
சமுதாயத்திற்கு நல்ல தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டியது பத்திரிகையாளர்களின் தலையாய கடமை என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு சரவணன் வலியுறுத்தினார்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் 2026-ஆம் ஆண்டு குடும்ப தின விழாவில் சிறப்புரை ஆற்றியபொழுது மேற்கண்டவாறு ஊடகத்தினரை வாஞ்சையுடன் கேட்டுக் கொண்ட எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான அவர்,

முன்பெல்லாம் ஒரு பத்திரிகையில் பணி புரிகின்றவர்கள் இன்னொரு பத்திரிகையின் ஊழியர்களை சந்திப்பதும் பழகுவதும் மிகவும் அரிதானது; ஆனால் இப்பொழுது பத்திரிகையாளர் சங்கத்தின் மூலம் எல்லா ஊடகத்தினரும் ஒரு குடையின்கீழ் ஒன்றாக பயணிப்பதும் நெருக்கமாக உறவாடுவதும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

சமுதாயத்தை வழிநடத்துகிறவர்கள் தலைவர்கள் மட்டும் அல்லர்; ஊடகத்தாரும் தான் என்று குறிப்பிட்ட டத்தோஸ்ரீ மு. சரவணன்,
தமிழ் மொழியில் நன்கு பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கால ஓட்டத்தில் தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை; ஏதோ பேசினால் மட்டும் போதும் என்ற நிலையில் இருப்பவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்னர்.

நல்ல சிந்தனையும் சமுதாய மேன்மையை இலக்காக கொண்டு செயல்படும் எண்ணமும் இல்லாதவர்கள் எல்லாம் இப்பொழுது மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்.
இது எதிர்கால சமுதாயத்திற்கு நல்லதல்ல; இப்பொழுது நிகழ்காலமே கேள்விக்குறி-யாகத்தான் இருக்கிறது;

எனவே நல்ல தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊடகத்தார் அம்பலம் ஏற்ற வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
பத்திரிகைத் துறையில் ஈடுபடுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல; வருமானமும் லாபமும் இல்லாத இந்தத் துறையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மட்டுமல்ல; முதலாளிகளுக்கும் சிரமமான காலக்கட்டம் இது.
உண்மை நிலை இவ்வாறு இருந்தும் விடாமல் ஊடகத் துறையில் இணைந்து பயணிக்கின்ற அத்தனைபேரும் பாராட்டிற்கு உரியவர்கள் என்று ‘இலக்கிய வேந்தர்’, ‘சொல்வேந்தர்’ தாப்பா தொகுதி மக்கள் பிரதிநிதி டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்து, அனுபவம் வாய்ந்த ஊடகப் பணியாளர்களுக்கு சிறப்பும் செய்தார்.


