
மலேசியத் தமிழர்களுக்கு அரண்போன்ற தாய்மொழியாம் தமிழை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் அதனை செழிக்கச் செய்வதிலும் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி அறவாரியம் தன் பங்களிப்பை தொடர்ந்து வழங்கும் என்று அறவாரியச் செயலரும் அறவாரியத்தின் ஊற்றுக்கண்ணாம் தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயலரும் தலைமை இயக்குனருமான டத்தோ பா. சகாதேவன் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கத்தின் 33வது (2025-ஆம் ஆண்டு) தமிழ் இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழா நேற்று அக்டோபர் 16-ஆம் நாள் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு தலைமை உரை நிகழ்த்தியபோது, “மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வில் துறை மற்றும் தஞ்சோங் மாலிம் கல்வியியல் உயர்கல்வி நிறுவனமான உப்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மரபுக் கவிதை பயிலரங்கம் சிறுகதைப் பயிற்சி ஆக்கிவற்றையெல்லாம் நடத்தி வருகிறோம்”.

மரபுக் கவிதைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் யாப்பிலக்கென வகுப்பிற்கும் டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் சார்பில் முன்னுரிமை அளித்து வருகிறோம்”.
டான்ஸ்ரீ மொழி-இலக்கிய அறவாரித்தின் சார்பில் நடத்தப்பட்டு வந்த பன்னாட்டு புத்தக பரிசுத் திட்டத்திற்கு தகுதி இல்லாத நூல்கள் அதிகமாக வந்து சேர்ந்ததால் அது இடையில் நிறுத்தப்பட்டது.

அதன் கட்டமைப்பு சீர்திருத்தப்பட்டு தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் நடைபெற இருக்கிறது.
மொத்தத்தில் தமிழ் வளர்ச்சிக்கும் நம் பண்பாட்டு மேம்பாட்டிற்கும் கூட்டுறவு சங்கம் தொடர்ந்து பாடுபடும் என்று சகாதேவன் மேலும் பேசினார்.
டான்ஸ்ரீ மொழி இலக்கிய அறவாரியத்தின் அறங்காவலர்களான டான்ஸ்ரீ க. குமரன், கிருஷ்ணன் மணியன், கூட்டுறவு சங்க நிர்வாக செயலாளர் டத்தோ ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், காவல்துறை மேனாள் அதிகாரியும் இலக்கிய சொற்பொழிவாளருமான டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் சிறப்புரை ஆற்றினார்.

2025-ஆம் ஆண்டு இலக்கிய பரிசுப் போட்டியில் பகாங் பெந்தோங்கைச் சேர்ந்த உமாதேவி வீராசாமி முதல் பரிசை. வென்றார்; முதல் பரிசுத் தொகை வெ.2,500.
உரைவீச்சு என்னும் புதுக் கவிதைப் பிரிவில் பினாங்கு ஜெயலட்சுமி என்கின்ற சிலாலிஸ் மாணிக்கம் முதல் பரிசு வென்றார்; அதைப்போல மரபுக் கவிதைப் பிரிவில் பினாங்கு தனசேகரன் கோரக்கியும் கட்டுரைப் பிரிவில் கெடா மாநிலம் கூலிமை சேர்ந்த கணேஷ் சந்திரனும் மாணவர் சிறுகதை பிரிவில் உப்சி பல்கலைக்கழக மாணவி நிவாசினி கிருஷ்ணமூர்த்தியும் முதல் பரிசு வென்றனர்.


