
பள்ளிக் கல்வியிலும் கல்லூரிக் கல்வியிலும் சராசரி மாணவராக விளங்கியவர் நடிகர் ரகுவரன். ஆனால், உண்பது உடுத்துவது என எதையெடுத்தாலும் உடனுக்குடன் முடித்துக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு நகரும் பாய்ச்சல் போக்கு கொண்டவர். நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தாலும் பேச வேண்டியதைப் பேசியவுடன் திடீரென்று விடைபெறும் வழக்கத்தை வழுவாமல் கடைப்பிடித்த இவர், படப்பிடிப்பு தலங்களில்கூட எல்லாமே விரைவாக முடிய வேண்டும் என பரபரப்பவர். அதைப்போல, வாழ்க்கையையும் சீக்கிரம் முடித்துக்கொண்ட நடிகர் இரகுவரனுக்கு இன்று பிறந்த நாள்!
இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்; சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ரன், யாரடி நீ மோகினி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
ஆனாலும் எதிர்நாயகன் வேடம்தான் அவரின் ரசிகர்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது.
தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலான பழைய படங்களில் தோன்றும் வழக்கமான வில்லன்களைப்போல் இவர் பறந்து பறந்து சண்டை போட்டது இல்லை. ‘நான் யார் தெரியுமா’ போன்ற நீண்ட வசனங்களும் அவர் பேசியது இல்லை. நாயர்களிடம் வேண்டுமென்றே வம்புக்கு சென்று அவரிடமிருந்து அடிவாங்கும் காட்சிகளிலும் ரகுவரன் நடித்தது இல்லை.

மாறாக, வில்லத்தனத்தில் ஒருவித நாயகத் தன்மையைக் காண்பித்தவர். குறிப்பாக, வசனங்களை பேசும் விதம், முன்னிலை நாயக நடிகர்களுடன் நடித்தபோதுகூட சிற்சிறு உடல் மொழியால் அரங்கம் அதிர கைதட்டல் பெற்றவர்.
அத்தகைய படங்களில் பாட்சா குறிப்பிடத்தத்தகது:
ரகுவரன் எத்தனையோ படங்களில் வில்லராக நடித்திருந்தாலும், அவர் பெயரை சொன்னால் சட்டென பலருக்கும் நினைவுக்கு வருவது மார்க் ஆண்டனியாக நடித்த பாட்ஷாதான். ‘ஆண்டனி… மார்க் ஆண்டனி’ என அவர் பேசும் வசனம் இர்சிகர்களிடம் இன்றளவும் நிற்கிறது. ரஜினியின் பாட்ஷா கதாபாத்திரத்தை எப்படி மறக்க முடியாதோ, அதேபோல் ஆண்டனியையும் எளிதில் கடந்துவிட முடியாது.

பல ஆண்டுகளைக் கடந்தாலும் ரகுவரனின் குரல் பலரது காதுகளுக்குள் இன்றும் ஒலிக்கிறது. அண்மையில் பாட்ஷா மறுவெளியீடு செய்யப்பட்ட போதுகூட மார்க் ஆண்டனியைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர்.
தமிழ்த் திரைப்படத்தில் எத்தனையோ நடிகர்கள் முதல்வராக நடித்து இருக்கிறார்கள். ஆனால், முதல்வனில் அரங்கநாதன் என்ற பழுத்த அரசியல்வாதியாக, முதல்வராக வரும் ரகுவரனுக்கு தனித்த இடம் உண்டு. அதிலும் அர்ஜூன் அவரை பேட்டி எடுக்கும் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்திருக்கும். ‘முதல்வர் பதவின்னா சாதாரணமா’ என்று அவர் காட்டும் கோபம், ஒருநாள் முதல்வராக அர்ஜூன் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டபோது ரகுவரனின் முகபாவனை குறிப்பிடத்தக்கது.

செல்வா இயக்கத்தில் முரளி நடித்த படம் இரணியன். தஞ்சை பட்டுக்கோட்டை பகுதியில் வாழ்ந்த இரணியன் என்பவரை மையமாக வைத்து, புனையப்பட்ட கதை இது. அதில் கொடுமைக்கார பண்ணையாராக வருவார் ரகுவரன். ‘ஆண்டே, ஆண்டே’ என ஊர் மக்கள் அவரை பயம் கலந்த மரியாதையுடன் அழைப்பார்கள். அந்த விவசாய தொழிலாளர்களை, கொடுமைப்படுத்துகிற, வெறுப்பை உமிழ்கிற பண்ணையாராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ரகுவரன்.
சங்கர் இயக்கிய காதலன் படத்தில் மல்லிகார்ஜுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரகுவரன். அதில் அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும், வழக்கமான தன் நடிப்பால் தனித்துத் தெரிவார். குறிப்பாக, உச்சக்கட்ட குண்டு வெடிப்பு காட்சியில் அவரின் நடிப்பு இன்றைக்கும் நினைவிலிருக்கும் காட்சியாகும்.
தன் மனைவிமீது சந்தேகம் கொண்டு அவரைக் கொடுமைப்படுத்தும் கணவராக புரியாத புதிர் படத்தில் நடித்தார் ரகுவரன். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ரகுமானுக்கு வில்லனாக ரகுவரன் வருவார். பெண்கள்மீது வெறுப்பு கொண்ட சக்கரவர்த்தியாக நடித்து இருப்பார். அவரின் ‘ஐ நோ… ஐ நோ’ என்ற பிரபலமான வசனம் இந்த படத்தில்தான் இடம் பிடித்தது. அந்த வசனத்தை பல வித்தியாசமான குரல்களில் பேசியிருப்பார்.

வில்லனாக நடித்து வந்த சத்யராஜ் ‘மக்கள் என் பக்கம்’ படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக நடித்தார். அவருக்குப் பிடித்த நண்பராக, ரமேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரகுவரன். 1987ல் கார்த்திக் ரகுநாத் இயக்கிய இந்த படத்தில் ரகுவரன் கதாபாத்திரம் படத்துக்கு பலமாக அமைந்தது
பாசில் இயக்கிய பூவிழி வாசலிலே படத்தில் வில்லனாக வரும் ரகுவரனுடைய தோற்றமே வித்தியாசமாக இருக்கும். கோட் அணிந்து, கையில் ஊன்று கோலுடன் வருவார். அவருக்கு அதிக வசனங்கள் கிடையாது. ஆனால், கண் அசைவு, புருவ அசைவில் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
அதைப்போல, சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படத்தில் கொஞ்சம் ஸ்டைலான வில்லனாக நடித்தார். ரஜினிகாந்துடைய பணத்தை அபகரிக்க வேண்டும் என்ற பேராசை பிடித்த வில்லனாக நடித்திருப்பார்.
பிரவீன்காந்தி இயக்கிய ரட்சகன் படத்தில் ஒரு தொழிற்சாலையை கைப்பற்ற நினைப்பவராகவும் நாகர்ஜுனாவின் கோபத்தை துாண்டும் வில்லனாகவும் வருவார். அவரின் கதாபாத்திரத்தின் பின்னணி, அவரின் ஆசை ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்தது. இரகுவரன், ரஜினியுடன் இணைந்து நடித்த இன்னொரு திரைக்காவியம் முத்து. ராஜசேகர் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினியை ஏமாற்றுகிற கதாபாத்திரம். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து இருப்பார்.

இப்படிப்பட்ட ரகுவரன், போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது.
மலேசிய இரவிச்சந்திரன் அறிமுகப்படுத்திய மதுப்பழக்கத்தால், தனக்கிருந்த பொன்னான வாய்ப்பையும் வாழ்க்கையையும் தொலைத்தவர் மு.க.முத்து; இந்தோனேசியாவில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், ஜெமினி கணேசன் கட்டாயப்படுத்திய மது வழக்கத்தால் திரைத்துறை பயணத்தையும் சொந்த வாழ்வையும் ஒன்றாகத் தொலைத்தவர் நடிகைத்திலகம் சாவித்திரி. அதைப்போல, ஆங்கிலோ இந்திரான சந்திர பாபு, முதலிரவில் மனைவி, இன்னொருவரை விரும்புவதாக சொன்னதால், மனைவியை தாரை வார்த்துவிட்டதலும் வாயாடித் தனத்தாலும் புறங்கூறும் வஞ்சகத்திற்கு ஆளானதாலும் மதுவில் மயங்கினார்; சொத்தையும் நல்வாழ்வையும் இழந்தார்.
இத்தகைய போதைப் பழக்கம், அதுவும் அடிமைத்தனம் இரகுவரனுக்கு எவ்வாறு ஏற்பட்டதென்று தெரியவில்லை. இதனால் தன் காதல் மனைவி நடிகை ரோகிணி அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது.[2] ரகுவரனை அதிலிருந்து மீட்க, எவ்வளவோ முயன்றாலும் கடைசியில் முடியாமல் போனது, ரோகினியால்;
இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்த இரகுவரன், பொருள்தேடி கோயம்புத்தூருக்கு குடிபெயர்ந்த ஒரு கேரளத்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.
முற்போக்கு பெண்ணியவாதியாகவும் சுயமரியாதை உணர்வாளராகவும் வாழும் ரோகினியுடன் இல்லறம் நடத்திய ரகுவரனுக்கு இன்று 67-ஆவது பிறந்த நாள். பிறந்த ஆண்டு 1958.


