
-நக்கீரன்
கோல குபு பாரு, டிச.18:
சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் வீ.பாப்பா ராய்டுக்கு எதிராக பத்தாங் பெர்ஜுந்தையிலிருந்து ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று புதன்கிழமை போலீஸ் புகார் செய்தனர்.
இதன் தொடர்பில் மேரித் தோட்டம், புக்கிட் தாகார், நைகல் தோட்டம், சுங்கை திங்கி, மிஞாக் தோட்டம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த பாட்டாளிக் குடும்பத்தினர் கோல குபு பாரு காவல் நிலையத்தில் பிற்பகல் 3:00 மணி அளவில் திரண்டனர்.
இந்தத் தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் தோட்டப்பாட்டாளிகளின் குடியிருப்பு சிக்கல் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையைக் கைவிட்டதால், சம்பந்தப்பட்ட பாட்டாளி மக்களே இதைக் கையில் எடுத்து தன்னெழுச்சியாகப் போராடிவந்த நிலையில், காலமெல்லாம் களத்தில் நிற்கும் மலேசிய சோசலிசக் கட்சியும் இந்த விசயத்தில் தோள்கொடுத்தது.
1980, 90 ஆண்டுகளில் முளைவிட்ட இந்தப் போராட்டம், புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கிய நேரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைக்கப் பட்ட போராட்டமாக கிளைவிட்டது. ஏறக்குறைய 245 குடும்பங்களுக்கு விடுகட்ட 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அது போதாது என்று போராட்டம் தொடர்ந்த நிலையில், பின்னர் 20 ஏக்கர் நிலம் அங்கீகரிக்கப்பட்டது.
ஆனாலும், வீடுகள் கட்டியபாடில்லை. இந்தச் சூழலில், அங்கு இடைத் தேர்தல் வந்தது. சிலாங்கூர் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத்திற்கு கோல குபு பாரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட லீ கீ ஹியோங் 2024 மார்ச் 21-இல் நோய்க் காரணமாக இறந்ததால் இந்த இடைத் தேர்தல் வந்தது.
அந்தத் தொகுதியில் தற்பொழுது பெரிக்காத்தான் கட்சி வலுவுடன் இருக்கிறது; கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது எழுந்த பச்சை அலை இன்னும் பசுமை குன்றாமல் இருப்பதற்கு இடைத் தேர்தல் வாக்களிப்பே சான்றாகும், 2024 மே 11-இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் பிகேஆர், ஜசெக, அமானா, அம்னோ, மசீச, மஇகா ஆகிய கட்சிகள் இணைந்து 14 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற வேளையில், பெரிக்காத்தான் பாஸ் கட்சியுடன் சேர்ந்து 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளியதை வைத்தே இதை உணர முடியும்.

போதாக்குறைக்கு, ஒற்றுமை அரசாங்கத்தின்மீது, குறிப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்மீது இந்திய வாக்காளர்கள் அதிருப்தியில் இருப்பதால் மிரண்டுபோன மாநில-மத்திய ஒற்றுமை அரசுகள் மேற்-குறிப்பிட்ட ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த இந்தியர்களின் வீட்டுடைமைச் சிக்கலைத் தீர்த்து வைப்பதாக வாக்களித்தன.
இதையும் தானாக செய்யவில்லை; சமயம் அறிந்து இந்தச் சிக்கலை எழுப்பி, மக்களை அணிதிரட்டி சோசலிசக் கட்சி சார்பில் குறிப்பாக அதன் துணைத் தலைவர் அருட்செல்வன் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாக ஊராட்சி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் களமிறக்கப்பட்டு அவர் முன்னிலையில் மக்கள் பிரதிகளுடன் ஒப்பந்தம் உருவானது.
இப்பொழுது வீடுகளை கட்டியெழுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதைக் கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து தோட்டங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சிலாங்கூர் மாநில அரசில் இந்தியப் பிரதிநிதியாக இருப்பவரும் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஆட்சிமன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு, இந்த ஐந்து தோட்டங்களின் பிரதிநிதிகளை அங்கீக்கரிக்க மறுப்பதுடன் அவர்களை நேரில் சந்திப்பதையும் தவிரத்துவிட்டார் என ஐந்து தோட்ட நடவடிக்கைக் குழுவின் சார்பில் ஜலாலுதீன் தெரிவித்தார்.
தவிர, தோட்ட பிரதிநிதிக் குழு சார்பில் அனுப்பட்பட்ட கடிதங்களையும் பாப்பா ராய்டு புறக்கணித்து அலட்சியம் செய்துவிட்டார் என்றும், தோட்ட பிரதிநிதிக் குழுவிற்குப் பதிலாக தன் கட்சி-ஜசெக சார்பில் மணிமேகலை, சுரேஷ், செல்வதுரை, குணசேகரன், குமார் ஆகியோரை பாப்பா ராய்டு நியமித்து உள்ளார் என்றும் ஜலாலுதீன் ஆதங்கப்பட்டார்.
இதை ஏற்றுக்கொள்ள மாட்டாமல்தான், கோல குபு பாரு காவல் நிலையத்தில் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டுக்கு எதிராக புகார் தெரிவிப்பதற்காக ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த பாட்டாளிக் குடும்பத்தினர் அணிதிரண்டனர் என்றும் ஜலாலுதீனும் மற்றவர்களும் தெரிவித்தனர். இதற்கு பிஎஸ்எம் கட்சி ஆதரவளிப்பதாகவும் தெரிகிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த சிவரஞ்சனியும் 5 தோட்ட பிரதிநிதிக் குழுவினருடன் சேர்ந்து காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


