
பத்துமலை, ஜன.12:
மலேசிய இந்து ஆலய-அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவை-மகிமா ஏற்பாட்டில் இந்து சமயம் சார்ந்து நால்வகை வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ‘சமய செம்மல்’ டத்தோ ந. சிவக்குமார் அறிவித்துள்ளார்.
இதன் தொடர்பில், ஜனவரி 11, சனிக்கிழமை பத்துமலை அருள்மிகு திருமுருகன் திருத்தல வளாகத்தில் உள்ள விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், சமய வகுப்பு, தேவார-திருமுறை வகுப்பு, பரத நடன வகுப்பு, நாதஸ்வர-தவில் பயிற்சி என நால்வகைப் பயிற்சியை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
மலேசிய இந்து சமய-பண்பாட்டு மையமாக உருமாற்றம் கண்டுள்ள பத்துமலை வளாகத்தில் ஆன்மிக நெறியும் சமய மேன்மையும் மேலும் செழித்திட கட்டணமின்றி நடத்தப்படும் இந்த வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிட நம் பெற்றோர் முன்வர வேண்டும் என்று DSK அமைப்பின் நிறுவனத் தலைவருமான டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
சிறார் மட்டுமின்றி, ஆர்வம் கொண்ட பெரியவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்; சமய மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இந்த வகுப்புகளில் கலந்துகொள்வோருக்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை.
நேரில் கலந்துகொள்ள முடியாதவர்கள், இணையவழி வ்குப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம். கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட தேவார வகுப்பில், இணையம்வழி பயிற்சிபெற்ற ஒரு மாணவி, இந்த நிகழ்ச்சியில் திருமுறை ஓதியையும் சிவக்குமார் சுட்டிக்காட்டினார்.

சமய மறுமலர்ச்சிக்கான இந்தத் திட்டத்தை, நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர்-கோலாலம்பூர் மாநிலங்களைக் கடந்து, பிற மாநிலங்களுக்கும் இந்த நால்வகைப் பயிற்சிகளை விரிவுபடுத்த இருக்கிறோம்.
இதன்தொடர்பில், மகிமா அமைப்பில் இணைந்துள்ள ஆலயங்கள் மற்றும் சமய அமைப்புகள் இந்தப் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு மையங்களாக அந்தந்த மாநிலங்களில் செயல்படும்.
இதற்கான தொடர்பணியை மகிமா மேற்கொள்ளும் என்றும் இத்தகைய சீரிய சமயப் பணிகளுக்கு கோலாலம்பூர் அருள்மிகு தேவஸ்தானத் தலைவரும் திருப்பணி செம்மலுமான டான்ஸ்ரீ டாக்டர் ஆர்.நடராஜா ஒப்புதலும் ஆதரவும் வழங்கி உள்ளார் என்று தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவக்குமார் மேலும் தெரிவித்தார்.


