
பெட்டாலிங் ஜெயா, டிச.20:
வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும் நசுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் அதேவேளை, அவர்களின் பாதுகாப்பிற்காக கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற இருப்பதாக மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 22-ஆம் நாள் காலை 8:00 மணி அளவில் கோலாலம்பூர், ஜாலான் பங்சார், ‘கேஎல் எக்கோ சிட்டி’ வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயத்தில் இந்த கூட்டு வழிபாடு நடைபெற இருக்கிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள இந்து சமய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இந்து சமுதாய ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கூடும் இந்த நிகழ்ச்சியில் வங்க தேச இந்துக்களுக்காக கூட்டு யாகமும் நடைபெற இருக்கிறது.
பகல் 1:00 மணிவரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் அகல் விளக்கேற்றி வழிபட்டு, அந்த நாட்டின் வாழ்கின்ற இந்து மக்களுக்காக பிரார்த்திக்கப்படும் என்றும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஸ்ரீகாசி’ சங்கபூசன் தங்ககணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

தவிர, இதே நேரத்தில் நாட்டில் உள்ள ஆலயங்களில் வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பிற்கும் அந்த மண்ணில் நம் சமயம் நிலைபெறவும் வேண்டி வழிபாடும் பூசனையும் நடைபெற்றால் நன்மை விளையும்; இதை அனைத்து ஆலயங்களின் தலைவரகளும் பொறுப்பாளர்களும் கருத்தில்கொள்ளும்படி அனைத்து இந்து சமய அமைப்புகளின் சார்பில் கேட்டுக் கொள்ளும் அதேவேளை, இந்த நிகழ்ச்சியில் காலை 11:00 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பும் இடம்பெறும் என்று தங்க கணேசன் அறிவித்துள்ளார்.
மேல்விவரத் தொடர்புக்கு: 012-2815175(தங்க கணேசன்), 012-2016115 (வி.ரிஷிக்குமார்)


