
பட்டர்வெர்த், பிப்ரவரி 02:
பொங்கல் விழா தமிழர்களின் பண்பாட்டு விழாவாக இருந்தபோதும், பல இனத்தினரும் பல சமயத்தைச் சார்ந்தவர்களும் உலகின் பல நாடுகளில் இந்த அறுவடைத் திருநாளை சிறப்பாகக் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல்
தமிழகத்துக்கு அடுத்ததாக, மலேசியாவின் பல நகரங்களில், கிராமங்களில், ஆலயங்களில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்த மாதம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சிகள் தமிழர்களின் பண்பாட்டுச் செழுமையையும் உறுதிப்படுத்துகிறது. தமிழர் சமூகத்துடன் அவ்விழா இணைந்திருப்பது மட்டுமின்றி, இன, மத பேதங்களை மீறி அனைவரும் ஒன்றாகக் கொண்டாடும் நிகழ்வாக இது உருவெடுத்துள்ளது.

பினாங்கு மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா
பினாங்கு மாநிலத்தில் மலேசிய திராவிடக் கழகம் (மதிக) மற்றும் தேசிய மதிக இணைந்து ஏற்பாடு செய்த தமிழர் புத்தாண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பட்டர்வெர்த் டத்தோ ஹாஜி அமாட் படாவி மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட குமரன் கிருஷ்ணன், விழாவை ஏற்பாடு செய்த மக்கள் ஓசை செய்தியாளர் குணாளன் மற்றும் செயலவை உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பண்பாடு அழியாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம்
“நாட்டில் நமது பண்பாடு நாளுக்குநாள் குறைந்துவரும் சூழ்நிலையில், கலாச்சார விழாக்களை தொடர்ந்து நடத்தி, இளைஞர் சமுதாயத்திற்குப் பண்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவது அவசியம். இந்த விழா வருங்கால தலைமுறையினருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். இவர்கள்தான் அடுத்த தலைமுறைக்கு இந்த பாரம்பரியத்தைக் கொண்டு செல்லும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும்,” என்று தமிழர் திருநாள் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஐபிஎப் கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவர் குமரேசன் உரையாற்றினார்.

பொங்கல் விழாவை சிறப்பாக நடத்திய பினாங்கு மாநில மதிக தலைமைத்துவத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த குமரேசன், “தமிழர் திருநாள் பொங்கல் விழா இல்லங்களில் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும். இது நம் பண்பாட்டின் அடையாளமாக இருக்க வேண்டும்,” என்றார்.
மறைந்த டத்தோ ச.த. அண்ணாமலை அவர்களின் நினைவில் தொடரும் விழா
மதிக தலைவர் ‘நினைவில் வாழும்’ டத்தோ அண்ணாமலை ஆண்டுதோறும் தன் குழுவினருடன் இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து வந்தார். அவரின் திடீர் மறைவுக்குப் பிறகும், செயலவையினர் உறுதியாக முன்னெடுத்து, இதனை சிறப்பாக நடத்தி வருவது தமிழர் பண்பாட்டின் வளர்ச்சிக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். “அவரின் இல்லாமையை நாம் உணருகிறோம். ஆனால், அவரின் கனவை வழிமொழிந்து, பொங்கல் திருவிழாவை சிறப்பாக நடத்தி வரும் குழுவினருக்கு நன்றி. இதனை மகிழ்ச்சியுடன் காண்கிறேன்,” என்று தொழிலதிபர் டத்தோ மரியதாஸ் கோபால் தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.
பொங்கல் விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்
இந்நிகழ்வில் மதிக பொதுச்செயலாளர் மணி வாசகம், துணைச் செயலாளர் நகேன், உதவி தலைவர் இளங்கோவன், கெடா மாநில முன்னாள் தலைவர் பாலன், பினாங்கு மாநில முன்னாள் செயலாளர் நாராயணன், பினாங்கு மாநில முன்னாள் தலைவர் தா. ராமன், கெடா மாநில முன்னாள் தலைவர் கதிரவன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.
விழாவில் பெண்கள் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து, பள்ளி மாணவர்களுக்காக சித்திரம் வரையும் போட்டியும் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிற்பகல் ஒரு மணிக்கு மதிய உணவுடன் விழா நிறைவு பெற்றது.
தமிழர் திருநாள் – ஒற்றுமையின் விழா
பொங்கல் விழா, தமிழர்களின் வாழ்வியலோடு நேரடியாக இணைந்த திருவிழாவாக இருந்து வந்துள்ளது. இது மலைநாட்டுத் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, தமிழ் பண்பாட்டை இளம் தலைமுறைக்குக் கற்பிக்க சிறந்த வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இந்த விழாவைப் போல, எதிர்காலத்திலும் தமிழர்கள் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை சிறப்பாக கொண்டாட, புதிய தலைமுறை முன்வர வேண்டும் என அனைத்து தலைவர்களும் மனமாரக் கேட்டுக்கொண்டனர்.


