Thursday, April 16, 2026

டுரியன் துங்கால் துப்பாக்கி சூடு!போலீஸ் படையின் பொய்வரலாறு அம்பலம்!!

மலாக்காவில் மூன்று உயிர்களை பலி கொண்ட அதிரடி வேட்டை, போலீசாரின் பல பத்தாண்டு கால பொய்வரலாற்றுக்கு தகுந்த சான்றாகும். 2025 நவம்பர் 24 அன்று மலாக்காவின் டுரியன் துங்காலில் மூன்று பேரை போலீசார் சுட்டுக் கொன்றது குறித்து மலேசிய முன்னேற்ற கட்சி-MAP தனது ஆழ்ந்த ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு அதிகாரிகளின் குழப்பமான நடவடிக்கைகள் இடையூறு விளைவிப்பது-டன் காவல் துறையின் நிர்வாக ரீதியிலான தோல்வியையும் அம்பலப்படுத்துகிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இத்தகைய தோல்வி, பொதுமக்களின் நம்பிக்கையை தொடர்ந்து சிதைப்பதுடன், காவல் துறை மேற்கொள்ளும் விசாரணைக்கான நம்பக தன்மையையும் சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது.

அதேவேளை, இத்தகைய பெரும் துயரத்திற்கு நடுவில் ஒரு அசாதாரண ஆதாரம் கிடைத்துள்ளது; பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவரின் மனைவியால் பதிவு செய்யப்பட்ட இந்த ஒளிப்பதிவு, முழு கதையையும் மறுவடிவமைக்கும் ஆற்றல் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக காவல்துறை சார்பில் அள்ளிவிடப்படும் கதைகளின் கட்டுமானத்தை சரிய வைக்கக்கூடிய ஒலிப்பதிவு இது; விவேக தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட இந்தப்பதிவு, சம்பந்தப்பட்ட கொலை தொடர்பான வழக்கில் ஒரு சாட்சியமாக மட்டுமல்ல; இது ஒரு அசாதாரண மிகமிக அரிதான ஆதாரமுமாகும் இந்த விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை மரண பயத்திற்கு உட்படுத்தியபின், துப்பாக்கி முனையில் இருந்து பாய்ந்த ஒவ்வொரு ரவையும் அவர்களை ஒவ்வொருவராக மௌனமாக்கியதை காட்சிப்படுத்துகிறது இந்த ஒலிப்பதிவு!

அம்முவரில் கடைசி இளைஞர், தன் உயிருக்கு கெஞ்சுவதும், தனக்கு குழந்தைகள் இருப்பதால் தன்னைச் சுடவேண்டாம் என்று காவல் துறையினரிடம் மன்றாடியதும் அந்த ஒளிப்பதிவில் கேட்கிறது.

சில நிமிடங்கள் கழித்து, மற்றொரு துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. கொலைகளுக்குப் பிறகு, காவல்துறை அதிகாரிகள் என்று நம்பப்படுவோரின் குரல்கள் கேட்கின்றன;

குற்றம் நடந்த இடத்தில் இறந்தவர்கள்மீதே பழி சுமத்துவதற்காக நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்று வலுவாக நம்பும் விதத்தில் அந்தக் குரல்கள் ஆலோசிக்கின்றன.

இது, மலேசியாவின் அண்மைய வரலாற்றில் மிகவும் கடுமையான காவல் துறை ஊழல்களில் ஒன்றாகும், தவிர, ‘அவர்கள் எங்களைச் சுட்டார்கள், அதனால் நாங்கள் தற்காப்புக்காகச் சுட்டோம்’ என்னும் நீண்டகாலக் கதையை நேரடியாக சவால் செய்யும் வகையில் இந்த ஒலிப்பதிவு அமைந்துள்ளது என்று சட்ட வல்லுநரும் மனித உரிமை ஆர்வலருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆடியோ முன்னோடியில்லாதது; இத்தகைய வலுவான சாட்சியம் எந்த போலீஸ் வேட்டையிலும் இதற்குமுன் சிக்கியது இல்லை; உயிரைப் பலிதீர்க்கும் போலீஸ் வேட்டையின்போது, இதுபோன்ற ஆதாரங்கள் கிடைப்பது மிகமிக அரிதானது.

இறக்கும் தறுவாயில் ஒரு மனிதன் முன்வைக்கும் இறுதி வேண்டுகோளையும் அச்சத்தை எழுப்பும் அடுத்தடுத்த உரையாடல்களையும் படம்பிடிக்கும் இத்தகைய சாட்சி இதற்கு முன் கிடைத்ததில்லை.

காவல் துறையினர் இதற்குமுன் சொல்லி வந்த கதையாவும் உண்மையில் எவ்வளவு பலவீனமானது என்பதை அம்பலப் படுத்துகிறது இந்த உயிர் சாட்சி. மேலும், இந்தக் குரல் பதிவு, இதற்கு முந்தைய மரண துப்பாக்கிச் சூட்டு வழக்குகளில் பல ஆண்டு- களாக அவிழ்க்கப்படாத முடிச்சுகளை அவிழ்க்கும் தன்மை உடையது என்பதால், காவல்துறையினர் தங்கள் கட்டமைப்பில் உள்ள தகிடுதத்தத்தை ஒப்புக்கொள்வதில் தாமதப்படுத்துவது போல் தெரிகிறது என்று பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நம்பகமான புலனாய்வு நடவடிக்கையிலும், இதைப்போன்ற முக்கியமான சாட்சிகள் கிடைத்தால், அவை அவசரமாகப் பாதுகாக்கப் பட்டிருக்கும். ஆனால், அதிகாரிகளின் செயலற்ற தன்மையையம் தந்திரத்தையும் இந்த குரல் பதிவு அம்பலப்படுத்துவதால், காவல்துறை இதை ஓர் இடையூறாக கருதுவதுபோல் தெரிகிறது.

டுரியன் துங்காலில் மூன்று உயிர்களை அழித்த ஒவ்வொரு துப்பாக்கி வேட்டும் காவல்துறை இயந்திரத்தின் பொய்களை அம்பலப்படுத்துகிறது.

இவ்வாறு தாமதப்படுத்தி பின்னர் மறுக்கின்ற தந்திரத்தை காவல் துறை கையாள்வது குறித்து, மலேசிய முன்னேற்றக் கட்சி ஆழ்ந்த கவலை கொள்கிறது.

கடந்த காலத்திலும் இதைப்போன்ற முக்கியமான வழக்குகள் தொடர்பான ஆதாரங்கள் ஏதாவது சாக்குபோக்குடன் மறுக்கப்பட்டதைப் போல, குறிப்பாக, ‘ஆல்பர்ட் டீ வீடியோ’ போன்ற ஆதாரங்களை இழிவுபடுத்திய முந்தைய முயற்சியைப் போல இப்பொழுதும் நடைபெறுமோ என்று மலேசிய முன்னேற்றக் கட்சி ஐயம் கொள்கிறது என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை