Thursday, April 2, 2026

பவள விழாவை நோக்கி மலேசிய இந்து சங்கம்!

இந்துப் பெருமக்கள் புலம்பெயர்ந்து மிகுதியாக வாழும் நாடு, இம்மலைத் திருநாடு. இம்மண்ணில் சமயத் தோட்டம் சமைத்து ஆன்மீகப் பயிர் வளர்க்கும் நோக்கில் 1965 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் இதே நாளில்(23) தொடங்கப்பட்ட மலேசிய இந்து சங்கம், தன் ஆன்மீக பயணத்தில் நேற்றுடன் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தற்பொழுது பவள விழாவை நோக்கி பயணம் செய்கின்ற இந்த சமய அமைப்பு தன்னுடைய நெடிய பயணத்தில் எண்ணற்ற ஏற்ற- இறக்கங்களை எதிர்கொண்டு இருந்தாலும் இந்து பெருமக்களுக்கான சமயக் கடமையிலிருந்து வழுவாது செயலாற்றி வருகிறது.

இந்த சங்கத்தின் தொற்றுநரும் முதல் தலைவருமான ‘சங்கரத்னா’ கே. பரமலிங்கம் 1965 முதல் 69ஆம் ஆண்டுவரை இந்த சங்கத்தை வழிநடத்தினார்; அடுத்து வந்த சங்கரத்னா ‘அருள்நெறிக் காவலர்’ செல்வ நடராஜா முதல் தலைவர் கட்டியமைத்த பாதையிலேயே மலேசிய இந்து சங்கத்தை வழிநடத்தி இந்து சமயம் செழிக்க தன் பங்கை நிறைவாக வழங்கினார்;

1976-ல் மூன்றாவது தலைவராகப் பொறுப்பேற்றவர், ‘சங்கரத்னா’ ‘தொக்கோ குரு’ எஸ் எம் பொன்னையா. இவர் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமையாகவும் ஆங்கிலப் புலமை மிக்கவராகவும் திகழ்ந்தார். இந்து சங்கத்திற்கு நான்காவது தலைவராக பொறுப்பேற்ற ‘சங்கரத்தினா’ எஸ். கோவிந்தராஜ் 1986 முதல் 89 ஆம் ஆண்டுவரை சங்கத்தை வழி நடத்தினார்.

மலேசிய இந்து சங்கத்திற்கு ஐந்தாவது தலைவராக வாய்த்தவர் சங்கரத்னா சித்தாந்த செல்வர் ஆறு நாகப்பனார்; இவர் சிவநெறி என்னும் சைவ நெறியிலும் தமிழ் வழிபாட்டிலும் மிகுந்த ஈடுபாடு உடையவராக விளங்கினார்; ஆறு நாகப்பன் 1989 முதல் 91 ஆம் ஆண்டு வரை சங்கத்தை சிறப்புற வழிநடத்தினார்.

அவருக்குப்பின் ஆறாவது தலைவராக 1991 ஆம் ஆண்டு முதல் 96 வரை சங்கத்தை திறம்பட வழிநடத்தியவர் சங்கரத்னா எம். சுப்பிரமணியன். இவரை அடுத்து ஏழாவது தலைவராக மலேசிய இந்து சங்கத்தை வழிநடத்த வந்தவர் டத்தோ அ. வைத்தியலிங்கம்.

மலேசிய இந்து சங்க வரலாற்றில் மிக நீண்ட காலம் தலைவர் பொறுப்பேற்று இருந்தவர் வைத்திலிங்கம். இவர் 1996 முதல் 2009ஆம் ஆண்டு வரை இந்து சங்கத்தை வழி நடத்தினார்.

டத்தோ வைத்திலிங்கம் தலைமை ஏற்று இருந்த காலம், மலேசிய இந்து சங்கத்திற்கு ஒரு பொற்காலம் எனலாம். இவருடைய தலைமைத்துவத்தில்தான் கோலாலம்பூர், இப்போ சாலையை ஒட்டி கம்போங் காசிப் பிள்ளை என்னும் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த மலேசிய இந்து சங்கம் புதிய கட்டடத்தை வாங்கி பெட்டாலிங் ஜெயா பகுதிக்கு மாறி சென்றது

எட்டாவதாக வந்த டத்தோ ஆர் எஸ் மோகன் ஷானும் வைத்திலிங்கத்திற்கு இணையாக ஏறக்குறைய 13 ஆண்டுகள் மலேசிய இந்து சங்கத்திற்கு தலைவராக இருந்தார்.

தற்பொழுது ஒன்பதாவது தலைவராக மலேசிய இந்து சங்கத்திற்கு பொறுப்பேற்று இருப்பவர் ‘சிவநெறி செல்வர்’ தங்க கணேசன்.

ஈராயிரத்து இருபத்தி இரண்டாம் ஆண்டு முதல் தங்க கணேசன் பொறுப்பேற்று இருக்கின்ற நிகழ் கால தலைமைத்துவம் எவ்வித சலசலப்பும் இன்றி தெளிந்த நீரோடை போல அண்மைய ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

ஆனாலும் போதிய நிதி ஆதாரம் இன்றி தற்போதைய தலைமைத்துவம் தத்தளிப்பதாகத் தெரிகிறது

மலேசியாவை 9 ஆண்டுகள் வழி நடத்திய மேனாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் காலம், மலேசிய இந்து சமய அமைப்புகளுக்கும் ஆலயங்களுக்கும் வளமான வாய்ப்பை தந்தது.

ஏறக்குறைய 60 ஆண்டு காலமாக மலேசிய தேசிய நீரோட்டத்தில் இருந்து மலேசிய இந்திய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டதிற்காக பொது மன்னிப்பு கேட்ட பிரதமருமான நஜீப், ஆலயங்களுக்கும் சமய அமைப்புகளுக்கும் வகை தொகையின்றி அள்ளி அள்ளிக் கொடுத்தார்.

2018 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து மக்கள் நீதி கட்சி (பிகேஆர்) மத்தியக் கூட்டு அரசாங்கத்தின் மையப் புள்ளியாக வந்ததிலிருந்து தமிழ் பள்ளிகளுக்கான மானிய உதவி எப்படி அற்றுப்போனதோ அதைப்போல ஆலயங்கள்-சமய அமைப்புகளுக்கான நிதி உதவியும் பேரளவில் குறைந்துவிட்டன; ஏறக்குறைய அற்றுவிட்டன என்றே சொல்லலாம்.

தவிர மக்கள் மன்றங்களில் நிற்க வேண்டிய இந்த சமய அமைப்பு நீதிமன்றப் படிக்கட்டுகளில் அடிக்கடி நின்ற வகையிலும் கைவசம் இருந்த நிதியை இழக்க நேர்ந்தது.

டத்தோ வைத்திலிங்கம் தலைவராக இருந்த காலத்தில் ‘நினைவில் வாழும்’ டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் சமூக நல உதவி அமைப்பின் சார்பாக நிதி வழங்கப்பட்டது.
வைத்திலிங்கத்தின் தலைமைத்துவம் மாறிய பிறகு அனந்தகிருஷ்ணனின் அமைப்பு இந்து சங்கத்திற்கு நிதி கொடுப்பதை நிறுத்திவிட்டது.

மலேசிய இந்து சங்கத்தின் மணிவிழாப் பயணத்தில் இரண்டு தலைமைத்துவத்தின்போது, அதிக சலசலப்பு ஏற்பட்டது.

வைத்திலிங்கம் தலைமைத்துவத்தின் தொடக்கத்திலும் மோகன் ஷானின் தலைமைத்துவ கடைசிப் பகுதியிலும் மலேசிய இந்து சங்கத்தில் ஏகமாக சலசலப்பு ஏற்பட்டது.

எது எவ்வாறாக இருந்தாலும் தற்போதைய நிலையில் மலேசிய இந்து சங்கம் தன்னுடைய சமய, சமூக பயணத்தில் மிகுந்த அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் ஒருமித்த உணர்வுடன் தேசிய அளவில் செயல்பட்டு வருகிறது.

மலேசிய இந்து சங்கம் நடத்துகின்ற சமய விழாக்களில் திருமுறை விழா மிகமிக குறிப்பிட தக்கது. தமிழர்கள் தங்களின் தாய் மொழியான தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற உணர்வை ஓரளவிற்கேனும் ஏற்படுத்தக்கூடியது திருமுறை விழா.

ஆனாலும் மலேசிய இந்துக்களின் குறிப்பாக தமிழர்களின் ஆன்மீக நடைமுறை வேறாக இருக்கிறது. அன்றாடம் பரம்பொருளை நினைத்து ஓத வேண்டிய திருமுறைப பாடல்களை இறப்பு வீட்டிற்கு உரியது என்னும் வகையில் வகைப்படுத்திவிட்டனர். இந்த நிலையை மாற்றுவதற்கு இந்து சங்கம் பாரிய அளவில் பறந்துபட்டு கடமையாற்ற வேண்டும்.

மலேசிய இந்து சங்கத்தின் தேசிய தலைவரை இந்து சங்க உறுப்பினர்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறையை மாற்றியவர் வைத்திலிங்கம்.

நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மலேசிய இந்து சங்கத்தின் உறுப்பினர்கள், தாங்கள் விரும்பும் தலைவரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறையை மாற்றி மறைமுக தேர்தல் மூலம் தேசிய தலைவர் யார் என்பதை அடையாளம் காணும் வகையில் 27 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக குழுவை ஏற்படுத்தியவர் வைத்திலிங்கம்.

இந்த 27 உறுப்பினர்களில் 13 பேரை யார் வசப்படுத்துகிறாரோ அவர் தேசியத் தலைவர் என்னும் நடைமுறை நீண்ட காலமாக இருப்பதால் ஆண்டுதோறும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இந்து சங்கம் இருக்கிறது.

மலேசிய இந்து சங்கத்தின் நிதித் சிக்கலுக்கு இந்த நடைமுறைதான் முக்கிய காரணம் என்பது குறித்து இந்து சங்கத்தின் இன்றைய தலைமை ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இந்து சங்கம் நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதெத் தவிர
இந்த சங்கம், வர்த்தக நடவடிக்கை எதிலும் ஈடுபடுவதில்லை.
நிதி ஆதாரத்திற்காக ஏதும் தொழிலும் செய்யவில்லை; பெரும்பாலும் அரசாங்கம் மற்றும் பொது மக்களின் நன்கொடைதான் இந்து சங்கத்திற்கு உதவியாக இருக்கும் நிலையில், ஆண்டுதோறும் சங்கத்தின் தேர்தலுக்காக செலவழித்து- செலவழித்து தன்வசம் இருக்கின்ற நிதியாய் இழப்பது ஒருபுறம் இருக்க ஆண்டுதோறும் ஆள் பிடிக்கும் வேலை இடம்பெறுவதால் சச்சரவும் சலசலப்பும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மலேசிய இந்து சங்க தலைமையை சூழ்ந்துள்ளது.

இதிலிருந்து விடுபட்டால் ஒழிய மலேசிய இந்து சங்கம் மீட்சி பெறுவதற்கான வழி, கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்றேத் தெரிகிறது.

எனவே இதில் மலேசியன்று சங்கத்தின் இன்றைய தலைமை ஆழமாக கவனம் செலுத்த வேண்டும்.

எது எவ்வாறாக இருந்த பொழுதிலும் மலேசிய இந்து சங்கம் நீண்ட காலம் நிலைத்து நிலைபெற்று மலேசிய வாழ் இந்துப் பெருமக்களின் காவலனாக திகழ்வதுடன் இந்து சமய மறுமலர்ச்சிக்கும் ஆன்மீக மேம்பாட்டிற்கும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேவேளை மலேசிய இந்து சங்கம் நீடு வாழ்க என்று குமரி வாழ்த்துகிறாள்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை