Sunday, April 19, 2026

ஊர்ந்த உலங்கூர்தி !

வானத்தில் பறக்க வேண்டிய ஓர் உலங்கூர்தி(Helicopter) சாலையில் மெல்ல ஊர்ந்து சென்றிருக்கிறது.

இதைத்தான் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பதோ? இங்கு படகுக்கு பதில் உலங்கூர்தி இடம்பெற்றிருக்கிறது.

உலங்கூர்தி வானத்தில் பறக்கும்பொழுது
அது எழுப்பும் இரைச்சல்
எட்டு ஊருக்கு கேட்கும்; காரணம் அதனுடைய அமைப்பும் சுழலும் விசிறி எழுப்பும் முரட்டு சத்தமும் அந்த அளவிற்கு சற்று இடையூறாக இருக்கும்.

அதுவும், அது தாழ்வாகப் பறந்தால் கேட்கவே வேண்டாம்; தண்ணீர் இறைக்கும் டீசல் இயந்திரத்தை போன்ற பேரிரைச்சலுடன் பறந்து செல்லும்.

அப்படிப்பட்ட உலங்கூர்தி காதும் காதும் வைத்தார் போல் தரையில் ஊர்ந்து செல்ல நேர்ந்தது. அந்த வான வாகனத்துக்கு என்ன சிக்கலோ தெரியவில்லை!

சங்க காலத்து பருவ நல்லாள் சிற்சில வேளையில் கொலுசு சத்தம் இன்றி நடந்து செல்வதை போல, இந்த உலங்கூர்தியும் காதும் காதும் வைத்தாற்போல மெல்ல மெல்ல நகர்ந்து இருக்கிறது;

அதுவும் தானாக நகரவில்லை; அதன் நலம் பாதிக்கப்பட்டதால் ஏதோ ஒரு கனரக வாகனத்தில் ஏறி மெல்லமாக ஊர்ந்து சென்ற வேளையில் ஒரு கட்டத்தில் அதுவும் முடியாமல் பின்னால் வந்த ஏராளமான வாகனங்களுக்கு போக்குவரத்து சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியர் அவதிப்பட்டு இருந்தாலும் அடுத்த சில நேரத்தில் அது மறைந்து போயிருக்கும்;

இந்தச் சிக்கல் இப்போது ஊருக்கும் உலகத்துக்கும் தெரிய வந்ததற்கு காரணம் அந்த வாகன நெரிசலில் சிக்கிய அவசர மருத்துவ வாகனம் கடைசி வரை கடந்து செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டதுதான்.

இந்த சிக்கல் இப்பொழுது போக்குவரத்து காவல்துறை வரை எட்டி இருக்கிறது.

ஷா ஆலம் நெடுஞ்சாலை(KESAS Highway) சந்திப்பில் திரும்ப முடியாமல் இந்த
உலங்கூர்தியை சுமந்து சென்ற Truck வாகனத்தின் அடையாளத்தையும் பதிவெண் குறித்தும் போக்குவரத்துப் பிரிவை சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

டிசம்பர் நான்காம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அப்பொழுதே காணொளிக் காட்சி சமூக ஊடகத்தில் பரவி இருந்திருக்கிறது.

இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர் நேற்று மாலையில் புகார் செய்ததை அடுத்து இந்த விவகாரத்தை இப்பொழுது காவல்துறை கையில் எடுத்திருக்கிறது.

சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறை அதிகாரி வான் அஸ்லான் வான் மாமாட், இந்த சம்பவம் குறித்து அறிந்தவர்கள், சுபாங் ஜெயா மாவட்ட காவல் அலுவலகத்தின் போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரி அசிசுல் ஹக்கீம் ரோஸ்லானுடன்(011-28914495) தொடர்பு கொள்ளலாம் என்று
தெரிவித்திருக்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை