Tuesday, August 11, 2026

உள்நாட்டு திரைப்படம் இரும்புத் தோட்டம்! -ரசிகர்களின் ஆதரவு அமோகம்!!

15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட உள்நாட்டுத் திரைப்படமான ‘இரும்புத் தோட்டத்தை பெற்றோர், பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்.

சமூகத்தில் குறிப்பாக இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்தை பெரியவர்கள் சிறியவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர் அனைவரும் திரையரங்கிற்குச் சென்று பார்க்க வேண்டும் என படக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. இந்தக் கதை வெறும் திரைப்படக் கற்பனை அல்ல என்றும் தன் தோழிக்கு நேர்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயதேவ் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் இடம்பெறும் சிறுவர் மற்றும் இளையோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் மனநிலை, குடும்பத்தினருடன் அவர்கள் எதிர்கொள்ளும் தொடர்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ‘இரும்புத் தோட்டம்’ திரைப்படம் பேசுகிறது.

இத்திரைப்படம் குறித்து பலரும் நல்ல கருத்துகளைத் தெரிவித்து வருவதாகக் கூறிய தயாரிப்பாளர் ஜெகன் ஜோன் பீட்டர், ஏவிஎல்டி புரொடக்சன் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வருகை இல்லை என வருத்தம் தெரிவித்தார்.

படக் குழுவினர்

படத்தை பார்த்தவர்கள் திரைப்படம் நன்றாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இந்தப் படம் நம் சமுதாயத்தில் உண்மையாகவே நடைபெறும் ஒரு முக்கியமான பிரச்சினையை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்களும் பிள்ளைகளும் முன்வந்து இப்படத்தைப் பார்க்க வேண்டும்.

“ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்காமல், அதில் சொல்லப்படும் சமூகச் செய்தியையும் புரிந்துகொள்ள வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா, இத்திரைப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான செய்தியை முன்வைப்பதாகக் குறிப்பிட்டார்.

சமூகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் நடைபெற்று வரும் நிலையில், அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து திரைப்படமாக உருவாக்கிய படக்குழுவினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

“மனரீதியாக பாதிக்கப்படும் சில பிள்ளைகளால் தங்களுடைய பிரச்சினைகளை அப்பா, அம்மாவிடம் வெளிப்படையாகப் பேச முடியாமல் போகலாம். அந்த நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படும்போது, நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.

எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நெருக்கமாகப் பேச வேண்டும். பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக இருப்பது மிகவும் முக்கியம்,” என்றார்.

மேலும், இளைஞர்களின் மனநலம் மற்றும் குடும்ப உறவுகள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி சமூகத்தில் திறந்த உரையாடல் அவசியம் என சுரேன் கந்தா வலியுறுத்தினார்.

இளம் வயதினர் எதிர்கொள்ளும் மன அழுத்தம், பயம், தனிமை மற்றும் குடும்பத்தினரிடம் பிரச்சினைகளைப் பகிர முடியாத நிலை போன்றவை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இளைஞர்கள் எதிர்கொள்ளும் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பல துயரமான சம்பவங்கள் நேர்கின்றன.

அவற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது.

எனவே, பெற்றோர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுடன் எவ்வாறு பேச வேண்டும் என்பதை சிந்திப்பதற்கும் இந்தப் படம் ஒரு வாய்ப்பாக அமையும்,” என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய சுரேன் கந்தா, சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தரமான உள்ளூர் திரைப்படங்களை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“இதுபோன்ற நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து திரைப்படங்களை உருவாக்கும் குழுவினர்களுக்கு நாம் ஆதரவு வழங்கினால்தான், எதிர்காலத்திலும் தரமான உள்நாட்டு திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகும்.

சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லும் திரைப்படங்களுக்கு மக்கள் திரையரங்குகளுக்குச் சென்று ஆதரவு வழங்குவது அவசியம். குறிப்பாக, இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பேசும் படைப்புகளுக்கு நம் ஆதரவு இருக்க வேண்டும்,” என்றார்.

‘இரும்புத் தோட்டம்’ திரைப்படம், பொழுதுபோக்கைத் தாண்டி சமூகத்தில் நிலவும் ஒரு முக்கியமான பிரச்சினையைப் பற்றி சிந்திக்க வைக்கும் படைப்பாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் – பிள்ளைகள் இடையிலான உரையாடல், இளம் தலைமுறையினரின் மனநிலை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு மக்கள் திரையரங்குகளுக்குச் சென்று ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை