
கோலாலம்பூர் — டிசம்பர் 12 – ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழ் (UEC)க்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற தனது வலுவான நிலைப்பாட்டை பிபிபி இளைஞர் பிரிவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
UEC தேசிய ஒற்றுமைக்கு அல்லது கல்வித் தரத்திற்கு அச்சுறுத்தல் அல்ல, மாறாக மலேசியாவின் பன்முக கல்வி அமைப்பை புரிந்து கொள்ளவும் மதிக்கவும் உதவும் என பிபிபி தேசிய இளைஞர் தலைவர் சத்தியா சுதாகரன் கூறினார்.
பல துறைகளில் நாட்டிற்கு பங்களித்து வரும் UEC பட்டதாரிகள், மலேசியாவின் பல்துறை வலுவை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.
பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் சமத்துவமான கல்வி வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார். அதனை அடிப்படையாகக் கொண்டு, UEC அங்கீகாரம் என்பது நியாயம் மற்றும் இணக்கத்தை உறுதி செய்யும் நடவடிக்கையாக பிபிபி இளைஞர் பிரிவு கருதுகிறது.
சபா மற்றும் சரவாக் ஏற்கனவே UECயை அங்கீகரித்து வருவது கூட்டாட்சி அரசுக்கு ஒரு வெற்றிகரமான எடுத்துக்காட்டாக உள்ளது.
UEC உலகின் பல முன்னணி பல்கலைக் கழகங்களால் ஏற்கப்பட்டுள்ள நிலையில், மலேசியா மேலும் தாமதிக்கக் கூடாது என பிபிபி இளைஞர் பிரிவு எச்சரித்துள்ளது.
அரசியலாக்கத்தைத் தவிர்த்து, கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் அரசு துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் என்று சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.


