
16 வயதினிலே
திரைக்கனவு வந்தது.
கிழக்கே போகும் ரயில்
கோடம்பாக்கத்து ஆசையைத் தூண்டிவிட்டது.
சிகப்பு ரோஜாக்களைத்
திரையில் காட்டினார்.
புதிய வார்ப்புகளை
வெள்ளித்திரையில் படைத்தார்.
நிறம் மாறாத பூக்களை
நிறம் பூசிக் காட்டினார்.
நிழல்கள் சொன்னதை
நிஜத்தில் வெளிப்படுத்தினார்.
அலைகள் ஓய்வதில்லை என
அடித்துச் சொன்னார்.
டிக் டிக் டிக் என்ற ஒலியை
திகிலொலி ஆக்கினார்.
காதல் ஓவியத்தைக் ‘
கண்குளிரப் படைத்தார்.
வாலிபமே வா வா என்று
விரக்தியை வெளிப்படுத்தினார்.
மண்வாசனையை
மக்கள் வசம் கொண்டுசென்றார்.
புதுமைப்பெண்ணை
புரட்சிகரமாகப் படைத்தார்.
ஒரு கைதியின் டைரியை
திறந்த புத்தகமாக்கினார்.
முதல் மரியாதையை
கம்பீரமாகச் செலுத்தினார்.
கடலோரக் கவிதைகளைக்
காதல் பொங்கச் செதுக்கினார்.
வேதம் புதிது என்று
வலிமையாகச் சொன்னார்.
கொடி பறக்குது என்று
நம்பிக்கையோடு பேசினார்.
என் உயிர்த் தோழனை
எல்லோருக்கும் அடையாளம் காட்டினார்.
புதுநெல்லு புது நாத்தை
புதுமணத்துடன் அறிமுகப்படுத்தினார்.
நாடோடித் தென்றலாக
நாடுகடந்து நறுமணம் வீசினார்.
கேப்டன் மகளை
கச்சிதமாகக் காட்சிப்படுத்தினார்.
கிழக்குச் சீமையிலேவை
கொண்டாட்டப் படைப்பாக்கினார்.
கருத்தம்மாவைக்
காவிய நாயகியாக்கினார்.
பசும்பொன்னைப்
படையலாக்கிக் கொடுத்தார்.
தமிழ்ச்செல்வன் படத்தைத்
துணிச்சலாக எடுத்தார்.
அந்தி மந்தாரையை
அழகியலோடு காட்டினார்.
தாஜ்மஹாலை
திரையில் கொண்டுவந்தார்.
கடல் பூக்களை
வெள்ளித்திரையில் வார்த்தெடுத்தார்.
ஈர நிலத்தை
ஈரம் காயாமல் பதிவுசெய்தார்.
கண்களால் கைது செய் என்று
கவிதையாகக் காதல் பேசினார்.
பொம்மலாட்டம் மூலம்
பரவசத்தில் ஆழ்த்தினார்.
அன்னக்கொடியை
அழகு மிளிர ஏற்றினார்.
மீண்டும் ஒரு மரியாதை
தரமுயன்றார்.
முதல் மரியாதையே
மனநிறைவாக இருக்கிறது!
ஓய்வெடுங்கள்,
இயக்குனர் இமயமே!


