
மலேசியத் திருநாட்டின் அடையாளமாக இரட்டைக் கோபுரத்தை அடுத்து பத்துமலை திருமுருகன் திருத்தல வளாகம்தான் அண்மைக் காலமாக உலக அளவில் அறியப்படுகிறது.
வளைகுடா நாடுகளில்கூட, சுற்றுலா நிறுவனங்களின் விளம்பரத் தகவலில் மலேசியாவின் அடையாளமாக பத்துமலை திருமுருகனின் திருவுருவச் சிலைதான் காண்பிக்கப்படுகிறது.
அத்தகைய பத்துமலைக்கு வருகைதரும் சுற்றுப் பயணியர் மற்றும் ஆன்மிக நோக்கத்திற்காக வரும் இறையன்பர்களில் முதியோருக்கும் 272 படிக்கட்டுகளில் ஏறமுடியாதவர்களுக்கும் உச்சியில் இருக்கும் அருள்மிகு வேலாயுத சன்னதியை அடைந்து நேரில் வணங்கவும் வழிபடவும் முடியவில்லையே என்னும் ஆதங்கம் ஏற்படுவதுண்டு.

திருப்பணிச்செம்மல் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தலைமையிலான கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் கோயில் தேவஸ்தான நிருவாகத்தினரும் இதை உணர்ந்துள்ளதால், அங்கு நகரும் படிக்கட்டைக்(Escalator) கட்டமைக்கும் முயற்சியல் நிண்ட காலமாக முனைந்துள்ளனர்.
கடந்த 2024, ஜனவரி மாதத்தில்கூட தைப்புசத் திருவிழாவிற்குமுன், இதுகுறித்த அறிவிப்பை நடராஜா வெளியிட்டார். 2024 தைப்பூச விழாவிற்குப்பின், இரு பெருந்திட்டங்கள் பத்துமலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன; அவற்றில் ஒன்று பந்நோக்கு மண்டபம்; அடுத்தது நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி என்று அறிவித்தார்
ஒரு வரத்திற்குமுன், கடந்த 19-ஆம் நாள், பல நோக்கு மண்டபமும் கலாச்சார மையமும் ஒருசேர தொடங்கிவைக்கப்பட்டன. பத்துமலை வளாக வரலாறு குறித்து டான்ஸ்ரீ நடராஜா இயற்றிய நூல் வெளியீடும் இவ்விழாவில் இடம்பெற்றது; தவிர, தேவஸ்தான அறங்காவலரும் டி.எஸ்.கே. சமூக நல அமைப்பின் தலைவருமான டத்தோ ந.சிவக்குமார் தலைமையில் திருமுறை, பரத நடனம், நாதசுவர-மத்தள இசை உள்ளிட்ட நால்வகை பயிற்சியை இலவசமாக அளிக்கும் திட்டமும் இந்த விழாவில் முறைப்படி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து, நகரும் படிக்கட்டை அமைப்பதற்கான தொடக்க விழா, இன்று ஜனவரி 25 சனிக்கிழமை இன்னும் சில மணி நேரத்தில் பத்துமலை வளாக முடி காணிக்கை நிலையத்திற்கு அருகில் நடைபெற இருக்கிறது.


