
கோலாலம்பூர் மே 9-
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள உலோக பொருள் மறுசுழற்சி வியாபாரம் செய்யும் உரிமையாளர்கள் மடானி அரசாங்கம் அனுமதி வழங்கி இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் தெரிவித்தார்.
குடி நுழைவு துறைக்கான அந்நியத் தொழிலாளர்கள் பிரிவு இயக்குநர் அயோப் பின் அப்துல் ரஹ்மான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பல துறைகளில் அந்நியத் தொழிலாளர்கள வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாவலர், தொழிற்சாலைகள், விவசாயம், சலவை கடை, உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொது சேவை துறையில் லைசென்ஸுடன் உலோக பொருள் மறுசுழற்சி செய்யும் வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் போராடி வருகிறோம்.
வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் இந்திய உலோக பொருள் மறுசுழற்சி வியாபாரிகள் பலர் பெரும் கஷ்டங்களை அனுபவித்தனர்.
15 ஆண்டுகளாக நாங்கள் நடத்திய போராட்டத்திற்கு இன்று ஒரு நல்ல விடிவுகாலம் பிறந்துள்ளது.
அந்த தருணத்தில் மடானி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சீம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மிம்தா தலைவர் டத்தோஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி காலம் தொட்டு இன்றுவரை என்னுடன் தோள் கொடுத்து இணைந்து பணியாற்றிய சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ பார்த்தீபன், உதவித் தலைவர் டத்தோஸ்ரீ தமிழ் செல்வம், செயலாளர் முத்தப்பன், பொருளாளர் பன்னீர் உட்பட அனைத்து உச்சமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் சங்கத்தின் உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் தெரிவித்தார்.


