
-நக்கீரன்
சென்னை, ஜன.12:
நாளைய உலகம் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) சார்ந்தது என்பதால், இன்றைய மாணவர்கள் அதில் அதிக அக்கறையும் அதேவேளை விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும் என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்-கழக இணைவேந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன் சென்னையில் உயர்க்கல்வி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு நுட்பம் இப்பொழுதே நம்மை ஆட்கொண்டுவிட்டது. சமூக வளைதளங்களில் இந்த நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அச்சிடப்பட்ட காகிதங்களை படியெடுப்பதைப் போல, மனிதர்களையும் படியெடுக்கவல்ல இந்த செயற்கை நுண்ணறிவை வல்லாரும் பொல்லாரும் மாற்றி யோசித்து வேற்றுவகையில் பயன்படுத்தலாம். அதேவேளை, இந்த செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை நல்லார் பயன்படுத்தினால், இந்த மண்வாழ் மானுடக்குலம் பயனடையும் வண்ணம், ஆக்கப்பூர்வ பயன்விளையும்.
இந்த உலகில் எல்லா அம்சங்களும் தீதையும் நன்றையும் உள்ளடக்கி இருப்பதைப் போல, செயற்கை நுண்ணறிவு நுட்பத்திலும் இரண்டும் உண்டு; நாம்தான் விழிப்புடன் அதைக் கையாள வேண்டும். எதிர்கால வாழ்க்கை, செயற்கை நுண்ணறிவு நுட்பம் சார்ந்ததாக இருக்கும் என்பதால், நாம் அதிலிருந்து முற்றும் விலகி வாழமுடியாது என்பதை இன்றைய மாணவ சமுதாயம் ஏற்றுக் கொண்டு அதை வகையுறக் கையாளும் ஆற்றலைப் பெற வேண்டும்; குறிப்பாக, எதிர்கால ஆளுமையராக உருமாறும் வேளையில் சந்திக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை, மாணவர்கள் நிகழ் காலத்தில் கற்க வேண்டும் என்று ஜெய்பீம் அறக் கட்டளை நிகழ்ச்சியில் உரையாற்றியபோது மலையகத்து இலக்கிய வேந்தருமான மு.சரவணன் பேசினார்.
தமிழ் நாட்டு உயர்க்கல்வி மாணவர்கள், வெளிநாட்டில் கற்பதற்கான வாய்ப்பு பற்றிய கருத்தரங்கு ஜெய்பீம் அறக்கட்டளை சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதுதான், மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய வழிகாட்டியுமான டத்தோஸ்ரீ மு. சரவணன் மேற்கண்டவாறு பேசினார்.
தமிழ் நாட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இலங்கை மேனாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான் உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


