
கோலாலம்பூரில் உள்ள பாரம்பரியமிக்க அப்பர் தமிழ்ப்பள்ளியின் உருமாற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் சார்பிலும் மஹிமா அமைப்பின் சார்பிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேவஸ்தானத்தின் அறங்காவலரும் மகிமா தலைவருமான டத்தோ ந. சிவகுமார் நேற்று தெரிவித்தார்.

அப்பர் தமிழ்ப் பள்ளியின் ஏற்பாட்டில் திறன்மிகு மாணவர் உருவாக்க விழா என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றிய பொழுது, தொடக்கத்தில் இடைநிலைப் பள்ளியாக விளங்கிய அப்பர் பள்ளி தேவஸ்தானத்தின் பராமரிப்பில் விளங்கியது வரலாறு என்றும் கால ஓட்டத்தில் இந்தப் பள்ளி தொடக்கப் பள்ளியாக மாறிவிட்டது என்றும் தெரிவித்தார்.

தற்பொழுது இந்தப் பள்ளி மாணவர் பற்றாக்குறை சிக்கலால் தேக்கம் கண்டுள்ளதற்கு நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தப் பள்ளியில் இன்னும் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் பொருட்டு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும் என்றார்.

தவிர தேவஸ்தானத்தின் சார்பில் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட பேருந்து தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்தப் பேருந்து விரைவில் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

அப்பர் தமிழ் பள்ளியில் பாலர்கா கல்வியை மேற்கொண்ட ஆறு வயது மாணவர்களுக்கும் ஆறாம் ஆண்டு கல்வியை முடித்த மாணவர்களுக்கும் பட்டமளிப்பு சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நேற்று இரவில் அப்பர் தமிழ் பள்ளிக்கு அருகில் உள்ள ‘மாஜு ஜங்ஷன்’ கட்டட வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி முனியாண்டி முன்னதாக தலைமை உரை ஆற்றினார் தொடர்ந்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுரேஷ் கண்ணாவும் உரையாற்றினார்.


