முதலில் மதிக்க வேண்டும் என்பதை சொல்லி முடித்தார்.


