
32 வயது இந்திய ஆடவன் சமூக வலைதள செயலிகளில் ஒன்றான Snapchat மூலம் தன்னை இடைநிலைப் பள்ளி மாணவனைப் போல பாவனை செய்து, அறிமுகப்படுத்திக் கொண்டு அன்பாக பேசுவைதைப் போல நடிப்பது; வாழ்த்துச் செய்தி அனுப்புவது; நலம் விசாரிப்பது; ஏதும் தேவையா எனக் கேட்டு அக்கறைக் காட்டுவதாக நடிப்பது என்றெல்லாம் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் காதலிப்பதாக நாடகமாடி சம்பந்தப்பட்ட இளம் மாணவிகளை மயக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான்.
தான் விரித்த காதல் வலையில் சிக்கிய பெண்களிடம் காதல் ரசம் சொட்டும்படி பேசி, மயக்கி, அப்படியே அந்தப் பெண்களின் தனி விவரம், குடும்பத் தகவல் எல்லாவற்றையும் கேட்டறிந்தபின், அதற்கு ஏற்றவாறு தன் வஞ்சக வேலையைக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் அந்த கனரக வாகன ஓட்டுனன்.

தனராஜ் த/பெ சுகுமாறன் என்னும் பெயரைக்கொண்ட இவ்வாடவன், சில நாட்கள் கழித்து, தன்னிடம் மயங்கிய பெண்களின் ஆடையில்லா தோற்றத்தைப் பெற்று சேமித்து வைத்துக்கொண்டபின், தன் குரூர வேலையைக் காட்டுவதை வாடிக்கையாகக் கொண்டதுடன், மாணவிகள் நம்பும்படி நடித்து தனக்கு இந்தச் சிக்கல் இருக்கிறது; அந்தப் பிரச்சினை இருக்கிறது என்றெல்லாம் கூறி அவர்களின் இரக்கத்தை சம்பாதிப்பதில் குறியாக இருந்திருக்கிறான் இந்தக் கெட்டவன்.
தனக்கு புற்று நோய் இருக்கிறது; சிகிச்சைக்காக மருத்துவ காப்புறுதி பணத்தை மீட்க வேண்டும்; உடனே சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் தான் விரைவில் இறக்க நேரிடும்; வெ.3மில்லியன் வரை கிடைக்கக்கூடிய காப்புறுதி பணத்தைப் பெறுவதன் தொடர்பில் சில அடிப்படை வேலைக்காக பணம் தேவைப்படுகிறது; என்றெல்லாம் இல்லாத கதைகளை அளந்து சம்பந்தப்பட்ட மாணவியரின் பரிவைப் பெறுவது தனராஜின் வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்தச் சுழலில், நேரம் கனிந்த சூழலாகப் பார்த்து, “வீட்டில் இருக்கும் தங்க ஆபரணங்களை எனக்கு இரவலாகத் தந்தால், அவற்றை அடைமானம் வைத்து, அந்தப் பணத்தின் மூலம் சில அடிப்படை பணியை மேற்கொண்டு, காப்புறுதி பணத்தை எடுத்தபின், அடகுவைத்த நகைகளை மீட்டு விரைவில் திருப்பித் தந்து விடுவேன் என்றெல்லாம் ஆளுக்குத் தகுந்தற்போல ஒவ்வொரு கதையாக அளந்து, சம்பந்தப்பட்ட மாணவிகளின் மூலம், நகைகளை அபகரிப்பதையேக் குறியாகக் கொண்டிருக்கிறான் இந்தக் கசடன்.

பிறகு என்ன?
காதல் மயக்கத்தால் பரிவு கொண்ட மாணவிக்கு, வீட்டில் இருக்கும் பொன் ஆபரணங்களைப் பெற்றோருக்குத் தெரியாமல் எடுத்துக் கொடுக்க மனம் துணியாதா என்ன?
இதன் வெளிப்பாடாக, அந்த அசடன் சொல்லும் விதமாக, குறிப்பிடும் இடத்தில் அஞ்சல் பெட்டியிலோ, பூச்செடி சாடியிலோ கமுக்கமாக வைத்துவிட்டுச் செல்வதைத் தவிர பொய்க்காதலில் வீழ்ந்த மாணவிக்கு வேறு வழி இல்லை;
அடுத்த விநாடியே சம்பந்தப்பட்ட ஆபரணங்களை, கோழிக் குஞ்சைக் கவரும் பருந்தைப் போல கவர்ந்து உடனே அவற்றை அடகு வைத்தோ அல்லது விற்றோ கிடைக்கும் பணத்தைக் கொண்டு மாவிடிப்பது-மஞ்சல் நீராடுவது என அமர்க்களமாக கும்மாளம் அடித்திருக்கிறான் இந்தப் போக்கிலி.
கன ரக வண்டியோட்டும் வேலையை விட்டுவிட்டு, விடுதிகளில் தங்கியபடி கிள்ளான் பள்ளத்தாக்கு, பேராக், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் எல்லாம், அதாவது, தன் மோசடிக் காதல் வலையில் சிக்கும் மாணவிகளின் இருப்பிடத்திற்கு ஏற்ப ஆங்காங்கே நகர்ந்தபடி தகிடுதத்தம் புரிந்திருக்கிறான் இந்தக் கிள்ளாடி.

வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போன நிலையில், அதைப் பற்றி பெற்றோர் கேட்டால், எடுத்துக் கொடுத்த நகை திரும்ப வராத நிலையில் பரிதவிப்பிற்கு ஆளாகும் மாணவி, கைவிரிப்பதும் தனக்கேதும் தெரியாதென நடிப்பதும் ஆங்காங்கே தொடர்ந்த வண்ணம் இருந்திருக்கிறது.
காரணம், தன்னைப் பற்றிய லட்சணம் அம்பலப்பட்டு விடுமே என்ற பயம்தான்; இதன் விளைவாக, வீட்டிற்கு வரும் உறவினரையும் நட்பினரையும் சந்தேகப்பட ஆரம்பித்தனர் சம்பந்தப்பட பெற்றோர்;
பொன் விலை விண்ணைத் தொடும் இக்காலத்தில், எப்போதோ ஆசை ஆசையாக வாங்கி சேமித்த வைத்த நகைகள் காணாமல் போனதால் பதற்றத்திற்கு ஆளாகும் பெற்றோர், உண்மையில் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

ஆனாலும், பொய்யும் பித்தலாட்டமும் எத்தனை காலம்தான் ஆட்டம் காட்டும்? எதற்கும் ஒரு முடிவுண்டு அல்லவா?
அந்தப்படிதான் சிக்கினான், இந்த நகைத் திருடனும்;
டாமன்சாரா பகுதியில் உள்ள ஓர் அடுக்ககத்தைச் சேர்ந்த தன்யா த/பெ ரமேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து, லோரி ஓட்டும் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, பொய்க் காதல் மூலம் அசல் ஆபரணங்களைக் களவாடிவந்தவனைப் பிடிக்கும் பணி பெட்டாலிங் ஜெயா தலைமைக் காவல் நிலையத்தைச் சேர்ந்த துப்பறியும் நிபுணர் ‘இன்ஸ்பெக்டர்’ டேனியிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெல்லக் கட்டியைக் கடிப்பதைப் போல, துப்பறியும் பணியில் மிகுந்த வேட்கைக் கொண்ட அதிகாரி ‘இன்ஸ்பெக்டர்’ டேனி, தனக்கேயுரிய பாணியில் பொறிவைத்து சம்பந்தப்பட்ட நகைத் திருடனை வளைத்து, அவனிடம் இருந்த ‘Oppo’ ரக கைப்பேசியை பறிமுதல் செய்து, ஆராய்ந்து பார்த்தபோது, அதில் ஏராளமான மாணவியரின் தொடர்பு எண்களும் ஆபாச படங்களும் காணொளித் தொகுப்புகளும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

‘இன்ஸ்பெக்டர்’ டேனி, அந்தந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, சம்பந்தப்பட்ட மாணவிகள் அச்சமடைந்து, தொடர்பை நிறுத்திக் கொள்கின்றனர். மேலும் பேச முடியாதபடி தன்னுடைய தொலைபேசி எண்ணை முடக்கியும் விடுகின்றனர் என்று ‘இன்ஸ்பெக்டர்’ டேனி தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை, டிசம்பர் முதல் நாள், பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, ஆபாசக் காட்சியும் காணொளித் தொகுப்பும் வைத்திருந்ததை ஒப்புக் கொண்ட அவ்வாடவன், நகைத் திருட்டை மறுத்து விசாரணைக் கோரிய நிலையில், நீதிபதி ஷாரி அன்வார் முஸ்தஃபா விதித்த பிணைத் தொகையை செலுத்த முடியாத அவ்வாடவன், தற்பொழுது காஜாங் சிறைவாசியாக மாறி இருக்கிறான். இதன் தொடர்பில் அடுத்த விசாரணை 2026, பிப்ரவரி 3-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.

சிலாங்கூர், பெட்டாலிங், டாமன்சாராவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 26-10-2025 அன்று தன்யா த/பெ ரமேசன் என்ற மாணவியிடம் இருந்து, வெ.15,000 மதிப்புள்ள 1 தங்க மோதிரம், 1 ஜோடி தங்க காதணி, 1 தங்க பதக்கம், 1 தங்க வளையல் ஆகியவற்றை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக தண்டனைச் சட்டம் பிரிவு 420-ஆவது பிரிவின்படி முதல் குற்றச்சாட்டும்,
23-11-2025 அன்று மதியம் 12:30 மணியளவில் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, ஜாலான் மஸ்ஜித் பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் சு.தனராஜ் வைத்திருந்த Oppo A16 ரக கைப்பேசியில் ஆபாசப் படங்களும் காணொளிக் காட்சித் தொகுப்பும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றவியல் சட்டம், 292-ஆவது பிரிவின்படி இரண்டாவது குற்றச்சாட்டும் சம்பந்தப்பட்ட ஆடவன்மீது சுமத்தப்பட்டன.
முதல் குற்றச்சாட்டு, 1 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை, சவுக்கடியுடன் தண்டமும் விதிக்கக் கூடியது.
இரண்டாவது குற்றச்சாட்டு, 3 ஆண்டுகள் வரையான சிறைவாசம், தண்டம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் சாத்தியம் கொண்டது.

இளம் மாணவிகள் இருக்கும் வீடுகளில் தங்க நகைகள் ஏதும் காணாமல் போயிருந்தால் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி(016-9988440 & 03-79586901) கேட்டுக் கொண்டுள்ள காவல் அதிகாரி டேனி, பள்ளி செல்லும் தங்கள் பெண்களின் நடவடிக்கை, கைப்பேசியைப் பயன்படுத்தும் விதம் குறித்தெல்லாம் விழிப்பாகவும் கண்காணிப்புடனும் இருக்கும்படி எச்சரிக்கையும் செய்துள்ளார்.


