
‘வணக்கம் மின்னல்’என்ற பெயருடன் நாளை முதல் புதுப் பாங்குடன் வலம் வருகிறது இந்த 24 மணி நேர வானொலி.
மலேசியத் தமிழ்- இந்திய வானொலி நேயர்களுக்கு இளங்காலை வேளையில்
மிகவும் பழக்கமான- பரிச்சையமான வகையில் மனதுடன் ஒன்றி உறவாடிய காலைக் கதிர் என்னும் தகவல் களஞ்சிய நிகழ்ச்சிக்கு இன்றுடன் விடை கொடுத்திருக்கிறது மின்னல் பண்பலை வானொலி நிர்வாகம்.

இதன் தலைவராக அண்மையில் சு. குமரன் பொறுப்பேற்றது முதலே மின்னல் பண்பலை வானொலி புது பாங்கில் பயணிக்கத் தொடங்கியது.
அந்த வகையில் நாளை தை முதல் நாள்-ஜனவரி 15இல் தமிழ்ப் புத்தாண்டு அல்லது திருவள்ளுவர் ஆண்டு-2057ம் சமத்துவ பண்டிகையான பொங்கல் திருநாளும் ஒருசேர கொண்டாட இருக்கும் வேளையில், காலை முதல் வணக்கம் மின்னல் என்ற பெயருடன் காலைக் கதிர் ஒலியேற இருக்கிறது.

நள்ளிரவு நேரத்தில் பழைய பாடல்களை விரும்பிக் கேட்கும் நேயர்களின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து நிலைத்து அல்லது அதிகரித்து வரும்வேளையில் அந்த நிகழ்ச்சிக்கான பெயர் மட்டும் மாற்றம் பெறாமல் பழைய பெயருடனேயே நிலை பெற்றுள்ளது.
பிற நிகழ்ச்சிகள் யாவும் புத்தாடை அணிந்து வான வீதியில் வலம் வர இருக்கின்றன.

குறிப்பாக அந்தி வேளையில் நேயர்களின் மனதை கொள்ளை கொண்டு, நேயர்தம் உள்ளத்தில் ஆனந்தக் கூத்தாடிய ‘ஆனந்த தேன் காற்று’ என்னும் நிகழ்ச்சி ‘தீரா இசை’ என்னும் பெயரில் ஒளியற இருக்கிறது.
இந்த மாற்றங்களை இன்று மின்னல் பண்பலை வானொலி நிருவாகத்தினர் முறையாக அறிவித்தனர்.

இதன் தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யோகேஸ்வரனும் கலந்துகொண்டு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.
தற்போதைய கட்டமைப்பும் நிகழ்ச்சிகளின் பெயரும் ஏறக்குறையை 20 ஆண்டுகளாக நிலைத்துள்ளன.

நினைவில் வாழும் துன் சாமிவேலனார் காலத்தில் நிகழ்த்தப்பட்ட மாற்றம் இப்பொழுது யுவனேஸ்வரன் தலைமையில் புது மாற்றம் காண்கிறது.
நாமும் வரவேற்பு தெரிவிப்போம்; வாழ்த்து கூறுவோம்.
வாழ்க மின்னல் பண்பலை வானொலி!.




