
இளம் மாணவர்கள், தங்களின் கல்விப் பயணத்தில் தொடக்கக் கல்வியை முடித்தறபின் அடுத்தக்கட்ட கல்வியை
எட்டும்முகமாக இடைநிலை பள்ளியை நாடுவது முக்கியமான காலகட்டமாகும்.
இந்த வேளையில் அவர்களுக்கு பலவிதமான தாக்கங்கள் ஏற்படுவது மிகமிக இயல்பானது.
பெரும்பாலான மாணவர்கள் தாய்மொழி வழியே, தங்களின் தொடக்க கல்வியைப் பெற்ற பின், அடுத்தக் கட்டமாக இடைநிலைப் பள்ளியை எட்டும் பொழுது அவர்கள் மலேசியத் திருநாட்டிற்கே உரித்தான பல இன, பல்கலாச்சார, பல சமய, பல பண்பாட்டு கூறுகளைக் கொண்ட மாணவர்க் கூட்டத்தில் சங்கமிக்க நேரிடும்.
இது அவர்களுக்கு புதுவித அனுபவமாக இருந்தாலும் தங்களுக்கான புதிய நண்பர்களை அடையாளம் காண்பது, புதிய ஆசிரியர்களை அணுகுவது, தேசிய மொழியிலும் உலக மொழியான ஆங்கிலத்திலும் அதிக முனைப்பு காட்ட வேண்டிய சூழல் குறித்தெல்லாம் மெல்லிய அச்சமும் இனம் புரியாத பரபரப்பும் ஏற்படுவது எல்லா மாணவர்களுக்கும் இயல்பானது.

இந்தச் சூழலில் மாணவர்களை பக்குவப்படுத்தி அவர்களை தயார்ப் படுத்துவதுடன் இடைநிலைப் பள்ளிச் சூழலுக்கு ஏற்ப அவர்களை அணியப்படுத்தும் விதமாக ‘இடைநிலைப் பள்ளியை நோக்கி’ என்னும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
குறிப்பாக,.
இடைநிலைப் பள்ளியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வழிகாட்டவும் இடைநிலைக் கல்வியில் சிறந்து விளங்குவது எப்படி என்பதை பற்றியேல்லாம் மாணவர்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளிக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோரும் கலந்து கொள்வது வரவேற்கப்படுகிறது.
மாணவர்களின் முதல் ஆசிரியரே பெற்றோர்தான் என்பதன் அடிப்படையில்
இடைநிலைப் பள்ளியில் நடந்து வரும் ஒழுக்கம் மற்றும் சமூகப் பிரச்சினைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமாகும்.
இத்தகைய சூழ்நிலை ஏற்படும் பொழுது இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான பயனுள்ள வழிகள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த இடைநிலைப் பள்ளியை நோக்கி என்னும் கருத்தரங்கம் நாளை டிசம்பர் 13 கனிக்கிழமை காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை செமிஞி, நோட்டிங்காம் பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
4-ஆம் ஆண்டு முதல் 6-ஆம் ஆண்டு மாணவர்கள் தத்தம் பெற்றோருடன் கலந்துகொண்டு மாணவர்களைப் போல பெற்றோரும் பயனடையலாம்.
பல்வேறு அம்சங்கள் குறித்த தகவலையும் மாணவரும் பெற்றோரும் பெறக்கூடிய இந்த நல்ல நிகழ்ச்சியில் சுற்று வட்டார பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் இதில் கலந்து பயனடையும்படி ஏற்பாட்டளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
ITCEDU VENTURES SDN BHD என்ற நிறுவனத்தின் சார்பில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டுரசுப் பிரதேச மாநிலங்களுடன் வெளி மாநில இந்திய மாணவர்களும் பெற்றோரும் இதில் பங்கு பெற்று பயனடையலாம் என்று இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
மலேசியக் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு
உலு லங்காட் தலைமையாசிரியர் மன்றமும்
ஆதரவளிக்கிறது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சோலமன் சந்தியாபோ
(012-3127274)
தெரிவித்துள்ளார்.
மேல் விவரம் பெற அவருடன் தொடர்பு கொள்ளலாம்.


