ஓரு நெடும்படம் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை, அதுவும் மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்டுள்ள இன்றைய ஆலய-சமய சிக்கலை எடுத்துக் காட்டும் விதமாக இந்தப் படம் அமைந்தது.

ஏப்ரல் 20-ஆம் நாள் பெட்டாலிங் ஜெயா, LFS PJ ஸ்டேட் திரையரங்கில் 180 பேர் கண்டுகளித்த வீரா குறும்படம், ஒரு சராசரி கலைப் படப்பல்ல; மாற்றத்தை ஏற்படுத்தவும் மலேசிய இந்தியர்கள் எதிர்கொண்டுள்ள சமூக-சமய சிக்கலுக்கு தீர்வுகூறும் வகையிலும் அமைந்ததுதான் வீரா திரைப்படம்.
வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படும் சிக்கலை எடுத்துரைக்கும் வீரா, மலேசியத் தமிழர்களின் உரிமை, கலாச்சாரம் மற்றும் சமுதாய ஒற்றுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒரு கிராம மக்களின் எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் ஒருமுகப்படுத்தும் ஒரு வீரரை மையமாகக் கொண்டதாக, இந்தக் குறும்படத்தைத் தயாரித்துள்ளனர்; இதில், படத் தயாரிப்புக் குழுவினர் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இந்தக் கதையின் மையக் கதாபாத்திர வீரராக நடிக்கும் க்ளிப்ஷாட் நேஷ், 2017 முதல் IBP ஸ்டூடியோவில் இயக்குநராகவும் படைப்பாளியாகவும் பணி செய்து வருகிறார். இதற்குமுன் முடிவு, இறுதி அவதாரம், அடியே, பாசம் போன்ற பல படைப்புகளில் நடித்துள்ள நேஷின் கலை வெளிப்பாட்டில், உணர்வும் உண்மையும் கலந்துள்ளது.
இக்குறும்படத்தை இயக்கிய டாக்டர் எட்வின் ஆனந்த் என்னும் Coruz Hooks, IBP ஸ்டூடியோஸின் நிறுவனர். இவர் தமிழ், மலாய் மற்றும் ஆங்கிலத்தில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இசையும் அமைத்துள்ளார். வீரா திரைப்படத்தின் இசையை இவர், மைக்கேல் கிறிஸ் என்பவருடன் இணைந்து அமைத்துள்ளார்.

இந்தக் குறும்பட வெளியீட்டில், மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. தலைவரும் மலேசிய அரசியல் சரித்திர சாதனை இயக்கம்-ஹிண்ட்ராஃப் அமைப்பின் நிறுவனத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி கலந்து கொண்டது, மிகவும் முத்தாய்ப்பான அம்சமாக அமைந்தது.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணியின் மூலமும் முதலுமான பொன். வேதமூர்த்தி மனித உரிமைப் போராளியாகவும் சட்டவியலாளராகவும் உலகளவில் அறியப்பட்டவர். மலேசிய இந்தியர்களின் அரசியல் உரிமை, கோயில் இடிப்பு, நில உரிமை பிரச்சனை குறித்தெல்லாம் உரிமைக்குரல் எழுப்பி, தேசிய – பன்னாட்டு கவனத்தை ஈர்த்த இவர், வீரா குறும்படம் முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட திரை அரங்கில் உரை நிகழ்த்தினர்.

குறும்படத்தைக் காண வந்தவர்கள், படம் முடிந்தவுடன் கலந்து செல்வதற்குப் பதிலாக பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்களைப் போல அரங்கிலேயே அமர்ந்திருந்தனர்.
படத்தைக் காண வந்தவர்கள், கலை இரசிகர்கள் மட்டுமல்ல; சமூக விழிப்புணர்வும் நிறைந்தவர்கர்களாக இருந்தனர்.
அவர்களிடையே பேசிய பொன்.வேதமூர்த்தி, இன்று நாட்டில் நடப்பதை இரத்தின சுறுக்கமாக காட்சிப் படுத்திய குறும்படமாக வீரா அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
68 ஆண்டு சுதந்திர மலேசியாவில் இந்தியரின் நிலையை ஏறக்குறைய 9 நிமிடங்களில் எடுத்துக்காட்டிய கருத்துச் செறிவுமிக்க குறும்படம் வீரா என்று குறிப்பிட்டதுடன், இதில் நடித்தவர்கள், பாடல் எழுதி இசை அமைத்தவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் பாராட்டினார்.

நிலலிங்கேஸ், தர்மேந்திரன் உள்ளிட்ட 39க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து உயிரோட்டமும் உணர்ச்சியும் உரிமை முழக்கமும் கலந்த கலைவெளியீடாக வீராவைப் படைத்துள்ளனர் என்று பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.
மலேசிய இந்திய சமூகத்தின் மறைக்கப்பட்ட சம்பவங்களை வெளிக் கொணர்ந்து, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் IBP ஸ்டூடியோஸ் மேலாண்மை இயக்குநர் ஜெரிதரன் சுப்பிரமணியம்-குழுவினர், Clipshot Nesh Production தலைவர்-பொறுப்பாளர்களை வெகுவாகப் பாராட்டிய பொன்.வேதமூர்த்தி, வீரா என்பது ஒரு திரைக்கதை மட்டுமல்ல; இது ஓர் உண்மையின் பிரதிபலிப்பு; ஒரு நீதியின் குரல் என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்தக் கலைப்படைப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொன்.வேதமூர்த்தி விருது வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியை செல்வி யோக தர்ஷினி ரெங்கநாதன் சிறப்பாக வழிநடத்தினார்.

எல்லாவற்றினும் மேலான சிறப்பு இந்த வீரா குறும்படத்திற்கு உண்டு. செய்யறிவு-AI தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் குறும்படம் இது!


