
கோலாலம்பூர் நவ 12-
இந்தியாவில் புகழ்பெற்ற டாட்டா கொன்சால்டன்ட் நிறுவனத்தின் ஆதரவோடு இணைய பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்க 30 இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று நிலையான மற்றும் உள்ளடக்கிய ஆலோசனைக் குழு (SICC) தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
முதல் கட்டமாக இந்தப் பயிற்சியில் 30 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
அதன் பின்னர் மக்களின் ஆதரவை வைத்து அடுத்தக்கட்ட பயிற்சிகள் தொடரும் என்றும் அவர் சொன்னார்.

இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சித் திட்டம் தொடர்பில் ஆயிரம் வெள்ளி முன்பணம் செலுத்த வேண்டும்.
பயிற்சியை முடித்தபின்னர் இந்தப் பணம் திருப்பி தரப்படும் .
பிரதமர் துறை அமைச்சு ஆதரவோடு நடைபெறும் இந்தப் பயிற்சி இந்திய சமுதாயத்திற்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு பெரும் நன்மையை அளிக்கும்.
டாட்டா கொன்சால்டன்ட் நிறுவனம் மற்றும் ‘கிளானா பிசினஸ் சென்டர் – எஎம்இ பயிற்சி நிறுவனம் இந்த இரண்டு வார பயிற்சியை நடத்துகிறது.

வரும் நவம்பர் 17 ஆம் தேதி இந்த பயிற்சி பட்டறையை அதிகாரப்பூர்வமாக தொடங்கவிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
உலகம் இன்று மின்னல் வேகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையதளத்தில் வளர்ந்து வருகிறது.
அந்த வகையில் இணையப் பாதுகாப்புத் துறையில் இந்தியர்கள் பின் தங்கிவிடாமல் இருக்க இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

இதழ் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிளானா பிசினஸ் சென்டர் எஎம்இ பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அன்புமணி கந்தசாமி, பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், டாட்டா கொன்சால்டன்ட் நிறுவனத்தின் பயிற்றுநர் சந்தீப் மற்றும் பிரதமர் துறையைச் சேர்ந்த மு.பூபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



