
அரச வானொலி தொலைக்காட்சி நிறுவனமான ஆர்டிஎம் (RTM-Radio TV Malaysia)-இன் தமிழ் வானொலியான மின்னல் பண்பலையின் பாரம்பரிய நிகிழ்ச்சியான ‘அமுதே தமிழே’ இலக்கிய நிகழ்ச்சி இன்று இடம் பெறவில்லை.
நினைவு தெரிந்த நாள் முதல் ஞாயிறுதோறும் இடம்பெற்று வந்த இந்த வாராந்திர முக்கால் மணி நேர நிகழ்ச்சி, தமிழின் முன்னைச் சிறப்பையும் இன்றைய நிலையையும் எடுத்தியம்பும் நிகழ்ச்சியாக அமைந்து வந்தது.
தமிழியப் பாங்கு மிளிரும் இந்த அமுதே தமிழே இலக்கிய நிகழ்ச்சி, யாருடைய தலைமையில் எப்பொழுது தொடங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

மேனாள் நிருவாகி பாவலர் முனைவர் வி பூபாலனின் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை-களில் காலை 10:00 மணி செய்திக்குப் பின், பூச்சரம் என்னும் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.
மின்னல் பண்பலை வானொலி, ‘வானொலி-6” என்னும் பெயரில் அழைக்கப்பட்ட அந்நாட்களில் அறிவிப்பாளராக இருந்த திருமதி சந்திரா சூர்யா, வாரந்தோறும் பூபாலன் இயற்றுகின்ற கவிதையுடன் தன் பங்கிற்கு சில இலக்கிய நிகழ்ச்சி-தகவலை எல்லாம் இணைத்து தொகுத்து வழங்கி வந்த அப்பூச்சர நிகழ்ச்சிதான் இக்காலத்து அமுதே தமிழே நிகழ்ச்சிக்கு தோற்றுவாயாக அமைந்ததாகத் தெரிகிறது.

எது எவ்வாறாக இருந்த பொழுதிலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் அமுதே தமிழே என்ற நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இடம் பெற்று விட்ட இக்காலத்தில் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம் அல்லது இடம்பெறாதத் தகவலை, வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடப்பாட்டிலிருந்து மின்னல் பண்பலை வானொலியின் இன்றைய நிர்வாகத் தரப்பு வழுவி இருக்கிறது
தமிழ் – திராவிட மொழிக் குடும்பங்களின் தாயான தமிழ், தாய் மொழியை உயிரணைய நிலையில் கருதும் சீனர்களின் தாய்மொழியான சீனம், முன்னை ஐரோப்பிய மண்டலத்தின் இலக்கிய செழுமை மிக்க இலத்தீன், ஹீப்ரு, ஆட்சி மொழியாகவும் பண்பாட்டு மொழியாகவும் விளங்கிய கிரேக்கம், ஐரோப்பிய- இந்தோ குடும்ப மொழிகளான சமஸ்கிருதம், பாரசீகம், இன்னும் அரபு உள்ளிட்ட எண்ணற்ற மொழிகள் செம்மொழித் தகுதியை பெற்றவை.

இவற்றில் கிரேக்கம் சமஸ்கிருதம் போன்றவை அந்தந்த மக்களாலேயே கைவிடப்பட்டு வழக்கொழிந்து விட்டன.
இந்தியாவை தற்பொழுது ஆளுகின்ற பிராமணர்களின் ஆட்சி செத்துவிட்ட சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்க முயற்சி செய்கின்றது.
பண்ணையாரை விட அடியாள்தான் மிகவும் துள்ளி குதிப்பான்; அதைப்போல பிராமணர்களை விட பிராமணர்களின் அடிமைகளான ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்கள்தான் இதன் தொடர்பில் அதிகமாக துள்ளிக் குதிக்கின்றனர்;
ஹிட்லர், முசோலினி, வின்ஸ்டன் சர்ச்சில் போன்றவர்களின் ஆட்சியையேப் பார்த்துவிட்ட உலகம், இதுகளையும் பார்க்கத்தான் போகிறது!
மலேசியாவில் இரண்டு மொழிகள் செம்மொழி தகுதியுடன் மக்களின் வழக்கு மொழியாக இருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரியது தான். அவற்றில் ஒன்றான தமிழின் பெருமையை ஓரளவேணும் பறைசாற்றும் வகையில் தொடர்ந்து வந்த இந்த பாரம்பரிய நிகழ்ச்சி இடம்பெறாமல் போனது மிகவும் வருத்தத்திற்குரியது.
விசாரித்துப் பார்த்ததில், ‘திருவள்ளுவர் ஆண்டு 2057 தொடங்குகின்ற தை முதல் நாள் வரை ஒத்தி வைத்திருக்கிறார்களாம்’.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் சமயம் கலவாத சமயத்திற்கு இடமில்லாத ஒரே பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளான தை முதல் நாள் முதல் மின்னல் பண்பலை வானொலியில் பாரிய அளவில் மாற்றம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
நிகழ்ச்சிகளின் பெயர்களையும் மாற்றி அமைப்பதாக அதன் அறிவிப்பாளர்கள் அண்மை நாட்களாக சொல்லி வருகின்றனர்.
தற்போதைய மின்னல் பண்பலை வானொலியில் காலை 6:30 முதல் 10:00 மணி வரை ஒலிபரப்பாகும் காலைக் கதிர் என்னும் மூன்றரை மணி நேர நிகழ்ச்சி பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது; அன்றாட புத்தம் புது தகவலை நேயர்களுக்கு சொல்வதுடன் அரசியல், சமூகம், கல்வி, பொருளியல், வர்த்தகம், தொழில்நுட்பம் சார்ந்த புதுப்புது செய்தியை பொதுமக்களுக்கு அறிவிப்பதுடன் சம்பந்தப்பட்ட வல்லுனர்களை நேரில் அழைத்து செவ்வி கண்டு ஒலிபரப்புவதன் மூலம் ஒரு தகவல் களஞ்சியத்தைப் போல திகழ்கின்ற காலைக் கதிர் நிகழ்ச்சிக்கும் புது சட்டை அணிவிக்க இருக்கின்றனராம்.
மொத்தத்தில் எல்லா நிகழ்ச்சிகளையும் கொட்டி கலைத்து புதிதாக வரிசைப்படுத்திக் கொண்டு புதிதாக பெயரையும் சூட்டிக்கொண்டிருப்பதாக தகவல் தெரிகிறது.
தவிர ஆண்டின் தொடக்கக் கட்டம் என்பதால் அவர்களுக்கான நிதி நிர்வாக அடிப்படை-யிலும் சில சிக்கல் இருப்பதால் அமுதே தமிழே நிகழ்ச்சியையும் தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

சு ரோகினிக்குப் பிறகு தலைமை ஏற்றுள்ள சு. குமரன் மின்னல் பண்பலை வானொலியை இரண்டாவது முறையாக வழிநடத்தி வருகிறார்.
இவருடைய முயற்சியும் மாற்றமும் சிறந்து விளங்கவும் மலேசியத் தமிழ் நேயர்களுக்கும் மலையாள-தெலுங்கு-ஹிந்தி நேயர்களுக்கும் இன்னும் மகிழ்ச்சியை விளைவித்தால் நமக்கும் மகிழ்ச்சிதான்.
எது எப்படி இருந்தாலும் அமுதே தமிழே இலக்கிய நிகழ்ச்சியை மட்டும் ரோகிணி காலத்தில் இருந்ததைப் போல சமயக் கலப்பு அறவே இல்லாமல் தமிழின் மேன்மையை மட்டும் எடுத்துச் சொல்கின்ற நிகழ்ச்சியாக இருந்தால், அது நல்லது; இன்னும் நல்லது!

மின்னல் பண்பலை வானொலியின் அறிவிப்பாளர் ‘புவீ’ என்னும் புவனா வீரமோகனைவிட அமுதே தமிழே இலக்கிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர் புவீ’யைத்தான் மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில் தை முதல் நாளுக்குப் பின் மீண்டும் ஒலியேறவிருக்கும் அமுதே தமிழே நிகழ்ச்சியை இதுவரை படைத்து வந்த புவனா வீரமோகனே தொடர இருக்கிறாரா அல்லது நிகழ்ச்சித் தயாரிப்பாளரிலும் மாற்றம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
காத்திருப்போம் தை முதல் நாள் வரை! விளைந்த கத்திரிக்காய் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்!!
செய்தி: அகரன்


