
தமிழ்த் தாயின் தவப் பாவலராம் பாவேந்தர் பாரதிதாசன், 1891-ஆம் ஆண்டில் புதுவையில் கனகசுப்புரத்தினம் என்ற இயற்பெயருடன் இதேநாளில் தோன்றினார்.
பத்து வயதிலேயே பா புனையும் அளவிற்கு பிறவித்திரு வாய்க்கப்பெற்ற பாவேந்தர், பங்காரு, பு.அ.பெரியசாமி ஆகிய தமிழ் வித்தகர்களிடம் பழந்தமிழ் இலக்கியக் கூறு, இலக்கண மேன்மை, ஆன்மிக சிந்தனை, பிரெஞ்சு மொழி ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.
ஆன்மிக வழியில் வாழ்வைத் தொடங்கி, பின்னாளில் தமிழ் இனப் பற்றும் மொழிப்பற்றும் மிக்க சுயமரியாதைச் சுடரொளியாக தமிழ் இலக்கிய வட்டத்தில் திகழ்ந்தார்.

17 வயதிலேயே ஆசியரியர் பணியேற்ற இக்கவிக்கோமன், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கமுக்கமாக ஈடுபட்டுக் கொண்டே ஏறக்குறைய 40 ஆண்டுகள் அப்பணியில் நீடித்தார். மாணவர்களுக்கு ஆசிரியராக திகழ்ந்த-துடன் தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசமித்திரன், புதுவை முரசு, குயில் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
பாரதியார், வவேசு, அரவிந்தர் உள்ளிட்ட எண்ணற்ற விடுதலை வீரர்கள் ஆங்கிலேயர்களின் காவலில் இருந்து தப்ப உதவியதோடு, அவர்களுக்கு அடைக்கலமும் அளித்து வந்தார் பாரதிதாசன்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சமதரும பாங்குடன் நடந்து கொண்ட திருநெல்வேலி ஆட்சியாளர் ஆஷ் துரையை, பார்ப்பன சாதி வெறியால் சுட்டுக்கொன்ற கொன்ற சுப்பையனுக்கு பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டிருந்த புதுவையில் இருந்து துப்பாக்கி அனுப்பி வைத்த தவற்றையும் செய்தவர் இவர்; பிராமண மேலதிகத்தை உணராமல் பாவேந்தர் வாழ்ந்த காலம் அது;
தவிர, ஆஷ் கொலை வழக்கில் தொடர்பு படுத்தப்பட்ட மாடசாமி, புதுச்சேரிக்கு வந்தபோது காவல்துறையினருக்குத் தெரியாமல் அவரை கட்டுமரத்தில் ஏற்றி நடுக்கடல்வரை துணிவுடன் கொண்டுசென்று வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த சமுக-நாட்டுப் பற்றாளர் பாவேந்தர்.

பாரதியார், இந்தியா என்னும் பத்திரிகையில் பணி புரிந்தாலும் இந்தியா என்பதைவிட பாரதம் என முழங்குவதிலும் எழுதுவதிலும் முனைப்பு காட்டினார். இவரைப் போலவே, தீவிரப் போக்குடைய பால கங்காதர திலகரும் இந்தியா என்பதைவிட பாரதம் என்பதில் அதிக முனைப்பு காட்டினர்.
அவர்களைப் போலவே, புரட்சி மனப்பான்மை கொண்ட கனக சுப்புரத்தினத்திற்கும் பாரதம் என்னும் கருத்தாக்கத்தின்பால் பற்று எழுந்து பாரதியாரை ஒற்றி பாரதிதாசன் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.
பெரும்பாவலர், நூலாசிரியர், நூல் பதிப்பாளர், சுதந்திரப் போராளி, பள்ளி ஆசிரியர், விரிவுரையாளர், திரைப்பட பாடலாசிரியர், இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் என்றெல்லாம் உயர்ந்த நிலையில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசனார், தமிழ் மறுமலர்ச்சிக்காக திரைப்படத் துறையை வகையாகப் பயன்படுத்திக் கொண்டார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத் தயாரிப்பு என அனைத்து தலங்களிலும் முத்திரைப் பதித்த பாவேந்தர் உருவாக்கிய சங்கே முழங்கு என்னும் பாடலை எத்தனை முறை கேட்டாலும் உள்ளம் சிலிர்க்கும்; உடல் முறுக்கேறும்.
தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது; பாடப் புத்தகங்களில் ‘அ அணில்’ என்று இருந்ததை ‘அ அம்மா’ என்று மாற்றியவர்.
பல்வேறு புனைப்பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதைத் தொகுப்பு, கதைகளை எழுதிவந்தார்.
‘இலக்கியக் கோலங்கள்’, ‘இளைஞர் இலக்கியம்’, ‘குடும்ப விளக்கு’, ‘பாண்டியன் பரிசு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘குமரகுருபரர்’ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள் ஆகும்.
நகைச்சுவை உணர்வு மிக்க பாவேந்தர், இசை ஞானம் மிக்கவர்; நன்கு பாடுபவர் என்பதெல்லாம் பலரும் அறியாதது. உடல் நலத்தைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்த பாரதிதாசனார் சிலம்பம், குத்துச்சண்டை, குஸ்தி போன்ற தற்காப்புக் கலைகளையும் அறிந்திருந்தார்.
இவர், பாண்டிச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954-ல் தேர்ந்தெடுக்கப் பட்டார். பாவேந்தர் சமைத்த ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது 1969-ல் இவரது கிடைத்தது. ஆனால், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே 1964 ஏப்ரல் 21-ம் நாலில் பாரதிதாசனார் தன் 73-வது வயதில் மறைந்து விட்டார்.
தமிழர்களிடையே புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்றெல்லாம் கொண்டாடப்படும் பாரதிதாசன் 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியாப் படைப்பாளிகளில் ஒருவர். தமிழ் இலக்கிய உலகில் அவரின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்.
தமிழ் இனத்தின் விடிவெள்ளிப் பாவலராகத் திகழ்ந்த பாவேந்தருக்கு இன்று 134-ஆவது பிறந்தநாள். தந்தை பெரியாரால் புரட்சிக் கவி என்றும் பேரறிஞர் அண்ணாவால் பாவேந்தர் என்றும் புகழ் சூட்டப்பட்ட பெரும்பாவலர் பாரதிதாசனார்.
மனம் என்னும் அடுப்பு எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நூற்றாவதானி செய்குத் தம்பி பாவலர் சொன்னதைப் போல, குமுறும் எரிமலையைப் போன்ற மனதை கொண்டிருந்த பாவேந்தரின் தமிழ் இன உணர்வும் தமிழ் மொழி மீட்சி உணர்ச்சியும் கவிதை அருவியாகக் கொட்டின.
தமிழர்களை, தமிழென்னும் ஒற்றைக் கயிறு மட்டுமே பிணைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தெள்ளென வெளிப்படுத்திய பாவேந்தர் சாதி மதம் கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் செம்மாந்து திகழ்ந்தார்.
வாழ்க தமிழ்! வளர்க பாவேந்த புகழ்!!


