
சிலாங்கூர் மஇகா ஏற்பாட்டில் சிலாங்கூர் தமிழ்ப் பள்ளி தலைமை அசிரியர் மன்ற ஒத்துழைப்பில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி நாளை பிப்ரவரி 14 ஆம் நாள் நடைபெற இருக்கிறது .
மாநில அளவிலான இப்போட்டியில் 60 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றிலிருந்து 524 மாணவர்கள் பதிந்துள்ளதாகவும் இதன் தொடர்பில் தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பெற்றோரும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் மஇகா சிலாங்கூர் தலைவர் டத்தோ சங்கர் ராஜா ஏற்கெனவே தெரிவித்தார்.
காலை 9:00 முதல் மாலை 5:00 மணிவரை நடைவுள்ள இளம் மாணவர்களுக்கான இச்சதுரங்கப் போட்டியை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தொடக்கி வைக்கிறார்.

சதுரங்க விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களை அடையாளம் காண்பதும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளுக்கு தயார்ப்படுத்துவதும் இந்தப் போட்டியின் நோக்கமாகும் என்று டத்தோ சங்கர ராஜ் மேலும் தெரிவித்திருந்தார்.
நம் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு சமுதாய நோக்குடன் செயல்படும் மஇகா-விற்கு தோள்கொடுக்கவும் துணை நிற்கவும் மாநில தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்றம் முடிவெடுத்து, சம்பந்தப்பட்ட் தமிழ்ப் பள்ளிகளின் நிருவாகத்துடன் இணைந்து செயல்படுவதாக சிலாங்கூர் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் த. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த சதுரங்கப் போட்டி, ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்கள், 12 வயதுக்குட்பட்டவர்கள் என் இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
ஆண்கள்-பெண்கள் இருபாலரும் இதில் பங்கு கொள்கின்றனர்.
ஷா ஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அரசியல்-சமூகத் தலைவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்றும் முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சதுரங்கபோட்டி ஏற்பாட்டுக் குழு சார்பில் தி. குமரேசன், டி. சேகரன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.


