
‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்னும் நூல் வெளியிட்டு விழா, இன்று புதன் மாலை 6:00 மணி அளவில் ம.இ.கா. தலைமையகத்து நேதாஜி அரங்கத்தில் ம.இ.கா. துணைத் தலைவரும் மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக உலக அளவில் அறியப்பட்ட வருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன் தலைமையில் நடைபெற இருக்கிறது.
வருகைதரும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பொது மக்களுக்கும் குறையிராமல் மன நிறைவலிக்கும் இலக்கிய நிகழ்வாக இது அமையும் என்று நூற்றுக்கு நூறு நம்பலாம்.
நூலாசிரியரும் கவிவானருமான வைரமுத்து ஆற்ற இருக்கின்ற உரை, முத்தாய்ப்பாக அமையும்.
நூலாசிரியர் வைரமுத்து, கோடம்பாக்கத்தில் வெற்றிக் கொடி நாட்டிய பாடல் ஆசிரியர் என்பதை தமிழுலகறியும்.
தவிர, தமிழன்னைக்கு மகுடம் சேர்க்கும் வகையில் இவர் படைத்த இலக்கியப் பெட்டகங்கள் ஏராளம், ஏராளம்;

வைகறை மேகங்கள் தொடங்கி கொடி மரத்தின் வேர்கள் என பதினோரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்ட கவிக்கோமான் இவர்.
‘இதுவரை நான்’ என்ற பெயரில் தன் வரலாற்று நூலுடன் கல்வெட்டுக்கள் முதலாக தமிழாற்றுப்படை ஈறாக பத்து கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.
இவற்றுக்கும் மேலாக ‘வானம் தொட்டுவிடும் தூரம்தான்’ முதல் மூன்றாம் உலகப் போர் வரை 10 புதினங்களையும் இவர் தனக்கே உரிய செம்மாந்த நடையில் சமைத்து, பந்தியும் பரிமாறி விட்டார்.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் 1980-1989 காலகட்டத்தில் நிழல்கள் முதல் ராஜா சின்ன ரோஜா என நூற்றி ஆறு திரைப் படங்களுக்கும் 1990-99 காலகட்டத்தில் இதயத் தாமரை முதல் வாலி வரை என 73 திரைப்படங்களுக்கும் 2000-2009 காலகட்டத்தில் குஷி தொடங்கி கந்தசாமி என்னும் திரைப்படம் வரை எண்பத்தி இரண்டு திரைப்படங்களுக்கும் அதைப்போல 2010-2019 காலகட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை 75 திரைப்படங்கள் என, 40 ஆண்டுகளில் 336 படங்களில் இவர் இயற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
2019-ஆம் ஆண்டுக்குப் பின் இவர் இயற்றிய திரைப் பாடல்கள் குறித்த விவரம் இணைய வெளியில் பதிவாகவில்லை
ஆனாலும் அவர் இன்னமும் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் விட்டும் விடாமல் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதிக் கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.

இந்தப் பயணத்தை தொடர்ந்தால் இன்னும் நான்கு ஆண்டுகளில் அரை நூற்றாண்டுக்கு சிந்தாமல் சிதறாமல் கோடம்பாக்கத்தில் தொடர்ந்து பயணித்த பாடலாசிரியர் என்னும் பெருமை இவரை வந்து சேரும்.
வைரமுத்து இயற்றிய பெரும்பாலான திரைப்பாடல்களில் நவீன அறிவியல் கருத்துக்கள் ஆங்கங்கே பொதிந்திருக்கும் என்பது உண்மை.
அதைப்போல இளைஞர்களை சுண்டியிழுக்கும் விதமாக காதல் ரசம் சொட்டும் விதமான பாடல்களையும் இவர் புனைந்திருக்கிறார்.
“அழகு பெண்ணின் தாயார் என்றால் அத்தை என்றே அர்த்தம் அர்த்தம்” போன்ற வரிகளின் மூலம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இளைஞர்களை தன்வசம் கவர்ந்தவர், இவர்.
ஆனாலும் அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிக்காக
“புல்லு கொடுத்தால் பாலு கொடுக்கும்; உன்னால முடியாது தம்பியோவ்’
என்று பசுமாட்டை புகழ்வதற்காக கோடம்பாக்கத்தின் பால் மையம் கொண்ட இளைஞர் பட்டாளத்தை சிறுமைப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட பாடல் வரிகளா விமர்சனத்திற்கும் உரியவை.

அந்தப் பாடலை இயற்றிய இவராகட்டும், இவர் இயற்றிய அந்தப் பாடலை பூலகாங்கிதத்துடன் பாடிய ‘நினைவில் வாழும்’பாடும் நிலா எஸ் பி பாலசுப்பிரமணியன் ஆகட்டும் அந்தப் பாடலுக்கு ஏகத்தாளமாக நடித்த ரஜினிகாந்த் ஆகட்டும் புல்லை தின்று பாலைக் கொடுக்கும் பசுவின் வேலையை எந்த மனிதனாலும் ஆகவே ஆகாது.
இந்த ஒரு கருத்தை மட்டும் புறக்கணித்துவிட்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தலைவர் பே. ராஜேந்திரனின் வாழ்த்துரை, மலேசியத் தமிழ் நெறி கழகத்தின் தலைவர் ‘தமிழறிஞர்’ இரா. திருமாவளவனின் இன்னொரு வாழ்த்துரை, எய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தரும் சொல்வேந்தருமான மு சரவணனின் தலைமை உரை, நிறைவாக நூலாசிரியர் வைரமுத்து ஆற்ற இருக்கின்ற ஏற்புரை ஆகிய அங்கங்களோடு நடைபெற இருக்கின்ற இந்த இனிய நிகழ்ச்சியில் தமிழ்த்தேன் பருக விரும்புகின்ற தமிழ்த் தேனீக்கள் கலந்து கொண்டு இன்புறலாம், வாருங்கள்!
ஒருவேளை வானம் பொழிந்தாலும் சமாளித்துக் கொண்டு நேதாஜி அரங்கத்தில் பொழியவிருக்கின்ற தமிழ் மழையில் கொடையின்றி நனைய கட்டாயம் வாருங்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இந்தியாவின் குடியரசு தலைவரிடம் இருந்து ஏழு முறை பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த வகையில் ஆறாவது விருதை பெற்றது 2016 ஆம் ஆண்டில்; அதே ஆண்டு மேத்திங்கள் 16-ஆம் நாள் என்று நினைவு; அன்று, தமிழ்நாட்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது;
19-ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பொழுது தொடக்கத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்று வந்தது. அத்தேர்தலில் தனித்து களம் கண்ட திமுக அணி 11:00 மணி வரை முன்னிலை பெற்றது;
உடல்நிலை பாதிப்பால் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து கலைஞர் ஒதுங்கிக் கொள்ள, இன்றைய முதல்வர் ‘தளபதி’, ‘திராவிட நாயகர்’ மு க ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற திட்டத்தை முன்னெடுத்து தனி மனிதராக களம் கண்டு, எந்தக் கட்சியோடும் கூட்டணி இல்லாமல் மாநிலம் முழுக்க பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் முடிவு வெளியாகிக் கொண்டிருந்த பொழுது, ஏறக்குறைய பதினோரு மணி அளவில் பிரதமர் மோடி, அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பிறகு தேர்தல் முடிவின் போக்கு மாறியது.
அதிமுக வரலாற்றில் அதிமுகவே, மீண்டும் இரண்டாவது ஐந்தாண்டு தவணைக்கும் ஆட்சியைப் பிடித்தது; இது ஏறக்குறைய பிராமண அதிகாரவட்ட சூழ்ச்சியால் நடைபெற்றது.
ஆனாலும் இத்தகைய சாதனையை அடுத்த(2026) ஆண்டு ஏப்ரல் – மே திங்களில் ஸ்டாலின் நிகழ்த்தக்கூடும்
3026 பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவோடு வைகோ கூட்டு சேர்ந்து செய்த சதியில், ‘ஆட்சியில் பங்கு’ என்ற எண்ணம் அல்லது பதவி வேட்கை பிடித்த தொல் திருமாவளவன், திமுக மீது தொடர்வஞ்சம் கொண்டிருந்த ஜி. ராமகிருஷ்ணன் தலைமையிலான இடது கம்யூனிஸ்ட் கட்சி, கூடவே வலது கம்யூனிஸ்ட் கட்சி, ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, எல்லா வற்றுக்கும் மேலாக முதல்வர் பதவி என்னும் கிலுகிலுப்பையில் மயங்கிய விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகள் சேர்ந்து அமைத்த மக்கள் நல (?) கூட்டணியின் சார்பில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
இவர்களிடம் வளர்ச்சி அரசியலுக்கு பதிலாக தளர்ச்சி அரசியல் வெளிப்பட்டது; தாங்கள் வெல்ல வேண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதைவிட ஜெயலலிதாவின் மகுடிக்கு மயங்கிய பாம்பை போல திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரிகாகும் விதமாக பொய்க்களமாடினர்
கடைசியில், குருடும் குருடும் சேர்ந்து குருடாட்டம் ஆடி குடியில் விழுந்த கதையாக, பாழும் பள்ளத்தில் விழுந்தனர்
தனியாக நின்று வெற்றி பெற்ற விஜயகாந்த் இவர்களோடு கூட்டு சேர்ந்தும் வைப்புத் தொகையை இழந்தார்; திருமாவளவனும் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் அதிமுகவிடம் மண்டியிட்டார்
அந்த சட்டமன்றத்தில் 89 இடங்களில் வென்ற திமுக மிகப் பெரும் வலிமையோடு எதிர்க்கட்சியானது.
ஆளுங்கட்சியாக இருந்தபொழுது மிக அதிக இடங்களில், 184 தொகுதிகளில் வென்று சாதனை படைத்த திமுக, எதிர்க்கட்சி வரிசையிலும் மிக அதிகமான இடங்களை வென்று புரிந்த சாதனையை வேறு எந்த கட்சியும் தமிழ்நாட்டு அரசியலில் புரிந்ததில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் கலைஞர் சற்று சோர்ந்துதான் போனார்!
தன் பொதுவாழ்வுப் பயணத்தில் எப்பொழுதுமே சோர்ந்து போகாத கலைஞர் அன்று வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்தார். ஆனாலும் அடுத்தக் கட்ட நகர்வைப் பற்றி சிந்திக்க தவறவில்லை.
அந்த நேரத்தில், கலைஞரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும் முகமாக வைரமுத்து அண்ணா அறிவாலயத்திற்கோ அல்லது கோபாலபுரத்திற்கோ சென்றார். எந்த இடம் என்று சரியாக நினைவில்லை.
ஆறாவது முறையாக, தான் முதல்வர் பதிவு ஏற்க போகிறோம் என்ற எண்ணம் தவறிய நிலையிலும் ஆறாவது முறையாக தேசிய விருது பெற்ற வைரமுத்துவை பாராட்டினார் கலைஞர்.
எனக்குத்தான் ஆறாவது வாய்ப்பு கிடைக்கவில்லை; உங்களுக்காவது ஆறாவது முறையாக தேசிய விருது கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி என்று கலைஞர் சொன்னபொழுது வைரமுத்து, நெஞ்சம் நெகிழ்ந்து புலகாங்கிதம் அடைந்தார்.
அதை பலமுறை பல மேடைகளில் சொல்லிசொல்லி கலைஞரைப் புகழ்ந்தார் வைரமுத்து.
அவ்வண்ணம், தன் சொல்லாலும் செயலாலும் கலைஞரையே கவர்ந்த வைரமுத்து, இன்று இம்மலையகத்து பாரம்பரிய தலைநகரில் ஆற்ற இருக்கின்ற உரை, நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் என்பது திண்ணத்திலும் திண்ணம்.


