Monday, April 20, 2026

திருவள்ளுவர் ஆண்டு 2056 தொடக்கம்!

-நக்கீரன்

தோட்டமாளிகை, சனவரி 12:
உலகின் ஈடுயிணையற்ற முதல் நிலை தொன்மொழியாம் தமிழை சமைத்த தமிழர்களுக்கு புத்தாண்டு என வகைப்படுத்தப்பட்டுள்ள திருவள்ளுவர் ஆண்டு-2056, நாளை மறுநாள் தை முதல் நாளில் பிறக்க இருப்பதை முன்னிட்டு, நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் நெஞ்சத்தினர் புடைசூழ இன்று சனவரித் திங்கள் 12-ஆம் நாள் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

இந்தியா உருவாவதற்கு பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்பே படைபலத்தோடு விளங்கிய நல் திரு நாடு, தமிழ் நாடு.

அத்தகைய தொன்மைமிகு தமிழ் நிலத்தில் இருந்துதான் இராஜேந்திர பெருமன்னன் கடற்படை நடத்தி, இந்த மலைத்திருநாட்டின் வடபுலத்தே உள்ள யான் மண்டலத்தில் அரசாட்சி நிறுவினான்.

சமணமும் பௌத்தமும் கலந்த மன்னர்கள் கெடாவில் ஆட்சிபுரிந்தவந்த சூழலில், ஒன்பதாவது தர்பார் மன்னர்தான், இந்த மண்டலத்தில் எழுந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தாக்கத்தால், இஸ்லாத்தைத் தழுவி கடாரத்த்தின் முதல் சுல்தானாக மாறினார்.

ஆனாலும் தொல்தமிழ் நாட்டில் மூன்று அரச பரம்பரையினர் ஆண்டு வந்ததால், ஒவ்வொரு மன்னரும் பதவியேற்ற காலத்தின் அடிப்படையில் ஆண்டை கணக்கிடும் முறையைக் கொண்டிருந்தனர்.

இது சோழ, பாண்டிய, சேர மண்டலங்களுக்கும் பொருந்தும். இந்த வகையில், தமிழ் நாட்டில் மூன்று ஆண்டுக் கணக்குகள் பின்பற்றப்பட்டன.

இதன், விளைவாகவே, தமிழர்க்கு ஒன்றிணைந்த தொடர் ஆண்டுக் கணக்கு இல்லாமல் போய்விட்டது.

இருந்தாலும், தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் பெரும் இலக்கிய அடையாளமாகத் திகழும் வள்ளுவத்தை யாத்த ஐயன் திருவள்ளுவர் பிறந்த ஆண்டை தமிழர்க்கு தொடராண்டாகக் கொள்வதென தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் செய்த முடிவிற்கு ஏற்ப, தை முதல் நாள் தமிழர்ப் புத்தாண்டு எனவும் 2-ஆம் நாள் திருவள்ளுவர் புறந்த தினம் எனவும் வரையறுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில்தான், பெட்டாலிங் ஜெயா தோட்டமாளிகையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் புத்தாண்டை வரவேற்றனர்.

மலேசியத் தமிழர் தன்மானப் பேரவைத் தலைவர் எழுத்தாண்மை ஏந்தல் முனைவர் பெரு. அ.தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மேநாள் துணை அமைச்சர் டான்ஸ்ரீ க. குமரன், மலையக திராவிட இயக்க மூத்தத் தலைவர் இரெ.சு.முத்தையா, மலேசிய மாந்த நேய திராவிடர்க் கழகத் தலைவர் நாக.பஞ்சு, செயலாளர் அன்பரசன், தாப்பா பெரியார் பாசறை நிறுவனத் தலைவத் கெ.வாசு, அவர்தம் குடும்பத்தினர், கே.ஆர்.ஆர்.அன்பழகன், தொழில்முனைவர் டத்தோ இளஞ்செழியன், பத்துமலை பாலசுந்தரம், பெ.மு.அன்பு இதயன், அன்புச் செல்வி, தமிழர் தன்மானப் பேரவைத் துணைத்தலைவர் இலக்குவன்,
ஷா ஆலம் பரமசிவம், ஷா ஆலம் பஷீர், செபூத்தே பத்துகாஜா மூர்த்தி குடும்பத்தினர், எஸ்.கே.சுப்பையா, காந்தன், செல்வம் இணையர் உள்ளிட்ட 60 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழர் தன்மானப் பேரவைச் செயலர் சி.மு.விந்தைக் குமரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகச்சியில் டான்ஸ்ரீ குமரன், முனைவர் பெரு.அ.தமிழ்மணி, இரெ.சு.முத்தையா உள்ளிட்டோர் தமிழர்ப் புத்தாண்டு குறித்தும் தமிழர் ஒற்றுமை பற்றியும் பேசினர்.

உலக இலக்கிய மேடையில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்திக் கொடுத்த ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, 2056 தமிழர்ப் புத்தாண்டையும் பொங்கலையும் வரவேற்ற இந்த நிகழ்ச்சியில் முனைவர் பெரு.அ.தமிழ்மணி குடும்பத்தினர் சார்பில் பொங்கலும் சுவைநீரும் பரிமாறப்பட்டன.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை