
மலேசியவாழ் இந்துப் பெருமக்களால் வெகு அண்மையில் கொண்டாடப்பட இருக்கும் பண்டிகை, தைப்பூச நன்னாள். இந்த பாரம்பரிய சமய விழா தொடர்பில் கெடா மாநில அரசு பண்டிகைக் கால சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளது. இதை, மலேசிய இந்திய சமுதாயத்தின் தாய் அரசியல் இயக்கமான மலேசிய இந்தியர் காங்கிரஸ் சார்பில் மனமுவந்து வரவேற்பதாகவும் அதேசமயம், பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதாகவும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஶ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வடபுலத்தில் உள்ள கெடா மாநிலத்தை பாஸ் கட்சி ஆட்சி செய்தாலும் இந்துக்களின் பாரம்பரிய பண்டிகைக்கு சிறப்பு விடுமுறை அளித்திருப்பது மிகவும் பாராட்டிற்கு உரியது. கடந்த காலத்திலும் இதே அரசாங்கம் இதைப்போல செய்துள்ளது.
மலேசியாவில் வாழ்கின்ற மக்கள் பல இன, பல சமய, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட கூட்டு சமுதாயமாகும். இத்தகைய சமுதாயத்தில், சமய நல்லிணக்கம் மிகமிக அவசியம்.
நாட்டில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மேலும் வலுப்படுத்துவதற்கு சமய இணக்கமும் அவசியமான ஒன்று.

அதை நிலைநாட்டும் வகையில் பாஸ் கட்சி தலைமையிலான கெடா மாநில அரசாங்கம், இந்து சமய மக்கள் கொண்டாடும் பெரும் பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச நன்னாளிற்கு சிறப்பு விடுமுறை அளித்து இருப்பது, கெடா மாநில இந்திய சமுதாயத்தால், குறிப்பாக இந்து சமய மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
தைப்பூச விழாவைப பொருத்தவரை மலேசியாவில் இது ஒரு சமயப் பண்டிகை என்பதைக் காட்டிலும் பன்னாட்டு சுற்றுப்பயணிகளைக் கவரக்கூடிய விழாவாகவும் ஆண்டுதோறும் அமைகிறது.
இதனால் தைப்பூச விடுமுறையை ஆண்டுக்கு ஆண்டு சிறப்பு விடுமுறையாக அறிவிக்காமல் அதை நிரந்தரமாக மாநில அரச விடுமுறையாக அறிவிக்கும்படி மந்திரிபெசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நோர் தலைமையிலான பாஸ் அரசாங்கத்தை மலேசிய இந்தியர் காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் டான்ஸ்ரீ டாக்டர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.


