(கல்விக்காகவும் தமிழுக்காகவும் உழைத்தவர்களை வாழும் காலத்திலேயே நினைவுகூர்ந்து பாராட்டி வாழ்த்துவது நன்று)

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைமைக் கழக ஆதரவோடு, மலாக்கா மாநிலத் தொடர்புக்குழுவின் ஏற்பாட்டில், கழகக் குடும்பங்களின் ஒன்றுகூடல் விழா மலாக்கா, அலோர் காஜா ‘Village Resort’ என்னும் இடத்தில் நவம்பர் மாதத் தொடக்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வில் மாலை 6:00 மணியளவில், கல்வியாளரும் சமூக ஆர்வலருமான தொ.க. நாராயணசாமிக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது; ‘கல்விச்செம்மல்’ என்று பொறிக்கப்பட்டச் சின்னம் அவருக்கு விருதாக அளிக்கப்பட்டு, 84-ஆவது பிறந்தநாள் விழாவும் ஒருசேர கொண்டாடப் பட்டது.

பிரிட்டீஷ்மலாயா காலத்தில் பிறந்து, சப்பானியர் காலத்து மரவள்ளி கிழங்கு அத்தியாயம் – சயாம் இரயில் திட்டத் தாக்கங்களுடன் வளர்ந்து இரண்டாம் உலகப் போருக்குப்பின் மீண்டும் பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் தன் இளமை பருவத்தைத் தொடர்ந்த தொ.க. நாராயண சாமி, தன்னுடைய கல்விப் பயணத்தில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தேசிய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்ற முதல் தமிழர் என்னும் பெருமையுடன் தாய் மொழியாம் தமிழையும் விட்டுக் கொடுக்காமல் ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தவர் கல்வியாளர் நாராயண சாமி.
“விரிவுரையாளராகத் தன் கல்விப் பயணத்தை நிறைவு செய்தவர் ஐயா தொ.க. நாராயணசாமி” என்று கழகத் தலைவர் மானமிகு நாக.பஞ்சு ஆற்றிய தலைமை உரையின்போது பாராட்டினார்.

அதேவேளை, தமிழ் வளர்ச்சி, தமிழிய பண்பாட்டு மீட்சி, தமிழர் ஒற்றுமைக் கெல்லாம் அயராமல்- சளைக்காமல் தொடர்ந்து பாடாற்றி வருபவர் இந்தத் தமிழ்மகன் தொ.க.நாராயணசாமி என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
85 அகவையை எட்டியுள்ள தொ.க. நாராயணசாமியின் வாழ்க்கை முறை, தமிழர்களுக்கு எண்ணற்ற வகையில் எடுத்துக்காட்டாக அமைகிறது. உடல் நலம் பேணுதல், மனநலத்தைச் செம்மையுறப் பாதுகாத்தல் இன ஓர்மை, மொழிப் பாதுகாப்பு, தாயகப் பெருமையை நிலைநாட்டல் குறித்தெல்லாம் செம்மாந்த வாழ்வைத் தொடரும் இவர், நாமெல்லாம் வாழும் காலத்தில் வாழ்கின்ற நற்றமிழர்.

சிறந்த கல்வியாளரானத் தொ.க. நாராயணசாமி எப்போதும் புதுமைக் கருத்துடையவர்; சமூக மறுமலர்ச்சி எண்ணம் கொண்டவர்; ஆழமான அரசியல் பார்வையும் விமர்சன நோக்கும் நிறைந்தவர்; நெஞ்சைப் பிளந்து பளிச்செனக் காட்டுவதைப் போல எதையும் மறைக்காமல் ஒலிவு மறைவு இன்றி மனதில் பட்டதைப் பட்டென வெளிப்படுத்தும் நெஞ்சுரம் மிக்கவர்.
இவரின் தந்தை கருப்பையா நெல், மரவள்ளி கிழங்கு போன்றவற்றை வளர்த்து தென்னந்தோப்பையும் கொண்டிருந்த வேளாண் வாசியாக இருந்தாலும் நாராயணசாமிக்கு கல்வியின்பால் மிகுந்த நாட்டம் சிறு வயதிலேயே மிகுந்திருந்தது.

அகில மலாயா தமிழர் சங்கம் தொடங்கியக் காலத்தில் அதன் அலுவலகமாகத் தன் வீட்டின் ஒரு பகுதியை வழங்கியவர் இவர்; தமிழ்ப் பேரவைச் செயலாளராகவும் மலாய் மொழி இயக்கத்தின் துணைச் செயலாளராகவும் தொ.க.நாராயணசாமி ஒரே நேரத்தில் செயல் பட்டிருக்கிறார். இவ்வாறெல்லாம், எண்ணற்ற சிறப்பைக் கொண்டிருக்கும் தொ.க. நாராயணசாமி தமிழ் மொழிக்காகவும் தமிழர் ஒற்றுமைக்காகவும் அதிகமாகப் பாடுபட்டிருக்கிறார்.
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் மதியுரைஞர், ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு. முத்தையா ‘கல்விச்செம்மல்’ தொ.க. நாராயணசாமி குறித்து நீண்டதொரு வரலாற்றுக் குறிப்பை வழங்கினார்.

அவ்விழாவில், மலாக்கா மாநில சட்டமன்ற மேனாள் உறுப்பினர் க. சாமிநாதன், மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர், மானமிகு. பாரதி சாமிக்கண்ணு, அலோர் காஜா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மதிப்புமிகு. பார்வதி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையையும் பாராட்டுதலையும் வழங்கினர்.
விழாவில், ஏற்புரை வழங்கிய ‘கல்விச்செம்மல்’ ஐயா தொ.க. நாராயணசாமி, நாட்டில், இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைப் பற்றியும்; பள்ளி, கல்லூரிகளின் நமது பிள்ளைகள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சமூகச் சீர்கேடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டுரசு வளாகம், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மாநிலக் கழகக் குடும்பங்களைச் சேர்ந்த மகளிர் சிறுவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர், அன்பரசன் சண்முகம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நிறைவேற்றிய வேளையில், கழகப் பொருளாளர், தமிழ் முல்லை பஞ்சு, மத்தியச் செயலவை உறுப்பினர் யோகேஸ்வரன் முருகன், மலாக்கா மாநிலப் பொறுப்பாளர் இர. மகாதேவ் ஆகியோரும் தத்தம் பங்கினை சிறப்பாக ஆற்றினர்.
(விழா நடந்த இந்த இரண்டு நாள்களும் விருந்தோம்பலை ‘பெரியார் பெருந்தொண்டர்’ பாலசுந்தரன் வேலு, சகோதரி அன்புச்செல்வி இருவரும் நல்ல முறையில் வழங்கினர் என்று தலைவர் நாக.பஞ்சு பாராட்டினார்.




