
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்-பிரிமாஸ், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலிந்த மக்களுக்கு பண்டிகைக் கால பொருள்களுடன் உதவிக்கரம் நீட்டி உள்ளது.
வெள்ளி விழா ஆண்டில் பயணிக்கும் இந்த உணவுத் தொழில் சார் அமைப்பு, அண்மையில் தன் வெள்ளி விழா ஆண்டுக் கூட்டத்தை வழக்கத்தைவிட அதிகமான உற்சாகத்துடன் நிகழ்த்திக் காட்டியது.

தற்போதைய சூழலில் இன்னும் நான்கு நாட்களில் தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில், கோலாலம்பூர் சுற்று வட்டார் பகுதியில் வாழ்கின்ற ஏழைக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உணவுப் பண்டங்கள், பலகாரப் பொருள்களுடன் அன்பளிப்பு செய்யும் நிகழ்ச்சியை நேற்று, அக்டோபர் 14 செவ்வாய் கிழமை முன்னிரவில் கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் சாட் மசாலா உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஷ் என்கின்ற ஜே கோவிந்தசாமி, துணைத்தலைவர் சி கிருஷ்ணன், செயலாளர் என். சண்முகம் உள்ளிட்ட நிர்வாகக் குழு பொறுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று பொதுமக்களுக்கு பண்டிகைக் கால அன்பளிப்பை வழங்கினார்.

பிரிமாஸ் நிருவாகக் குழுவின் உறுப்பினர்களே,, இதற்கான நிதியை வழங்கி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் விதமாக நலிந்த மக்களுக்கு பண்டிகைக் கால அன்பளிப்பு செய்தது ஒரு சமூக நல முன்னெடுப்பாகத் தெரிகிறது.
இந்தியர்களின் தமிழர்களின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான உணவகத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற இந்த அமைப்பின் தலைவர்கள், சமூக நல உதவித் திட்டங்களையும் மேற்கொள்வது பாராட்டிற்கு உரியது.


